Jan 5, 2018

தறுதலைகளின் அம்மா



சினிமாவில் தறுதலை ஹீரோக்களுக்கு ரேங் போட்டால் சிவ கார்த்திகேயன் தான் கில்லியாய் வருவார். இரண்டாம் இடம் தனுசுக்கு கிடைக்கலாம். பின் விமல், ஆர்யா, ஜீவா, சிம்பு எல்லாம் பத்து இடங்களுக்குள் வருவார்கள்.

ஆனால் வெள்ளித்திரையில் இது போல தறுதலைகளை வதவதவென்று அதிகம் பெற்ற அம்மா யார் என்றால் அது சரண்யா பொன்வண்ணன் தான். அடுத்த இடம் ஊர்வசிக்கு. இவர்கள் இருவரின் கால்ஷீட்டும் இல்லையென்றால் தான் அந்த வாய்ப்பு மற்ற நடிகைகளுக்கு போகிறது. அந்த அளவிற்கு இருவரும் அந்த கேரக்டர்களுக்கு செமத்தியாய் செட்டான அம்பாசிட்டர்கள். நாசரை போல கண்டிப்பான அப்பாக்கள் இவர்கள் நடித்த படம் என்றால் அதை பார்க்காமல் தவிர்த்து விடலாம். இவர்கள் படத்தை பார்க்கும் நிஜ தறுதலைகளின் அம்மாக்கள், படத்தில் வருவது போல தன் பிள்ளையும் ஒரு நாள் முன்னேறி வெற்றி பெறுவான் என நப்பாசை கொள்கிறார்கள். அது நிஜத்தில் நடக்காது எனினும் சந்தோசமாய் படம் பார்த்து ஆறுதல் அடைந்து கொள்கின்றனர். அதனாலேயே தாய்மார்களின் ஆதரவுடன் இவ்வகை படங்கள் பெரிய ஹிட் ஆகிறது. சி.கா பெரிய ஹீரோவானதே இப்படி தான். வேலை இல்லா பட்டதாரி போல நடுவே கொஞ்சம் தூக்கலாக அம்மா சென்டிமென்டை கலந்து விட்டால் அம்மாக்கள் குபு குபுவென்று கண்ணீரை கொட்டி அமோக வெற்றியை அள்ளி கொடுப்பார்கள். இப்போது அப்பா செண்டிமெண்ட் படங்களும் பெருகி வருகின்றன. இருந்தாலும் தமிழ்நாட்டில் அம்மா சென்டிமென்டுக்கு அப்புறம் தான் எல்லாம்.

VIP படத்தில் வரும் "அம்மா அம்மா" போன்ற பாடலை ரிங் டோனாக வைத்திருப்பவர்களை கவனியுங்கள் தெரியும். மொடா குடிகார்களாகவும் ஊதாரிகளாகவும் இருப்பார்கள்.

தறுதலை மகனை பெற்ற அம்மாக்களுக்கு மட்டுமே தெரியும், தங்கத்தில் நகை வாங்கினால் மணப்புரம் பைனான்ஸ்க்கு சென்று விடுமென்று.


வேலைக்காரன்




சிவகார்த்திகேயன் நல்ல கேரக்டரில் நடித்த முதல் படம். வழக்கமாய் ஊதாரியாய், வேலைவெட்டியின்றி பெண்கள் பின்னால் அலைந்து மிரட்டி காதலிக்க வைக்கும் கேரக்டரிலேயே பார்த்து பழகிய நமக்கு இது கொஞ்சம் இன்ப அதிர்ச்சியாய் தான் இருக்கிறது. ஒருவேளை அவருக்கே அது போல நடித்து போரடித்திருக்கும். படம் இடைவேளை வரை நன்றாக தான் போகிறது. அதிலும் குப்பத்து ரவுடியிசத்தை கலாய்ப்பதெல்லாம் அதகளம். இது போல படத்திற்கு அளவான காதல் காட்சிகள். இடைவேளைக்கு பிறகான காட்சிகள் விமல் சொல்வது போல "இதெல்லாம் நம்பர மாதிரியாங்க இருக்கு?" என்பது போல் தான் இருக்கிறது. இருந்தாலும் அவர்கள் சொன்ன கான்செப்ட் அருமை. பணத்துக்காக தன் கம்பெனி செய்யும் தவறு எவ்வாறு நம் சுற்றத்தை பாதிக்கும், ஒவ்வொரு வேலைக்காரனும் அதை தடுக்க முடியவில்லை என்றாலும் அதை பற்றி வெளியில் புரணியாவது பேசலாம் என சொல்வது சிறப்பு.

