Feb 18, 2011

வடை, பக்கோடா, போண்டா - மினி ஆபாயில் (அப்புடியே சாப்பிடுங்க)

வடை, பக்கோடா, போண்டா இந்த மூன்றிற்கும் என்ன சம்பந்தம் இருக்கு? படியுங்கள், விடை கடைசியில்.


ன்கூட தங்கி இருக்கும் வினோத் என்ற பிரெண்டுக்கும் எங்கள் அபார்ட்மெண்டு ஆண்டிகளுக்கும் "ரொம்ப நாளாக பழக்கம்" இருக்கு. எப்படி என்றால், இவன் தினமும் மெகா சீரியல் பார்க்கும் வழக்கம் கொண்டவன். கலைஞர் டிவி, ஜெயா டிவி என்ற பாகுபாடு எல்லாம் இவனுக்கு பார்க்க தெரியாது. மிகவும் அப்பாவியாய் எல்லா டிவி சீரியலையும் உட்கார்ந்து அமைதியாய் பார்த்து ரசிப்பான். அந்த ஆண்டிகள் ஏதோ ஒரு எபிசொட் பார்க்க தவறினால் இவனிடம் தான் வந்து அன்றைக்கு என்ன நடந்தது என்று கதை கேட்டு போவார்கள். அதனால் எங்கள் வீட்டிற்கு ஆண்டிகளின் படையெடுப்பு அடிக்கடி நடக்கும். "ரொம்ப நாளாக பழக்கம்" என்றதும் நீங்கள் அவனை பற்றி தப்பாக  நினைத்திருந்தால் உங்கள் தலையில் நீங்களே குட்டி கொள்ளவும்.

"ஏன்டா இவ்வளவு விரும்பி பார்க்கறியே பேசாமல் சீரியலில் நடிக்க போய்விட வேண்டியதுதான?" என்றேன் தற்செயலாய் அவனிடம். "இம், நான் ரெடி" என்றான். சீரியல் இயக்குனர்கள் அல்லது தயாரிப்பாளர்கள் யாராவது இதை படித்துக்கொண்டிருந்தால் தயவுசெய்து இவனுக்கு ஒரு வாய்ப்பை கொடுங்கள். "கொழுக் மொழுக்" என்ற அங்கிள் கேரக்டருக்கு அம்சமாக பொருந்தி வருவான்.


  
நீங்கள் பேச்சுலராக இருந்து கூட படித்த அல்லது வேலை செய்கிற பசங்களோடு தங்கி இருந்தால் "ட்ரீட் (Treat) என்கிற வார்த்தையை அதிகமாக மந்திரம் போல உங்கள் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். கடந்த வாரம் என் அக்கா பையனுக்கு என் மடியில் வைத்து மொட்டை போட்டு காது குத்தினார்கள்.

அதற்கு ட்ரீட் வைக்க சொல்லி நண்பர்கள் எனக்கு மொட்டை போட பார்த்தார்கள். "இப்போது பணம் இல்லை" என்று அடுத்த மாதம் கொடுப்பதாய் சொல்லி அவர்களுக்கு காது குத்தியுள்ளேன்.



விலைவாசி உயர்வு, ஊழல் நாடகம் இவற்றையெல்லாம் தாண்டி கவலைப்பட இப்போது இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன. கிரிக்கெட் உலக கோப்பை, தேர்தல், இலவசம். 

பரம ஏழை சச்சினுக்காக இந்திய அணி உலக கோப்பையை வெல்லுமா? 
அவரின் பட வெளியீட்டு பிரச்சனையையே தீர்க்க முடியாமல் கஷ்டபட்ட காவலன் விஜய்,  போராட்டம் நடத்தி மீனவர்களின் பிரச்சனையை தீர்ப்பாரா?
வல்லரசு விஜயகாந்த் தேர்தலில் வென்று நல்லரசு அமைப்பாரா?

அன்று ஒரு நாள் பஸ்சில் சென்று கொண்டிருந்தேன். அப்போது வெளியே ஒரு சேரி போன்ற குடிசை பகுதியில், விஜயகாந்தின் தே.தி.மு.க. கட்சியின் பெரிய சைஸ் போஸ்டர் ஒன்று ஒரு குடிசை வீட்டின் மேற்கூரையாக வைக்கப் பட்டு அவர்களை கடும் குளிரிலிருந்தும் வெயில், மழையில் இருந்தும் காப்பாற்றி கொண்டிருந்தது.

விஜயகாந்தின் விருத்தகிரி படத்தில் அடிக்கடி ஒரு வசனம் வெவ்வேறு கதா பாத்திரங்களால் பேசப் படும். 

"அரசு அதிகாரியா இருக்கும் போதே பொது மக்களுக்கு இவ்வளவு நல்லது பண்றாரே, இவருக்கு கீழே அரசாங்கம் வந்துச்சுன்னா எவ்வளவு நல்லது பண்ணுவாரு." 

அது மாதிரி, விஜயகாந்தின் கட்சி போஸ்டரே ஏழைகளை காக்கும் பொது விஜயகாந்த் ஆட்சிக்கு வந்தார்ன்னா, என்னமா காப்பாத்துவாரு! 


சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்பது எனக்கு இதுவரை ஓரளவுக்கு நல்ல அனுபவமாகவே அமைந்துள்ளது. ஆனால் கடந்த வாரம், சில வருடங்களாய் கவிதை என்ற பெயரில் ஏதோ கிறுக்கி வரும் என்னை மிகவும் வெட்கமடைய செய்தது, ரயிலில் கிறுக்கி வைக்கப்பட்டிருந்த அந்த கவிதை.


தட்டி போட்டா வடை.
அப்படியே போட்டா பக்கோடா.
உருட்டி போட்டா போண்டா.

எனக்கு ஏன் இப்படி ஒரு கவிதை எழுத தோணவில்லை.

போண்டா போச்சே!.

