Jan 28, 2011

பாட்டிக்கு ஒரு பாட்டு - ஆபாயில் (அப்புடியே சாப்பிடுங்க)

ந்த வாரம் நண்பர் ஒருவர் திருமண அழைப்பிதழ் கொடுக்க எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். முன்பு எங்களோடு தான் தங்கி வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது நாங்கள் வெளியே சாப்பிட சென்றாலோ அல்லது ஒன்றாக சினிமாவிற்கு சென்றாலோ முடிந்த அளவிற்கு மற்றவர்கள் தலையிலே மொய் எழுதும் திறமை நன்கு வாய்த்தவர். எனவே மீண்டும் அவருடைய திருமணதிற்கு வந்து கடைசியாக ஒருமுறை மொய் எழுத சொல்லி என்னை வலுக் கட்டாயப் படுத்தினார். எனக்கு அலுவலகத்தில் வேலை அதிகம் உள்ளது என்று சொல்லி தப்பிக்க பார்த்தேன். "அதெல்லாம் முடியாது. நீதான் எனக்கு தாலி எடுத்து கொடுக்கணும்" என்று பாசத்தில் திணற வைத்தார். அப்போது என்னை அறியாமல் "புதுப்பேட்டை" படத்தின் காட்சி என் மனதில் பிளாஷ் ஆகி போனது. ஏனென்றால், அவருக்கு வரப்போகும் பெண் மிகவும் அழகானவங்க.



திரைத்துறையில் நிறைய மனிதர்கள் திறமை அதிகம் இருந்தும் அதிர்ஷ்டம் இல்லாமல் அல்லல் பட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் ஒன்றை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். கலைஞர் தாத்தா உயிரோடு இருக்கிறவரை கொஞ்சம் பொறுமையாய் இருங்கள். இல்லையென்றால் வாலியாய் இருந்தாலும் வைரமுத்துவாய் இருந்தாலும் அவர் வசனம் எழுதும் படங்களைப் பார்த்து "அருமையான படம். பா. விஜய் சிறப்பாய் நடித்திருக்கிறார்." என்று சிரிப்பை அடக்கி கொண்டு மைக்கின் முன்னால் பேச வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாக வேண்டிவரும். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்பது எவ்வளவு உண்மையானது என்று உணருங்கள்.

குடியரசு நாளன்று மனம் மிகவும் மந்தமாய் தோன்றியது. சிறுவயதில் பள்ளிக்கூடம் செல்கையில் குடியரசு தினத்தன்று மிட்டாயும் பொரியும் கொடுப்பார்கள். இப்போது கணிப்பொறி மட்டுமே கையில். இப்போதெல்லாம் குடியரசு தினம், சுதந்திர தினம் எதுவாய் இருந்தாலும் "Its just another Saturday or Sunday". சரி, எப்படிதான் இன்றைய பொழுதை கழிப்பது என்று வெளியே சென்று வீட்டிற்க்கு அருகில் உள்ள பேக்கரியில் டீ குடித்து கொண்டே தீவிரமாய் சிந்தித்தேன். அப்போது அந்த பேக்கரியில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் போக்கிரி படம் ஓடிகொண்டிருந்தது. ஒருதடவை முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன் என்று ஹீரோ பன்ச் விட்டு கொண்டிருக்க உடனே கடைக்காரர் தன் முடிவை மாற்றி ரிமோட் எடுத்து சேனலை மாற்ற "ராஜ் உலக தொலைக்காட்சி" சேனலில் ரோஜா படத்தை நூற்றி எட்டாவது முறையாக வாங்கியதிற்கு வஞ்சகம் இல்லாமல் ஒளிபரப்பி கொண்டிருந்தார்கள்.