அதையே நம் குடும்பத்திற்குள்ளும் எடுத்து கொள்ளலாம். ஊழல் செய்தோ லஞ்சம் வாங்கியோ சம்பாரிக்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகளை அந்தந்த குடும்ப உறுப்பினர்கள் கேள்வி கேட்டு திருத்தினாலே பெரிய மாற்றங்கள் நடக்கும். நம் நாட்டில் நடக்கும் அத்தனை அட்டூழியங்களுக்கும் காரணம் அதை செய்பவர்களின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் எதையும் கேட்காமல் அந்த பணத்தில் உண்டு கொழுத்து வாழ்ந்து வருவது தான். அவர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதால் தவறு செய்பவனுக்கும் குற்ற உணர்ச்சி எதுவும் ஏற்படுவதில்லை. ஊரில் கெத்தாக வலம் வருகிறான். தவறு செய்பவனை கூட மன்னித்து விடலாம். இவர்கள் தான் எல்லா பிரச்சனைகளுக்கும் முழு முதற் காரணம். "நீ தவறு செய்து சம்பாதித்த பணத்தில் வாழ்க்கையை நடத்த மாட்டோம்" என குடும்ப உறுப்பினர்கள் போராடினாலே அவன் திருந்தி விடுவான். குடும்பம் தான் வேர். அங்கே பிரச்னை சரியானால் மற்ற இடங்களில் தானாக தீரும். படத்தில் இதை பற்றி ஆழமாக பேசியிருந்தால் மிக சிறப்பாய் இருந்திருக்கும்.

கன்ஸயுமரிசத்தில் முழுகி உழலும் சிட்டி மக்கள் இந்த படத்தை பார்க்க, அவர்கள் வாங்கி வந்த ஒரு அடி பாப்கார்ன் பாக்கெட், கூல்ட்ரிங்ஸ் இதெல்லாம் தியேட்டரில் சாப்பிட்டு ஜீரணிக்க கொஞ்சம் கஷ்டமாய்தானிருக்கும்.

இடைவேளையில் ஐஸ்க்ரீம் கேட்ட குழந்தைகளுக்கு, பெற்றவர்கள் "இப்போ தான் படம் பார்த்த. அதுல பாய்சன் இருக்காம்" என்று சொல்லி பயமுறுத்தி வைத்தார்கள்.

படம் ஊரில் உள்ள லோக்கல் தியேட்டரில் தான் பார்த்தேன். கண்ட கண்ட விளம்பரங்கள் எதுவும் இல்லை. டிக்கெட் கூட ஐந்து நிமிடத்திற்கு முன் வாங்கினால் போதும். நிம்மதியாய் படம் பார்க்கலாம். மல்டிப்ளெக்ஸில் கிடைக்காத திருப்தி கிடைக்கிறது


Mar 4, 2017

சே+அட்டை



ஒரு பேஷனுக்காக சே.குவேராவின் டீ சர்ட்டுகளை அதிகம் அணிந்து இளைஞர்கள், போராளியான அவரை ஒரு பேஷன் மாடலாகவே  மாற்றிவிட்டார்கள். துரைப்பாக்கம் டோல் கேட் அருகில் உள்ள ஒரு துணிக்கடைக்கு பெயரே "சே பேஷன்ஸ்". கம்பீரமாய் பேனரில் புகை விட்டுக் கொண்டிருக்கிறார் சே.

சே பெயரில் ஒரு சலூன் ஆரம்பித்தாலும், இளைஞர்களிடையே அமோக வரவேற்பு இருக்கும் என்று கருதுகிறேன்.

'சே' யை கூகுளில் தேடினால், அவர் புகை பிடிக்கும் போட்டோ தான் அதிகம் வருகிறது. அவரது 'தம்' நண்பர் பிடல் காஸ்ட்ரோவும் அப்படி தான். இவர்கள் இருவரும் அதிகம் புரட்சி செய்தார்களா? இல்லை புகைப்பிடித்தார்களா? எனும் அளவுக்கு நமக்கு சந்தேகம் வருகிறது.

ஸ்டைலாக புகைப்பிடிப்பது போல் இருக்கும் இவரது போட்டோ, தமிழக இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருக்கும் என்பதால்,  இந்த டீசர்ட்டுகளை எதிர்த்து "ராமதாஸ் அன்ட் சன்ஸ்" கம்பெனி அறிக்கை விட முன் வர வேண்டும்.