இந்த கவிதை படித்ததும் வடை, பக்கோடா, போண்டா இந்த மூன்றும் என் கண்முன்னே சிறிது நேரம் வந்து என் பசியை தூண்டியது. மூன்று வரிகளில் ஒரு முத்தான கவிதையை எழுதிய அந்த கவிஞர் ஏனோ கவிதைக்கு கீழே அவர் பெயரை எழுதியிருக்கவில்லை. அவருக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை "பாராட்டு" என்பதாக கூட இருக்கலாம்.

பொதுவாக கழிப்பிட சுவர்களில் உள்ளதை போன்றே ரயிலின் உட்புறத்திலும் Nithyaanantha Loves Ranjitha, Prabudeva Loves Nayan என்பது மாதிரியான கல்வெட்டு வாசகங்கள் தான் நிறைய காணப்படும். ஆனால் இதுபோன்று ஒரு தத்துவ கவிதை எழுதி இவர் அந்த இலக்கணத்தை உடைத்துவிட்டார். Hats Off  to him.

நெடுந்தூர ரயில் நிலையங்களை போல, மெட்ரோ ரயில் நிலையங்கள் அவ்வளவாக துர்நாற்றம் வீசுவதில்லை. கழிப்பிட வசதி இல்லை என்பதால். ஆனால் இன்னுமொரு பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. ரயிலில் ஏறி அமர்ந்தவுடன் பார்த்தேன் ஒரு பெண்  ஐபாட்(ipad) -ல் பாட்டு கேட்டு கொண்டு தலையையும் லேசாக காலையும் ஆட்டிக்கொண்டிருந்தாள். சில பேர் எதையும் கேட்காமல் காலை மட்டும் ஆட்டிக்கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் நானும் காலை ஆட்ட தொடங்கி விட்டேன். காரணம். கொசுக்கடி.

ஓடும் ரயிலில் பறந்து பறந்து கடிக்கின்றது. பிகர்களுக்கு எதிரே கடிக்கின்ற கொசுவை அடிக்கவும் அசிங்கமாக உள்ளது. பத்தாம், பனிரெண்டாம் போது தேர்வு வரும் போது தமிழ் தினசரி செய்தித்தாள்களில் போடுவார்கள். "தேர்வுகளில் காப்பி அடிப்பவர்களை பிடிக்க தனி பறக்கும் படை அமைக்கப் பட்டுள்ளது" என்று. இனிமேல் தயவு செய்து பறக்கும் படை என்ற வார்த்தையை அதற்கு உபயோகப் படுத்தாதிர்கள்.



Jan 28, 2011

பாட்டிக்கு ஒரு பாட்டு - ஆபாயில் (அப்புடியே சாப்பிடுங்க)

ந்த வாரம் நண்பர் ஒருவர் திருமண அழைப்பிதழ் கொடுக்க எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். முன்பு எங்களோடு தான் தங்கி வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது நாங்கள் வெளியே சாப்பிட சென்றாலோ அல்லது ஒன்றாக சினிமாவிற்கு சென்றாலோ முடிந்த அளவிற்கு மற்றவர்கள் தலையிலே மொய் எழுதும் திறமை நன்கு வாய்த்தவர். எனவே மீண்டும் அவருடைய திருமணதிற்கு வந்து கடைசியாக ஒருமுறை மொய் எழுத சொல்லி என்னை வலுக் கட்டாயப் படுத்தினார். எனக்கு அலுவலகத்தில் வேலை அதிகம் உள்ளது என்று சொல்லி தப்பிக்க பார்த்தேன். "அதெல்லாம் முடியாது. நீதான் எனக்கு தாலி எடுத்து கொடுக்கணும்" என்று பாசத்தில் திணற வைத்தார். அப்போது என்னை அறியாமல் "புதுப்பேட்டை" படத்தின் காட்சி என் மனதில் பிளாஷ் ஆகி போனது. ஏனென்றால், அவருக்கு வரப்போகும் பெண் மிகவும் அழகானவங்க.



திரைத்துறையில் நிறைய மனிதர்கள் திறமை அதிகம் இருந்தும் அதிர்ஷ்டம் இல்லாமல் அல்லல் பட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் ஒன்றை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். கலைஞர் தாத்தா உயிரோடு இருக்கிறவரை கொஞ்சம் பொறுமையாய் இருங்கள். இல்லையென்றால் வாலியாய் இருந்தாலும் வைரமுத்துவாய் இருந்தாலும் அவர் வசனம் எழுதும் படங்களைப் பார்த்து "அருமையான படம். பா. விஜய் சிறப்பாய் நடித்திருக்கிறார்." என்று சிரிப்பை அடக்கி கொண்டு மைக்கின் முன்னால் பேச வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாக வேண்டிவரும். நடப்பதெல்லாம் நன்மைக்கே என்பது எவ்வளவு உண்மையானது என்று உணருங்கள்.

குடியரசு நாளன்று மனம் மிகவும் மந்தமாய் தோன்றியது. சிறுவயதில் பள்ளிக்கூடம் செல்கையில் குடியரசு தினத்தன்று மிட்டாயும் பொரியும் கொடுப்பார்கள். இப்போது கணிப்பொறி மட்டுமே கையில். இப்போதெல்லாம் குடியரசு தினம், சுதந்திர தினம் எதுவாய் இருந்தாலும் "Its just another Saturday or Sunday". சரி, எப்படிதான் இன்றைய பொழுதை கழிப்பது என்று வெளியே சென்று வீட்டிற்க்கு அருகில் உள்ள பேக்கரியில் டீ குடித்து கொண்டே தீவிரமாய் சிந்தித்தேன். அப்போது அந்த பேக்கரியில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் போக்கிரி படம் ஓடிகொண்டிருந்தது. ஒருதடவை முடிவு பண்ணிட்டா என் பேச்சை நானே கேட்க மாட்டேன் என்று ஹீரோ பன்ச் விட்டு கொண்டிருக்க உடனே கடைக்காரர் தன் முடிவை மாற்றி ரிமோட் எடுத்து சேனலை மாற்ற "ராஜ் உலக தொலைக்காட்சி" சேனலில் ரோஜா படத்தை நூற்றி எட்டாவது முறையாக வாங்கியதிற்கு வஞ்சகம் இல்லாமல் ஒளிபரப்பி கொண்டிருந்தார்கள்.