மறுபடியும் கடைக்காரர் சேனலை மாற்ற "இசைஅருவி"யில் இரண்டு இளைஞர்கள் தங்கள் புஜபலத்தை காண்பித்து கொண்டிருந்தார்கள். மூன் (Moon) மியூசிக்கில் ஒரு பெண் "Peace Girl" என்ற வாசகம் கொண்ட ஒரு டீ-சர்ட்டினை அணிந்து கொண்டு "உங்க வீட்டு டிவி சவுண்ட கொஞ்சம் குறைங்க" என்று கால் செய்த நேயரிடம் கத்தி குரைத்துக் கொண்டிருந்தாள். அப்போதுதான் அந்த ஐடியா சட்டென்று உதித்தது. உடனே என்னுடைய செல்போனை எடுத்து அந்த நிகழ்ச்சியின் எண்ணுக்கு கால் செய்தேன். சிறிது  நேரத்திற்கு பிறகு தொடர்பு கிடைத்தது.

"ஹலோ யாரு பேசறிங்க?"
"ஹலோ மேடம் எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா?"
"இம் சூப்பரா இருக்கேன். வெயிட் பண்ணுங்க. நாம இதுக்கு முன்னாடியே பேசி இருக்கோம். கரெக்டா?"
"இல்ல மேடம்."
"! அப்படியா சரி நீங்க என்ன பண்றீங்க?"
"நான் மெரீனா பீச்சுல சுண்டல் வித்துகிட்டு இருக்கேன் மேடம். போன வாரம் கூட யாரோ ஒரு அண்ணன் கூட நீங்க பீச்சுக்கு வந்து என்கிட்ட தான் சுண்டல் வாங்கி சாப்டீங்க. அப்ப உங்களுக்கு சுண்டல் வாங்கி கொடுத்த அந்த அண்ணன் தான் என்கிட்ட பேசுனாரு நீங்க பேசல"
"சரி சரி மன்னிச்சிருங்க. அடுத்த தடவை யாருகூட பீச்சுக்கு வந்தாலும் உங்கள பார்த்து பேசுறேன். சரியா?"
"ஓகே மேடம்."
"இந்த நிகழ்ச்சிய உங்க குடும்பத்துல எல்லோரும் விரும்பி பார்ப்பிங்களா?"
"ஆமா மேடம். உங்க நிகழ்ச்சின்னா ரொம்ப இஷ்டம். அதுவும் எங்க அப்பாவுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். தினமும் உங்க சேனலை பார்க்கலைனா எனக்கு தூக்கமே வராது."
"ரொம்ப சந்தோசம். அந்த அளவுக்கு பிடிக்குமா?"
"ஆமா மேடம். தினமும் ராத்திரி தூக்கம் வரலைனா உங்க சேனலை தான் பார்ப்பேன். சூப்பர் சூப்பரா இளையராஜா பாட்டு போடுவாங்க. அதை கேட்டு அப்புடியே தூங்கிடுவேன்."
"சரி, உங்களுக்கு என்ன பாட்டு வேணும்?"
"எனக்கு இளைஞன் படத்துல இருந்து 'இமைதூதனே' பாட்டு போடுங்க மேடம். இந்த பாட்டை செத்து போன எங்க பாட்டிக்காக டெடிகேட் பண்ணுறேன் மேடம்."
"இனி உங்க பாட்டிக்கான பாட்டு வருது கேளுங்க. நிகழ்ச்சிய தொடர்ந்து பாருங்க."



அப்புறம் அந்த நாள் மிக இனிமையாக கழிந்தது.


4 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஹலோ யாரு பேசறிங்க?"
"ஹலோ மேடம் எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா?"
"இம் சூப்பரா இருக்கேன். வெயிட் பண்ணுங்க. நாம இதுக்கு முன்னாடியே பேசி இருக்கோம். கரெக்டா?"
"இல்ல மேடம்."
"ஒ! அப்படியா சரி நீங்க என்ன பண்றீங்க?"///

உங்க டிவி வால்யூமை கம்மி பண்ணுங்க
ங் கொய்யால நான் டி கடைல இருக்கேன். வால்யூமை கம்மி பண்ணினா டி கடைக்காரன் பின்னிடுவாரு

ஞாஞளஙலாழன் said...

பின்னிட்டீங்க. அருமை.

அமுதா கிருஷ்ணா said...

super..

தமிழ்த்தோட்டம் said...

கலக்குறீங்க