சே குவேராவின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தின் அட்டை படத்தில், புகை பிடிப்பது போல இருக்கும் அவரது படத்துக்கு கீழே சிறிய எழுத்தில் "புகைப் பிடிப்பது, புற்று நோயை உண்டாக்கும் " என்று போடவும் தமிழக அரசு ஆணை இட வேண்டும். செயின் ஸ்மோக்கர்கள் புத்தகம் படிக்க மாட்டார்களா?

இங்கு, சமீபத்தில் இலக்கிய உலகில் நடந்த "அட்டைப்பட" சர்ச்சையை முன் வைக்கிறேன்.

என்னை பொறுத்த வரை புத்தகத்தின் அட்டைப்படம், அதன் கருத்தாக்கத்தை வெளிப்படுத்த வேண்டும்

புகை பிடிப்பதற்கும், புரட்சிக்கும் என்ன சம்பந்தம்?
அது படிக்க போகும் வாசகனை திசை திருப்பாதா?
சே-வின் கையில் இருக்கும் சுருட்டை எடுத்து விட்டு, ஒரு உடை வாளையோ, குறுந்துப்பாக்கியையோ(Short Gun) கொடுப்பது தானே பொருத்தமாகும். இல்லையெனில் புரட்சி தலைவர் விஜயகாந்தைப் போல சே-வின் கண்ணை சிவக்கவாவது வைக்க வேண்டும். அட்டையை பார்க்கும் போதே, புரட்சி உணர்வு தூண்டப் பட வேண்டும்.

பள்ளிக்கூடம் படிக்கையில், எனக்கு அடுத்த வகுப்பில் படிக்கும் எனது சகோதரியின் பாட புத்தகத்தையே ஒவ்வொரு வருடமும் பயன்படுத்த நேரிடும். பெரும்பாலும் அட்டையே இருக்காது. சில முறை, பொருளடக்கமும். அதனால் அறிவியல் தேர்வுக்கு, வரலாற்று புத்தகத்தை எடுத்து சென்று பெயிலான துயர வரலாற்றுச் சம்பவங்கள் என் வாழ்வில் நடந்துள்ளன.

அதனால் தான் சொல்கிறேன், அட்டைப்படம் முக்கியம். அட்டை அதை விட முக்கியம்.


Feb 10, 2017

கிச்சன் கிங்

கீற்றுவில் வெளியான எனது பதிவு




ஆண்களில் பெரும்பாலானோர், கல்யாணத்துக்கு முன்னரே நன்கு சமைக்க கற்றுக் கொண்டு விடுகிறார்கள். வரன் தேடுகையில், சமையல் கலையை 'எக்ஸ்ட்ரா கரிக்குலர்' ஆக்டிவிட்டியில் போட்டு கொள்ளலாம். பெண் பார்க்கும் படலத்தின் போது "பையனுக்கு சமைக்கத் தெரியுமா?" என்று நேரடியாகக் கேட்க முடியாமல், "பையன் ஹோட்டல்ல 'தான்' சாப்பிடுறாரா?" என்று அழுத்திக் கேட்டு சாமார்த்தியமாய் பதில் வாங்கி விடுகிறார்கள் பெண் வீட்டார். மேலும் "எங்க பொண்ணு சமையல் கட்டுக்குள்ளே தண்ணி குடிக்க மட்டும்தான் வருவா" என்று சொல்லிவிட்டு பெருமை பொங்க சத்தமாய் சிரிக்கிறார்கள். சமையலும், 'சமையல் மந்திரமும்' ஆண்கள் தான் கற்றுத் தர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் பெண்கள். கொஞ்சம் தெரிந்தாலும், எதுவுமே தெரியாதது போல் தான் நடிப்பார்கள்.

வேளச்சேரி கிராண்ட் மாலுக்கு எதிரில் இருக்கும் 'அப்பா சுட்ட தோசை' என்ற ரெஸ்ட்டாரெண்டே தற்போது சூழ்நிலை மாறி விட்டது என்பதைக் கண்கூடாக உணர்த்துகிறது.