மறுபடியும் கடைக்காரர் சேனலை மாற்ற "இசைஅருவி"யில் இரண்டு இளைஞர்கள் தங்கள் புஜபலத்தை காண்பித்து கொண்டிருந்தார்கள். மூன் (Moon) மியூசிக்கில் ஒரு பெண் "Peace Girl" என்ற வாசகம் கொண்ட ஒரு டீ-சர்ட்டினை அணிந்து கொண்டு "உங்க வீட்டு டிவி சவுண்ட கொஞ்சம் குறைங்க" என்று கால் செய்த நேயரிடம் கத்தி குரைத்துக் கொண்டிருந்தாள். அப்போதுதான் அந்த ஐடியா சட்டென்று உதித்தது. உடனே என்னுடைய செல்போனை எடுத்து அந்த நிகழ்ச்சியின் எண்ணுக்கு கால் செய்தேன். சிறிது  நேரத்திற்கு பிறகு தொடர்பு கிடைத்தது.

"ஹலோ யாரு பேசறிங்க?"
"ஹலோ மேடம் எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா?"
"இம் சூப்பரா இருக்கேன். வெயிட் பண்ணுங்க. நாம இதுக்கு முன்னாடியே பேசி இருக்கோம். கரெக்டா?"
"இல்ல மேடம்."
"! அப்படியா சரி நீங்க என்ன பண்றீங்க?"
"நான் மெரீனா பீச்சுல சுண்டல் வித்துகிட்டு இருக்கேன் மேடம். போன வாரம் கூட யாரோ ஒரு அண்ணன் கூட நீங்க பீச்சுக்கு வந்து என்கிட்ட தான் சுண்டல் வாங்கி சாப்டீங்க. அப்ப உங்களுக்கு சுண்டல் வாங்கி கொடுத்த அந்த அண்ணன் தான் என்கிட்ட பேசுனாரு நீங்க பேசல"
"சரி சரி மன்னிச்சிருங்க. அடுத்த தடவை யாருகூட பீச்சுக்கு வந்தாலும் உங்கள பார்த்து பேசுறேன். சரியா?"
"ஓகே மேடம்."
"இந்த நிகழ்ச்சிய உங்க குடும்பத்துல எல்லோரும் விரும்பி பார்ப்பிங்களா?"
"ஆமா மேடம். உங்க நிகழ்ச்சின்னா ரொம்ப இஷ்டம். அதுவும் எங்க அப்பாவுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். தினமும் உங்க சேனலை பார்க்கலைனா எனக்கு தூக்கமே வராது."
"ரொம்ப சந்தோசம். அந்த அளவுக்கு பிடிக்குமா?"
"ஆமா மேடம். தினமும் ராத்திரி தூக்கம் வரலைனா உங்க சேனலை தான் பார்ப்பேன். சூப்பர் சூப்பரா இளையராஜா பாட்டு போடுவாங்க. அதை கேட்டு அப்புடியே தூங்கிடுவேன்."
"சரி, உங்களுக்கு என்ன பாட்டு வேணும்?"
"எனக்கு இளைஞன் படத்துல இருந்து 'இமைதூதனே' பாட்டு போடுங்க மேடம். இந்த பாட்டை செத்து போன எங்க பாட்டிக்காக டெடிகேட் பண்ணுறேன் மேடம்."
"இனி உங்க பாட்டிக்கான பாட்டு வருது கேளுங்க. நிகழ்ச்சிய தொடர்ந்து பாருங்க."



அப்புறம் அந்த நாள் மிக இனிமையாக கழிந்தது.


கடவுளுக்கு வேலை இல்லை - தண்டர் கவிதைகள் 2



சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணங்களை
பதுக்கி வைத்திருக்கும் வெள்ளை மனங்களை
மக்களிடம் காட்டிக் கொடுக்க வேண்டாம்.
தமிழக கடல் பகுதிக்குள்
மீன் பிடிக்க அனுப்புங்கள்.
கூடுதலாய் ஒரு ஐந்து லட்சம்
அவர்கள் குடும்பத்திற்கு கிடைக்கும்.

கோடி கோடியா கொள்ளையடிக்கிறாங்க.
ஆனா ஒரு கோடி மேல போட்டு எரிக்க கூட 
உடம்பு கிடைக்க மாட்டேங்குது.

அமெரிக்காவுக்கு போனால் தான்
அவன் ஆன்மீகவாதி.
ஊழல் செய்தால்தான்
அவன் அரசியல்வாதி.
உடனடி சட்டம் இயற்றப்பட வேண்டும்
நாடாளுமன்றத்தில்.

அரசு அதிகாரிகளுக்கு மட்டும் அல்ல
நாட்டுல உயிரோடு உள்ளவனுக்கெல்லாம் போனசு
இலவச சரவெடிகளோடு
இனி வர போகுது
தேர்தல்
இதுதாண்டா உண்மையான தீபாவளி.

புதுமண தம்பதிகளுக்கு மட்டுமல்ல
கெழடு கட்டைகளுக்கும்தான்
அழகா மடிச்சு கொடுப்பாங்க 
வெத்தலைல பணம்.
நாக்கும்  சிவக்கும்
நாடும் சிறக்கும்.

எவ்வளவோ பண்ணிட்டோம்
இதை பண்ண மாட்டமா?
இன்னும் ஒரு சத்தியம்.

எல்லாம் இனிதே அமைதியாக நடந்து முடிந்தது
ஒவ்வொரு தேர்தலுக்கு பின்னும்
திறம்பட செயல்பட்ட
தேர்தல் கமிஷன்.

