Feb 18, 2011

வடை, பக்கோடா, போண்டா - மினி ஆபாயில் (அப்புடியே சாப்பிடுங்க)

வடை, பக்கோடா, போண்டா இந்த மூன்றிற்கும் என்ன சம்பந்தம் இருக்கு? படியுங்கள், விடை கடைசியில்.


ன்கூட தங்கி இருக்கும் வினோத் என்ற பிரெண்டுக்கும் எங்கள் அபார்ட்மெண்டு ஆண்டிகளுக்கும் "ரொம்ப நாளாக பழக்கம்" இருக்கு. எப்படி என்றால், இவன் தினமும் மெகா சீரியல் பார்க்கும் வழக்கம் கொண்டவன். கலைஞர் டிவி, ஜெயா டிவி என்ற பாகுபாடு எல்லாம் இவனுக்கு பார்க்க தெரியாது. மிகவும் அப்பாவியாய் எல்லா டிவி சீரியலையும் உட்கார்ந்து அமைதியாய் பார்த்து ரசிப்பான். அந்த ஆண்டிகள் ஏதோ ஒரு எபிசொட் பார்க்க தவறினால் இவனிடம் தான் வந்து அன்றைக்கு என்ன நடந்தது என்று கதை கேட்டு போவார்கள். அதனால் எங்கள் வீட்டிற்கு ஆண்டிகளின் படையெடுப்பு அடிக்கடி நடக்கும். "ரொம்ப நாளாக பழக்கம்" என்றதும் நீங்கள் அவனை பற்றி தப்பாக  நினைத்திருந்தால் உங்கள் தலையில் நீங்களே குட்டி கொள்ளவும்.

"ஏன்டா இவ்வளவு விரும்பி பார்க்கறியே பேசாமல் சீரியலில் நடிக்க போய்விட வேண்டியதுதான?" என்றேன் தற்செயலாய் அவனிடம். "இம், நான் ரெடி" என்றான். சீரியல் இயக்குனர்கள் அல்லது தயாரிப்பாளர்கள் யாராவது இதை படித்துக்கொண்டிருந்தால் தயவுசெய்து இவனுக்கு ஒரு வாய்ப்பை கொடுங்கள். "கொழுக் மொழுக்" என்ற அங்கிள் கேரக்டருக்கு அம்சமாக பொருந்தி வருவான்.


  
நீங்கள் பேச்சுலராக இருந்து கூட படித்த அல்லது வேலை செய்கிற பசங்களோடு தங்கி இருந்தால் "ட்ரீட் (Treat) என்கிற வார்த்தையை அதிகமாக மந்திரம் போல உங்கள் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். கடந்த வாரம் என் அக்கா பையனுக்கு என் மடியில் வைத்து மொட்டை போட்டு காது குத்தினார்கள்.

அதற்கு ட்ரீட் வைக்க சொல்லி நண்பர்கள் எனக்கு மொட்டை போட பார்த்தார்கள். "இப்போது பணம் இல்லை" என்று அடுத்த மாதம் கொடுப்பதாய் சொல்லி அவர்களுக்கு காது குத்தியுள்ளேன்.



விலைவாசி உயர்வு, ஊழல் நாடகம் இவற்றையெல்லாம் தாண்டி கவலைப்பட இப்போது இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன. கிரிக்கெட் உலக கோப்பை, தேர்தல், இலவசம். 

பரம ஏழை சச்சினுக்காக இந்திய அணி உலக கோப்பையை வெல்லுமா? 
அவரின் பட வெளியீட்டு பிரச்சனையையே தீர்க்க முடியாமல் கஷ்டபட்ட காவலன் விஜய்,  போராட்டம் நடத்தி மீனவர்களின் பிரச்சனையை தீர்ப்பாரா?
வல்லரசு விஜயகாந்த் தேர்தலில் வென்று நல்லரசு அமைப்பாரா?

அன்று ஒரு நாள் பஸ்சில் சென்று கொண்டிருந்தேன். அப்போது வெளியே ஒரு சேரி போன்ற குடிசை பகுதியில், விஜயகாந்தின் தே.தி.மு.க. கட்சியின் பெரிய சைஸ் போஸ்டர் ஒன்று ஒரு குடிசை வீட்டின் மேற்கூரையாக வைக்கப் பட்டு அவர்களை கடும் குளிரிலிருந்தும் வெயில், மழையில் இருந்தும் காப்பாற்றி கொண்டிருந்தது.