ஆனால் நான், கடலைப் பருப்புக்கும், துவரம் பருப்புக்கும் வித்தியாசம் கண்டு பிடிக்கத் தெரியாத அப்பாவி. சமையல் ஷோ, எனக்கு பாகற்காய். கிச்சன் சூப்பர் ஸ்டார் கூட, அதில் வரும் தக்காளி பிகர்களுக்காக தான் பார்த்திருக்கிறேன். கடைசி வரை கிரிஜாஸ்ரீக்காக 'சமையல் மந்திரம்' பார்த்த அனுபவம் மட்டுமே இருந்ததால், திருமணத்திற்குப் பிறகு என் மனைவி 'விம் பார்' யை என் கையில் கொடுத்து, இந்த கருப்பு எம்ஜியார் குண்டாவெல்லாம், வெள்ளை எம்ஜியார் போல பளபளவென்று மின்னவேண்டும் என்று சொல்லி விட்டாள். தினமும் அவள் சமைத்தவுடன், ஆபிஸ் கிளம்புவதற்குள் பாத்திரத்தை எல்லாம் கழுவி விட்டுச் செல்ல வேண்டும். எங்களுக்குள் சிறு ஊடல் வந்தால், அன்று வேண்டுமென்றே கழுவாமல் சென்று அவளுடன் 'அறப்போர்' செய்வேன். இரவு வீட்டுக்கு வந்து எண்ணையில் போட்ட கடுகாய் வெடிப்பாள். இரவு 'ஒத்துழையாமை போராட்டம்' நடத்துவாள்.

இதைத் தவிர, காய்கறி நறுக்குவது, தேங்காய் துருவித் தர சொல்வது என ஒரு மருமகளைப் போல வேலை வாங்குவாள். ஒரு பக்கம் கண்ணை கசக்கிக் கொண்டு நான் வெங்காயம் வெட்டி கொண்டிருக்கும் போது, அவள் அந்தப் பக்கம் மாமியார் கணக்காய் சீரியல் பார்த்து கண்ணு வேர்த்துக் கொண்டிருப்பாள். அவ்வப்போது குக்கர் விசில் எண்ணும் வேலையும் கொடுக்கப் படும். புத்தகம் எழுதி, புக்கர் விருது வாங்கும் கனவையெல்லாம் தேங்காயைப் போல இரண்டாய் உடைத்து விட்டாள். 'வீட்டுச் சாப்பாடு' எனும் ஒரே காரணத்திற்காக இதையெல்லாம் பொறுத்துக் கொண்டேன்.

திருமண பந்தத்தின் உன்னதமே, இருவரின் நிறை குறைகளை ஏற்றுக் கொண்டு, பரஸ்பரம் உதவி செய்து கொள்வது தான். இப்படியாக எனக்கு அவள் சமையலைக் கற்றுத் தர, அவளுக்கு நான் சமையல் மந்திரத்தைக் கற்றுத் தந்தேன்.

மந்திரம் வேலை செய்து அவள் ஊருக்குச் சென்ற பின், கற்றுக் கொண்ட வித்தையெல்லாம் மொத்தமாக இறக்க முடிவு செய்து கிச்சனுள் நுழைந்தேன். சிறு வயதில் எக்ஸாமுக்கு செல்லும் முன் சரஸ்வதி சாமியைக் கும்பிட்டு விட்டுப் போகச் சொல்வார்கள். மனப்பாடம் செய்தது மறந்து விட்டால், 'சரசு' கூட இருந்து பிட் எடுத்துக் கொடுக்கும் என்ற நம்பிக்கை. அது போல நான் தினமும் அடுப்பை ஆன்  செய்யும் முன் அந்த அன்னபூரணி தெய்வத்தை வணங்கி விட்டு தான் தொடங்குவேன். அன்னபூரணியின் அருளில் தினமும் நன்றாகவே சமைப்பதாகத் தோன்றியது. என் வீட்டு ஓனர் அவ்வப்போது எட்டிப் பார்த்து "ஏன்டி, இந்த தம்பி சமைக்கும்போது எப்புடி வாசம் வருது! நீ ஒரு நாளாவது இப்படி சமைச்சிருக்கியா?" என்று தன் மனைவியைப் பார்த்துக் கேட்பார். இந்தப் பெரிசு நம்மைக் கலாய்க்கிறதா? என்று சந்தேகமாய் இருக்கும். அதனால், ஒருநாள் சமைத்ததில் கொஞ்சம் எடுத்துக் கொண்டு போய் அவரிடம் கொடுத்து விட்டு வந்தேன். இப்போதெல்லாம் அந்த ஓனர் என் சமையலில் மூக்கை நுழைப்பதில்லை. சாதாரணமாய்ப் பேசும் போது கூட, ஆங்கிலப் படத்தில் வருவது போல, முகம் கொடுக்காமல் வேறு பக்கம் திரும்பிக் கொண்டு "என்னப்பா ஆபிசுக்குக் கிளம்பிட்டியா?" என்று கேட்கிறார்.