உண்ண உணவிற்கு
இலவச அரிசி திட்டம்.
உடுத்த உடைக்கு
இலவச வேட்டி சட்டை வழங்கும் விழா.
இருக்க உறைவிடத்திற்கு
இலவச வீடு வழங்கும் திட்டம்.
சாகாம உயிரோடு இருந்து இதெல்லாம் அனுபவிக்க
கலைஞர் காப்பிட்டு திட்டம்.
இதுக்கு மேல இலவச கலர் டிவி.
அத்தியாவசிய  தேவைக்கு மேல்
அதிகமாகவே கெடைக்குது.
நாட்டுல இன்னும் எதுக்குடா சாமிய கும்புடுறீங்க?

சிறுவயதில் படித்திருக்கலாம்.
எனவே மறந்துவிடாது
உரக்க படியுங்கள் ஒருமுறை.
"மக்களை கொண்டு மக்களால் மக்களுக்காக நடத்தப்படுவது மக்களாட்சி".




Jan 16, 2011

போகி, பொங்கல், இளைஞன்,ஆடுகளம் - ஆபாயில் (அப்புடியே சாப்பிடுங்க)


துவரை நான் போகி பண்டிகையை கொண்டாடியதே இல்லை. ஆனால் இந்த வருடம் அதை நான் கொண்டாட தூண்டியது ரொம்ப நாளாக துவைக்காமல் பத்திரமாய் சேமிக்கப்பட்டு வைத்திருந்த என் நண்பனின் அழுக்கு துணிதான். அவன் பதினோராம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே அமீபாவும் பாக்டீரியாவும் தான் அவனுக்கு மிகவும் பிடித்தமான செல்ல பிராணிகள். பதினோராம் வகுப்பில் பயாலாஜி க்ரூப் எடுத்து படித்தது ஒரு காரணமாய் இருக்கலாம். நீங்களும் அடுத்த தீபாவளிக்கு அடுத்த வீட்டு கம்பி கொடியில் காயும் பழைய அல்லது நீங்கள் விரும்பினால் புதிய துணிமணிகளை எடுத்து கொளுத்தி பாருங்கள் தெரியும் மனதிற்கு எவ்வளவு மகிழ்ச்சி கிட்டும் என்று. எங்கள் வீட்டில் போகி கொண்டாடிவிட்டு அதிகாலை பைக்கில் சென்னையில் இருந்து சேலம் வரை நெடுந்தூர பயணம் மேற்கொண்டோம் நானும் என் சகோதரனும். வழியில் எல்லாம் மக்கள் போகி கொண்டாடி கொண்டிருந்தார்கள். நாங்களும் நடுநடுவில் இறங்கி குளிர்காய்ந்து விட்டு வந்தோம்.

பொங்கல் பண்டிகைக்கு முன்தினம் வெள்ளியன்று இசைஅருவி தொலைக்காட்சியில் "இளைஞன்" படத்தின் பாடல் காட்சிகளை எடுத்த விதம் நிகழ்ச்சியை பார்த்தவுடனே முடிவு பண்ணினேன். இந்த படத்தை "எப்பாடு" பட்டாவது பார்த்து விடவேண்டும் என்று. எப்பாடு பட்டாலும் பிற்பாடு படாதவர் "வம்சம்" அல்லவா நாங்கள்.

அடுத்த நாள் பொங்கல் அன்று பொங்கல் சாப்பிட்டவுடன் நண்பர்களை கூட்டிக்கொண்டு இளைஞன் வெளியான திரையரங்கை (ஈரோடு V.S.P) சென்றடைந்தேன். வீதிவரை நெருக்கி கொண்டு நின்ற மக்கள் கூட்டத்தை விலக்கி கொண்டு சென்று உள்ளே பார்த்தால் ஹவுஸ்புல் போர்டு. சரி முன்வைத்த காலை பின்வைக்க கூடாது என்று அடுத்த காட்சிக்கு டிக்கெட் இருக்கா? என்று கவுண்டரில் கேட்டால் அடுத்த ஒரு மாதத்திற்கு புல்லாம். இதை கேட்டவுடன் எனக்கு ஒரு புல் அடிக்கவேண்டும் என்ற அளவிற்கு மனவருத்தம் ஏற்பட்டது. கலைஞரின் கன்னித்தமிழை கேட்க இன்னும் எவ்வளவு நாள் பொறுப்பது? இந்த கொடுமையை தட்டி கேட்க கண்டிப்பாக கலை(லி)யுலக மன்னன் கலைஞரிடம் சென்று முறையிடுவேன். எனக்காக இல்லையெனினும் நமீதாவுக்கு ஆவது (ஐ மீன் நமீதா விமர்சனம்) அவர் உதவி செய்ய முன்வரலாம். ;-)
இந்த படத்திருக்கு நமீதாவை கலைஞர் ரெக்கமென்ட் செய்துள்ளார் என்று இச்செய்தி கூறுகிறது.

ன் பிக்சர்ஸ் இந்த வருட கணக்கை துவங்கி விட்டார்கள். ஆடுகளம் படத்தின் பாதியிலே எழுந்து வந்த நானும் என் நண்பனும் அப்படியே ஈரோடு இரயில் நிலையத்தில் பிளாட்பாரம் டிக்கெட் வாங்கி கொண்டு உள்ளே நுழைந்தோம். நம்மூரில் எல்லா இரயில் நிலைய பிளாட்பாரங்கள் பெரும்பாலும் பொது கழிப்பிடத்தின் உள்ளே போகின்ற பிரமையையே ஏற்படுத்துகின்றன. நான் ஒவ்வொரு மாதமும் ஊருக்கு செல்கையில் பிளாட்பாரத்திற்கு போய் இரயில் வரும்/கிளம்பும் வரை உட்காந்திருப்பது மிகவும் சிரமமான விஷயம். பன்றிக்காய்ச்சல் முகமூடி இருந்தால் நலம். அல்லது தமிழ் சினிமா கிளைமாக்ஸ் காட்சிகளில் வருவதை போல, இரயில் புறப்பட்டு சென்று கொண்டிருக்கும். ஹீரோ தூரமாய் ஓடி வந்து கொண்டிருப்பார். ஏறுவாரா? மாட்டாரா? என்று நம் மனதை பதைபதைக்க வைத்து விட்டு  கடைசியாக இரயில் ஏறி ஹீரோயினை கட்டிபிடித்து சந்தோசப்படுத்தி நம்மையும் சந்தோச படுத்துவார். நாமும் இது போல இரயில் புறப்பட ஆரம்பித்தவுடன் ஓடி சென்று ஏறலாம்.

