ஒரு பேஷனுக்காக சே.குவேராவின் டீ சர்ட்டுகளை அதிகம் அணிந்து இளைஞர்கள், போராளியான அவரை ஒரு பேஷன் மாடலாகவே மாற்றிவிட்டார்கள். துரைப்பாக்கம் டோல் கேட் அருகில் உள்ள ஒரு துணிக்கடைக்கு பெயரே "சே பேஷன்ஸ்". கம்பீரமாய் பேனரில் புகை விட்டுக் கொண்டிருக்கிறார் சே.
சே பெயரில் ஒரு சலூன் ஆரம்பித்தாலும், இளைஞர்களிடையே அமோக வரவேற்பு இருக்கும் என்று கருதுகிறேன்.
'சே' யை கூகுளில் தேடினால், அவர் புகை பிடிக்கும் போட்டோ தான் அதிகம் வருகிறது. அவரது 'தம்' நண்பர் பிடல் காஸ்ட்ரோவும் அப்படி தான். இவர்கள் இருவரும் அதிகம் புரட்சி செய்தார்களா? இல்லை புகைப்பிடித்தார்களா? எனும் அளவுக்கு நமக்கு சந்தேகம் வருகிறது.
ஸ்டைலாக புகைப்பிடிப்பது போல் இருக்கும் இவரது போட்டோ, தமிழக இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருக்கும் என்பதால், இந்த டீசர்ட்டுகளை எதிர்த்து "ராமதாஸ் அன்ட் சன்ஸ்" கம்பெனி அறிக்கை விட முன் வர வேண்டும்.
சே குவேராவின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் அட்டை படத்தில், புகை பிடிப்பது போல இருக்கும் அவரது படத்துக்கு கீழே சிறிய எழுத்தில் "புகைப் பிடிப்பது, புற்று நோயை உண்டாக்கும் " என்று போடவும் தமிழக அரசு ஆணை இட வேண்டும். செயின் ஸ்மோக்கர்கள் புத்தகம் படிக்க மாட்டார்களா?
இங்கு, சமீபத்தில் இலக்கிய உலகில் நடந்த "அட்டைப்பட" சர்ச்சையை முன் வைக்கிறேன்.
என்னை பொறுத்த வரை புத்தகத்தின் அட்டைப்படம், அதன் கருத்தாக்கத்தை வெளிப்படுத்த வேண்டும்
புகை பிடிப்பதற்கும், புரட்சிக்கும் என்ன சம்பந்தம்?
அது படிக்க போகும் வாசகனை திசை திருப்பாதா?
சே-வின் கையில் இருக்கும் சுருட்டை எடுத்து விட்டு, ஒரு உடை வாளையோ, குறுந்துப்பாக்கியையோ(Short Gun) கொடுப்பது தானே பொருத்தமாகும். இல்லையெனில் புரட்சி தலைவர் விஜயகாந்தைப் போல சே-வின் கண்ணை சிவக்கவாவது வைக்க வேண்டும். அட்டையை பார்க்கும் போதே, புரட்சி உணர்வு தூண்டப் பட வேண்டும்.
பள்ளிக்கூடம் படிக்கையில், எனக்கு அடுத்த வகுப்பில் படிக்கும் எனது சகோதரியின் பாட புத்தகத்தையே ஒவ்வொரு வருடமும் பயன்படுத்த நேரிடும். பெரும்பாலும் அட்டையே இருக்காது. சில முறை, பொருளடக்கமும். அதனால் அறிவியல் தேர்வுக்கு, வரலாற்று புத்தகத்தை எடுத்து சென்று பெயிலான துயர வரலாற்றுச் சம்பவங்கள் என் வாழ்வில் நடந்துள்ளன.
அதனால் தான் சொல்கிறேன், அட்டைப்படம் முக்கியம். அட்டை அதை விட முக்கியம்.
No comments:
Post a Comment