விஜயகாந்தின் விருத்தகிரி படத்தில் அடிக்கடி ஒரு வசனம் வெவ்வேறு கதா பாத்திரங்களால் பேசப் படும். 

"அரசு அதிகாரியா இருக்கும் போதே பொது மக்களுக்கு இவ்வளவு நல்லது பண்றாரே, இவருக்கு கீழே அரசாங்கம் வந்துச்சுன்னா எவ்வளவு நல்லது பண்ணுவாரு." 

அது மாதிரி, விஜயகாந்தின் கட்சி போஸ்டரே ஏழைகளை காக்கும் பொது விஜயகாந்த் ஆட்சிக்கு வந்தார்ன்னா, என்னமா காப்பாத்துவாரு! 


சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்பது எனக்கு இதுவரை ஓரளவுக்கு நல்ல அனுபவமாகவே அமைந்துள்ளது. ஆனால் கடந்த வாரம், சில வருடங்களாய் கவிதை என்ற பெயரில் ஏதோ கிறுக்கி வரும் என்னை மிகவும் வெட்கமடைய செய்தது, ரயிலில் கிறுக்கி வைக்கப்பட்டிருந்த அந்த கவிதை.


தட்டி போட்டா வடை.
அப்படியே போட்டா பக்கோடா.
உருட்டி போட்டா போண்டா.

எனக்கு ஏன் இப்படி ஒரு கவிதை எழுத தோணவில்லை.

போண்டா போச்சே!.

இந்த கவிதை படித்ததும் வடை, பக்கோடா, போண்டா இந்த மூன்றும் என் கண்முன்னே சிறிது நேரம் வந்து என் பசியை தூண்டியது. மூன்று வரிகளில் ஒரு முத்தான கவிதையை எழுதிய அந்த கவிஞர் ஏனோ கவிதைக்கு கீழே அவர் பெயரை எழுதியிருக்கவில்லை. அவருக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை "பாராட்டு" என்பதாக கூட இருக்கலாம்.

பொதுவாக கழிப்பிட சுவர்களில் உள்ளதை போன்றே ரயிலின் உட்புறத்திலும் Nithyaanantha Loves Ranjitha, Prabudeva Loves Nayan என்பது மாதிரியான கல்வெட்டு வாசகங்கள் தான் நிறைய காணப்படும். ஆனால் இதுபோன்று ஒரு தத்துவ கவிதை எழுதி இவர் அந்த இலக்கணத்தை உடைத்துவிட்டார். Hats Off  to him.

நெடுந்தூர ரயில் நிலையங்களை போல, மெட்ரோ ரயில் நிலையங்கள் அவ்வளவாக துர்நாற்றம் வீசுவதில்லை. கழிப்பிட வசதி இல்லை என்பதால். ஆனால் இன்னுமொரு பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. ரயிலில் ஏறி அமர்ந்தவுடன் பார்த்தேன் ஒரு பெண்  ஐபாட்(ipad) -ல் பாட்டு கேட்டு கொண்டு தலையையும் லேசாக காலையும் ஆட்டிக்கொண்டிருந்தாள். சில பேர் எதையும் கேட்காமல் காலை மட்டும் ஆட்டிக்கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் நானும் காலை ஆட்ட தொடங்கி விட்டேன். காரணம். கொசுக்கடி.

ஓடும் ரயிலில் பறந்து பறந்து கடிக்கின்றது. பிகர்களுக்கு எதிரே கடிக்கின்ற கொசுவை அடிக்கவும் அசிங்கமாக உள்ளது. பத்தாம், பனிரெண்டாம் போது தேர்வு வரும் போது தமிழ் தினசரி செய்தித்தாள்களில் போடுவார்கள். "தேர்வுகளில் காப்பி அடிப்பவர்களை பிடிக்க தனி பறக்கும் படை அமைக்கப் பட்டுள்ளது" என்று. இனிமேல் தயவு செய்து பறக்கும் படை என்ற வார்த்தையை அதற்கு உபயோகப் படுத்தாதிர்கள்.