கொஞ்ச நேரம் இரயில் நிலையத்தை சுற்றிவிட்டு வெளியே வந்தால் வழியில் ஒரு ஆங்கிலோ-இந்தியன் மாதிரியான ஒரு பிகரை இரண்டு பன்னாடை பயலுகள் பின்னே நடந்து பாலோவ் செய்து கொண்டு போய் கொண்டிருந்தார்கள். அதில் ஒருவன் ஒல்லிபிச்சான் நடிகர் தனுஷை போன்ற சாயலில் உள்ளதாய் என் நண்பன் சொன்னான். மனசு கேட்கவில்லை. எதற்கு என்பதை உங்கள் யூகத்திற்க்கே விட்டு விடுகிறேன். சிறிது தூரம் தள்ளி ஒரு ட்ராபிக் போலீஸ் Wrong way இல் வந்த இருவரை மடக்கி பிடித்து பொங்கல் போனஸ் கேட்டு கொண்டிருந்தார்.

ஆடுகளம் படத்தில் வரும் ஹீரோவின் கோழியையும் வில்லனின் கோழியையும் இரண்டு அக்சார் பெயிண்டு டப்பாகளில் முக்க வைத்தாவது சண்டை போட வைத்திருக்கலாம். எந்த கோழி யாருடையதுன்னு ஹீரோ மற்றும் வில்லனோட மூஞ்சிய பார்த்துதான் கண்டுபிடிக்க முடிகிறது. ஆடுகளம், "டப்பா டான்ஸ் ஆடுது"

கொஞ்சநாளா நாமளும் எழுதிக்கிட்டு இருக்கோம். ஆனா நமக்கு யாரும் கடிதம் எழுத வில்லையே என்று ஏக்கம் அடைந்ததுண்டு. ஆனால் தற்போது தினமும் குறைந்தது பத்து கடிதங்கள் ஆவது வந்து விடுகிறது. வருவதை எல்லாம் படிப்பது மிகவும் கஷ்டமாக உள்ளது. (பின்ன, நானே எழுதியதை நானே படிக்கறது ரொம்ப கஷ்டம் இல்லையா?)

பொதுவாக எனக்கு சுயவிளம்பரம் பிடிக்காது. இருந்தாலும் எனக்கு யாரும் கடிதம் எழுதுவதில்லை என்று நீங்கள் தவறாய் நினைத்து விடக்கூடாது அல்லவா? அதனால் ஒரே ஒரு கடிதம் உங்கள் பார்வைக்கு.

Mr Katz Sir,
உங்கள் பதிவுகளை தொன்று தொட்டே படித்து வருகிறேன். மிகவும் அருமையாய் எழுத்துகிறீர்கள். மனசு சரியில்லை என்றால் உங்கள் பதிவுகளை படித்து உற்சாகம் அடைவேன். சில சமயம் வயிறு சரியில்லை என்றால் கூட உங்கள் பதிவுகள் தான் படிப்பேன். 

பின்குறிப்பு: எனக்கு அடிக்கடி அதாவது தினமும் காலையில் வயிறு சரி இருக்காது. 

என்னுடைய பின்குறிப்பு (டிஸ்கி):
இது யாருடைய மனதையும் அல்லது வயிறையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதல்ல.

இனி வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்: கடிதம் எழுதி பாராட்டினாலோ இல்லை பின்னூட்டம் இட்டு பாராட்டினாலோ, மிகவும் சப்பையாக "அருமை", "சூப்பர்" என்று எழுதாதிர்கள். புதிது புதிதாக வார்த்தை பிரயோகம் செய்து உங்கள் திறமையை வெளிப்படுத்துங்கள். உதவி தேவைப்பட்டால் வாலி வைரமுத்துவின் உதவியை நாடுங்கள். என்னை பாராட்ட வார்த்தைகளே இல்லையெனில் வெறும் ஸ்மைலீயை ( :-) ) மட்டும் போடுங்கள். புரிந்து கொள்வேன்.


பொங்கல் ட்வீட்ஸ்: 



பீர் சாப்பிடறவிங்க எல்லாம் பொங்க வைத்து குடிங்க. மற்றவர்கள் எல்லாம் பொங்கல் வைத்து சாப்பிடுங்க. # ஹாப்பி பொங்கல்.


Jan 12, 2011

புத்தாண்டு, புத்தக கண்காட்சி - ஆபாயில் (அப்புடியே சாப்பிடுங்க)

வெங்காய விலை ஏறினாலும், தக்காளி விலை ஏறினாலும், எதற்கும் கவலை படாமல் அதிரடியாக அடுத்த ஆண்டிற்குள் அடி எடுத்து வைக்கும் உங்கள் ஆபாயிலின் கொஞ்சம் பெப்பர் தூக்கலான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.