தற்போது, மனைவி ஊரிலிருந்து வரட்டும் என்று காத்திருக்கிறேன்.

அடுத்த புத்தகக் கண்காட்சிக்கு, நளபாகம் தயார் ஆகிக் கொண்டிருக்கிறது. தோழர், உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.


Dec 27, 2016

S3 (பாயிலர் அலர்ட்)

இந்த பதிவு, சிங்கம் 3 டீசர் பார்த்து பார்வை மற்றும் கேட்கும் திறன் இழந்தவர்களுக்காக சமர்பிக்கப் படுகிறது.



சிங்கம் 3 வழக்கம் போல ஆக்சன் அதிரடி படம் என்று நினைப்பவர்களுக்கு ஒரு பெரிய சர்பிரைஸ் காத்திருக்கிறது. ஆக்சன் படமென்று மக்களை நம்ப வைப்பதற்காக, ஹரி கொஞ்சம் செலவு செய்து டீசர் வெளியிட்டிருக்கிறார். படத்தில் சூரி, ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி என இத்தனை பேர் இருப்பதை வைத்தே கொஞ்சம் யூகிக்கலாம்.

ஆமாம், இது பக்கா ரொமான்டிக் காமெடி மூவி. இயக்குனர் பேரரசுவை போல, ஹரியும் படத்தின் ஆரம்பத்தில் திரையில் தோன்றி, "யாரும் நெனச்சு பாக்கலைல? கர்ச்சீப்ல கண்ணை துடைச்சு கிட்டே, குலுங்கி குலுங்கி சிரிச்சு பீல் பண்ற மாதிரி, ஒரு ரொமான்டிக் காமெடி படம் கொடுப்பேன்னு யாரும் நெனச்சு பாக்கலைல?" என்று பன்ச்சை தெறிக்க விட்ட பின் தான் டைட்டில் கார்டே வருகிறது.

இம்முறை ஸ்ருதி ஹாசனை சேர்த்து கொண்டு, முதன் முதலில் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் செய்திருக்கிறார். கதையில் அனுஷ்கா, சூர்யா, ஸ்ருதி ஹாசனுக்கிடையே ஒரு அருமையான முக்கோண காதல் கதை உள்ளது.
குழந்தை பிறப்பை வழக்கம் போல தள்ளிப் போட்டு விட்டு, துரை ஸ்டேஷனில் ஓவர் டைம் பார்க்க, தினமும் பேஸ்புக்கில் காலம் கழிக்கிறார் அனுஷ்கா.

அப்போது ஃபேக் அக்கௌன்ட் வைத்து பேஸ்புக்கில் பிகர்களை மடக்கும் ஸ்ருதிஹாசனிடம் சாட்டிங்கில் மாட்டுகிறார். தனிமையில் வாடும் அனுஷ்க்காவை மெல்ல மெல்ல பேசி பேசியே வழிக்கு கொண்டு வருகிறார். அதற்கு சாருவின் சாட் ஹிஸ்டரியிலிருந்து சில குறிப்புகள் எடுத்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் Auto login ஐ தெரியாமல் ஆன் செய்து வைத்திருந்த அனுஸ்காவின் பேஸ்புக்கை தற்செயலாக பார்த்து கொண்டிருந்த துரை சிங்கத்திற்கு, ஹாசனிடமிருந்து "Hi Dear, What are you wearing now?" என்று மெசேஜ் வர, உடனே தான் அணிந்திருந்த நண்டு மார்க் லுங்கியை (விளம்பரம்) குனிந்து பார்த்து விட்டு, பின் அது தனக்கு அனுப்பிய மெசேஜ் இல்லை என்று தெரிந்து அலர்ட் ஆகிறார்.

படத்தில் ஹாசனுக்கும், அனுஷ்காவுக்கும் ஒரு மஜாவான டூயட் இருக்கிறது, ஒரு நீளமான லிப் கிஸ் உட்பட. கடைசியில் அனுஷ்கா யாருக்கு என்பதில் துரை சிங்கத்துக்கும், ஸ்ருதி ஹாசனுக்கும் இடையில் பெரிய பைட்டே உண்டு. மொத்தத்தில் கொரியன் பட தரத்தில் நிறைவான சந்தோசத்தை கொடுக்கும் பீல் குட் குடும்ப மூவி.

சிங்கம் 2 - விமர்சனம்