புத்தாண்டு இரவு அன்று அரசு மதுபான கடையில் அரசுக்கு சிறிது வருமானம் கொடுத்துவிட்டு நண்பர்களோடு பெசன்ட் நகர் கடற்கரை சென்று இருந்தேன்.  அடையாறு சிக்னலில் இருந்தே மக்கள் கூட்டம் கூட்டமாய் ஏதோ வன்முறைக்கு செல்வது போல பயங்கரமாக கூச்சலிட்டு கொண்டு சென்று கொண்டிருந்தார்கள். பீச் ரோட்டிற்கு சென்றால் டிராபிக் ஏற்பட்டு விடும் என்ற காரணத்தினால் ஒரு கிலோமீட்டர் முன்னே பைக்கை நிறுத்தி விட்டு நடந்து சென்றோம். அப்போதும் டிராபிக் பகவான் எங்களுக்கு தரிசனம் தந்து நிற்க வைத்தார். சரியாக 11:55 -க்கு கடற்கரை வந்து சேர்ந்தோம். மணல்கள் எல்லாம் கிட்டத்தட்ட மறைந்து போயிருந்தன. எங்கு காணினும் மக்கள் தலைகளடா.

கூச்சல், பட்டாசு சத்தம், வான வேடிக்கைகள் என மக்கள் ஆரவாரத்தோடு சத்தம் கடற்கரையை பிளந்து கொண்டிருந்தது. தூரத்தில் சில சிறுவர்கள் எதையும் கண்டுகொள்ளாமல் துப்பாக்கியால் பலூன்களை சுட்டு வெடித்து புத்தாண்டை கொண்டாடினர். அப்போதும் பலூன்கள் வெடிப்பதை பார்க்க முடிந்தது. ஆனால் வெடிக்கும் சத்தங்களை கேட்க முடியவில்லை. சத்தங்களுக்குள் சத்தம் அமிழ்ந்து போய் கொண்டிருந்தன. அன்று இரவு கடல் அலைகளும் கொஞ்சம் அடக்கியே வாசித்தன.

  கடற்கரையில் நடந்த வானவேடிக்கை.

கூட்டத்தில் பிரிந்து போய் விட கூடாது என்று போகும் போதே நாங்கள் சொல்லிகொண்டோம் ஆனால் செயல்படுத்த முடியவில்லை. சிறிது நேரத்திலே நட்சித்திரங்களாய் இரண்டு மூன்று குரூப்பாய் சிதறிவிட்டோம். சரியாக மணி பனிரெண்டு என்ற போது மக்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டிபிடித்து புத்தாண்டு வாழ்த்து செய்தியை பரிமாறி கொண்டனர்.  கூட வந்த எனது நண்பனும் சந்தோசமாக எல்லோரையும் கட்டிபிடித்து வாழ்த்து சொன்னான். அவனது துரதிஷ்டம் பெண்கள் யாரும் அன்று அதிகமாய் அகப்படவில்லை. அப்போது தூரத்தில் ஒரு ஆண்டி வர, பையன் குசியாகினான். நெருங்கி வந்த ஆண்டி அலர்ட் ஆகி, கையை மட்டும் கொடுத்து வாழ்த்து சொல்லி பையனை ஆசுவாச படுத்திவிட்டார்கள். கடைசியில் பிரிந்து போன நண்பர்களை ஒன்று சேர்க்க செல்போனில் தொடர்பு கொள்ளும் போது முக்கால் மணி நேரத்திற்கும் மேலாக, "தற்போது எல்லா லைனும் பிசியாக உள்ளது" என்ற குரல் கூட கேட்கவில்லை.

அன்று மட்டும் சுனாமி வந்திருந்தால் சென்னை மக்கள் தொகை பெருமளவு குறைந்திருக்கும். அங்கே திரை கட்டி "சுறா படம்" போட்டிருந்தாலும் கூட அதே விளைவு நடந்திருக்கலாம். 

மாயன் காலண்டரின் படி 2012 -ல்  உலகம் அழிந்து விடும் என்பது உண்மையானால், இன்னும் ஒரு புது வருடம் தான் பாக்கியா? அப்படி அழியும் என்றால், 2012 படத்தில் ஒருவன் மலைமேல் ஏறி நின்று உலகம் அழிவதை சந்தோசமாக கத்தி கொண்டே சாவான் அல்லவா? அது போல நானும் மிக சந்தோசமாக சாவேன். I hate this life....





ல்யாணிக்கும் எனக்கும் ஆறாவது படிக்கும் போதிலிருந்தே ஓரளவுக்கு பழக்கம் இருந்தது. கல்யாணிங்கறது பக்கத்துக்கு வீட்டு பிகர் இல்லைங்க. பியர் (Beer). அப்போவெல்லாம் என்னோட அப்பா எப்போவாவது கல்யாணியை வாங்கிட்டு வர சொல்லி என்னை பிராந்தி கடைக்கு அனுப்புவார். நான் அப்போது காதல் கொண்டேன் சிறிய வயது தனுஷ் மாதிரி ரொம்ப ஒல்லியா இருப்பேன். அதனால் எனக்கு உடம்பு எறனனும்ன்னுட்டு, என் அப்பா என்கிட்ட சளி மருந்துன்னு பொய் சொல்லி இரண்டு மூடி பியர் கொடுப்பாரு. அதை குடித்து விட்டே நான் என் அம்மாவோடு துணி துவைக்க வயல்வெளி வரப்புகளில் போகும் போது கால்கள் தடுமாறி விழ பார்ப்பேன்.

காலேஜ் படிக்கும் போது, பிரெண்ட்ஸ் எல்லாம் சொல்லிக்கொண்டு திரிவார்கள். முதல் இயர் படிக்கும் போதே பியர் குடித்திருக்கிறேன் என்றும், பிளஸ் டூ படிக்கும் போதே பியர் அடித்தேன் என்றும். "பொடிப்பசங்க" என்று நினைத்து மனதிற்குள்ளே சிரித்து கொண்டு பரிதாபப் பட்டபடியே அங்கிருந்து கிளம்பிவிடுவேன். ஆனால் ஒரு விஷயம் எங்க அப்பாவுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை இரண்டு மூடியளவு பியர் குடித்தால் உடம்பு ஏறாது என்று.

ஒரு கெட்ட பழக்கத்தினால் ஒரு நல்ல பழக்கம் ஏற்படுமா?
முன்னெல்லாம் தினமும் காலையில் எங்க அப்பா போன் பண்ணி பேசும் போது தூங்கி கொண்டிருப்பேன். ஏன்டா இவ்வளவு நேரம் தூங்குற? சீக்கிரம் தூங்கிட்டு சீக்கிரம் எந்திரிக்க வேண்டியதுதான என்று திட்டிகொண்டே இருப்பார். கொஞ்சநாளில் திட்டுவதை விட்டு விட்டார். முயற்சி கைவினை ஆக்கவில்லை. ஆனால் நான் பியர் குடித்த அன்று மட்டும் சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழுந்து விடுவேன். இது என் அப்பாவிற்கு தெரியாத அடுத்த விஷயம். A bad habit makes a good habit. அதனால் சில கெட்ட பழக்கங்களையும் பழகுங்கள். நல்ல பழக்கங்கள் தென்படலாம்.


வ்வொரு புத்தாண்டுக்கும் காலையில் தவறாமல் நான் செய்பவை. 
  1. நேரமாய் எழுந்து குளிப்பது.
  2. பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்றுவருவது. 
கோவிலில் கொடுக்கும் சர்க்கரை பொங்கல் ருசியாக இருக்கும் என்பதையும் தாண்டி இந்த உலகில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காகவும் கடவுளை வழிபடுவேன். நம் வயதை ஞாபக படுத்தும் பிறந்தநாளை போல புத்தாண்டுகள் எனக்கு கடவுளை ஞாபக படுத்துகின்றன.

இந்த புத்தாண்டுக்கு இதெல்லாம் முடித்துவிட்டு அதே வெட்டி நண்பர்களோடு வேடந்தாங்கல் பைக் பயணம் மேற்கொண்டேன். வழியில் நண்பர்கள் மட்டும் அரசு டாஸ்மாக்கில் கொஞ்சம் எரிபொருள் சேர்த்துக்கொண்டனர். ஹாட் ட்ரிங்க்ஸ் அடிச்சா வயிறு எரியுமாமே?. ;-)  நான்  கூல் ட்ரிங்க்ஸ் மட்டும் தான் குடிப்பேன். கூலிங் இல்லைனா அதுவும் குடிக்கமாட்டேன். அந்த டாஸ்மாக் சுவரில் அந்த வாசகத்தை அப்போதுதான் கவனித்தேன். "பாரை சுத்தமாக வைத்திருக்க உதவுங்கள்". எனக்கு பீர் அடிக்காமலே குழப்பம் ஏற்பட்டது. இங்கே "பார்" என்பது தமிழ் வார்த்தையா? இல்லை, ஆங்கில வார்த்தையா? குறிப்பாக சென்னையில் அரசு டாஸ்மாக் உள்ளே போனால் குடிக்க ஆரம்பிக்கும் முன்னமே வாந்தி வந்து விடும். அதற்கு அப்புறம் வாந்தி வராது. பிரெஷ் ஆக குடிக்கலாம். எது எப்படியோ. உங்கள் வீட்டிற்க்கு அருகில் உள்ள பாரை(Bar) சுத்தமாக வைத்திருங்கள். அப்புறம் நம்முடைய பார் (உலகம்) தானாக சுத்தமாகும். சரி, Back to வேடந்தாங்கல்.

                                                                   
                                             
வேடந்தாங்கலுக்கு 15 கிலோமீட்டர் முன்பிருந்தே சாலையின் இரு புறமும் சமவெளியை போன்ற நிலங்கள் உட்கார்ந்து ஓய்வு எடுத்து குடித்து கும்மாளமாய் பொழுதை கழிக்க அருமையான இடம். நாங்களும் வண்டியை ஓரமாய் நிறுத்தி சிறுநீர் மட்டும் கழித்து விட்டு கிளம்பி விட்டோம். போகும் வழியெல்லாம் மக்கள் பிக்னிக் ஸ்பாட் போல குடும்பத்தோடும், நண்பர்களோடும் சாப்பிட்டு கொண்டும் விளையாடி கொண்டும் இருந்தார்கள்.சென்னைவாசி குடும்பஸ்தர்களும், குடும்பஸ்தர் ஆக போகிறவர்களும், ஒரு நாள் மகிழ்ச்சியாய் பொழுதை கழிக்க ஒரு முறை போய் வரலாம்.

We started this new year celebration with one beer and closed it by opening the another bear. A good beer will give you a happy good year.



சில சமயம் இந்தியன் கிரிக்கெட் அணி அதிரடியாய் ஆடி வெற்றிபெறும் போதும், படு கேவலமாய் தோற்கும் போதும் ஒரே மாதிரியான சந்தோசத்தையே எனக்கு கொடுக்கும். அதுபோலவே அருமையான படங்கள் வந்து தரும் மகிழ்ச்சியை போலவே, படு மொக்கையான படங்களும் நிகராக அக மகிழ்ச்சியை தரும். சமீபத்திய மகிழ்ச்சிகள். சித்து + 2 first attempt மற்றும் விருத்தகிரி. சித்து +2 படத்தை பாக்யராஜின் பழைய ரசிகர்கள் யாராவது தற்செயலாகவோ இல்லை ஆசைபட்டோ பார்க்க நேரிட்டால், இப்படத்தை பாக்யராஜ் தான் திரைக்கதை எழுதி இயக்கினார் என்று அவரே முருங்கைகாய் மேல் அடித்து சத்தியம் செய்தாலும் நம்ப மாட்டார்கள். அடிக்கடி முருங்கைமரம் ஏறும் வேதாளமாய் இந்த படத்திலும் முருங்கைக்காய் சீனை வைத்து இந்த படத்தை எடுத்தது அவர் தான் என்பதை தெள்ள தெளிவாக உணர்த்துகிறார். வாழ்க முருங்கைக்காய்!. வளர்க முருங்கைக்காய்!.  சித்து +2 வும், விருதகிரியும் நம்மை சிரிக்க வைப்பதில் நீயா? நானா?  என்று போட்டி போட்டாலும் கடைசியில் விருதகிரியே வெல்லும் என்பது என் அனுமானம்.




லாநிதி மாறன் அய்யா அவர்கள் எந்த படத்தை தயாரித்து வெளியிட்டாலும் அது மிக பெரிய வெற்றிபெறும். தமிழர் பெருமையை உலகறிய செய்த எந்திரனை இவரை தவிர வேறு யாரும் எடுத்து வெளியிட்டிருந்தாலும் அது இவ்வளவு பெரிய வெற்றி பெற்றிருக்காது. அப்படியிருக்க ஒரு மாறனோடு இன்னொரு மாறன் இணைந்தால் அது எவ்வளவு பெரிய வெற்றியை கொடுக்கும். அந்த வகையில் வெற்றிமாறனின் "ஆடுகளம்" படத்தின் வெற்றி முன்கூட்டியே தெரிந்த ஒன்று தான். கலாநிதி மாறன் அவர்கள் இந்திய திரைத்துறைக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து. கலைகளை காப்பாற்றும் கலைநிதி மாறன். ஆத்தே ஆத்தே ஆத்தே! எனக்கு என்னாச்சு? இப்படி கலாநிதி மாறனை புகழ்கிறேன். காரணம் இரண்டு வாரங்களுக்கு முன்பு சன் டிவியில் ஆடுகளம் படத்தின் பாடல் கேசட் வெளியிட்டு விழாவை கண்டுகளித்தத்தின் விளைவுதான் இது. பாலுமகேந்திராவை தவிர மேடையில் இருந்த ஒவ்வொருவரும்  கலாநிதி மாறன் அவரை சிலையே வைக்காத கடவுளாக பாவித்து பஜனை பாடினார்கள். அவர் மட்டும் அன்று மேடையில் இருந்திருந்தால் காலை பிடித்து. #$%$$@*&^*&@^*&#%$^.................................   அவர்கள் பிழைக்க தெரிந்தவர்கள். காசேதான் கடவுளடா! கடவுளுக்கே அது தெரியாதடா!.



போன ஞாயிற்று கிழமை பெங்களூர்ல இருந்து என் நண்பன் "மணி" புத்தக கண்காட்சிக்காக சென்னை வந்திருந்தான். புத்தக கண்காட்சியை பற்றியும் கொஞ்சம் என்னை பற்றியும் ;-) அவனது பதிவு. ரூபாய் மூவாயிரத்திற்கும் மேலாக அவன் புத்தகம் வாங்கினான். நான்?... அவன் வாங்கிய புத்தகங்களை சுமந்து கொண்டு வந்தேன். ஆனால் கடைசி வரைக்கும் நான் தேடிய புத்தகம் கிடைக்கவேயில்லை. ஹி!ஹி!. சில வருடங்களுக்கு முன்பே "புத்தகம் படிக்கும் பழக்கம்" என்னை புடிக்காமல் ரொம்ப தூரம் போய்விட்டது. இப்போது என்னால் குமுதம், ஆனந்த விகடன் கூட உட்கார்ந்து பொறுமையாக படிக்க முடியவில்லை. காலேஜ் செமஸ்டர் எக்ஸாம்க்கு படிப்பது போல தலைப்பை மட்டும் படித்துவிட்டு  தூக்கி எறிந்து விடுவேன்.

கண்காட்சிக்கு உள்ளே போன பின்பு ஏகப்பட்ட ஸ்டால்கள் மற்றும் புத்தகங்கள் இவற்றை பார்த்து விட்டு எனக்கும் ஏதாவது புக் எழுதணும் போல மனம் பரபரத்தது. ஆனால் கிழக்கு பதிப்பகம், உயிர்மை ஸ்டால்களில் சுஜாதாவை பார்த்த பின்பு அந்த ஆசை எல்லா புத்தக ஸ்டால்களுக்குள்ளும் புகுந்து ஓடி எகிறியது. எங்கு பார்த்தாலும் சுஜாதாவே வியாபித்திருந்தார் ஒரு கடவுளை போல. "சுஜாதா ஸ்டால்" என்று தனியாகவே வைக்கலாம் என்ற அளவுக்கு அதனை புத்தகம் எழுதி உள்ளார்.



"ஸ்பெக்ட்ரம் சர்ச்சை" என்ற புத்தகம் கூட வந்துள்ளது. அந்த புத்தகத்திற்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று தான் பெயர் வைத்திருக்க வேண்டும் என்று ஞானி அவர்கள் அதை எழுதிய ஆசிரியருக்கு குட்டு வைத்துள்ளார். என்னோமோ பண்ணுங்க. ஆனா ஆ.ராசாவுக்கு விக்கிறதுல பாதி பங்கு வந்துடனும். எவ்வளவு கஷ்டப்பட்டு ஊழல் பண்ணி இருக்கார்.

அப்படியே உயிர்மை ஸ்டாலில் இருந்து வெளியே வந்த நான், என் கண்ணில் பட்ட அந்த போஸ்டரை பார்த்த பின்பு அப்படியே உறைந்து போனேன். அந்த போஸ்டர் உங்கள் பார்வைக்காக கீழே. NO confusion இவர் சிவாஜி இல்லை.

                                                      
கடைசியில் வீட்டிற்க்கு வந்த பின்பும் என் மனதை மிகவும் வருத்தமடைய செய்த விஷயம் "நம்பர் ஒன் எழுத்தாளர்" ம.வே.சிவகுமார் அவர்களின் ஒரு புத்தகம் கூட என் நண்பன் வாங்கவில்லையே என்பதுதான்.



விருத்தகிரி நமீதா திரை விமர்சனம்..... விரைவில்...