Jan 5, 2018

அம்மாபிள்ளை அர்னால்டு
அமெரிக்க மாகாணத்தின் அம்மா பேரவையின் தலைவர் அர்னால்டு எந்திரன் 1.0 வெளியீட்டுக்கு வந்து அம்மாவுடன் அன்பு குலாவி நலம் விசாரித்து விட்டு சென்றார். இப்போது 2.0 ரிலீசுக்கு வந்தவர் அம்மாவை காண ஏர்போர்ட்டில் இருந்து நேராக போயஸ்கார்டானுக்கு வண்டியை விடுகிறார். ஆள் அரவம் அதிகம் இல்லாமல் காட்சியளிக்கும் கார்டனை பார்த்தவுடன் லேசாக அதிர்ச்சி அடைகிறார். அம்மாவின் அன்பு மகன் அர்னால்டுக்கு வந்ததை கண்டு அவருக்கு ஆறுதல் சொல்ல பிடல் காஸ்ட்ரோவும், சேகுவேராவும் பம்மிக்கொண்டே ஓடி வருகின்றனர். உள்ளே நுழைந்ததும் அம்மாவின் உருவ படத்துக்கு மாலை போட்டதை பார்த்த டெர்மினேட்டரின் இரும்பு இதயம் நொறுங்குகிறது. "டேய் என்னடா போட்டோவை வச்சிருக்கீங்க? அம்மாவை என்னடா பண்ணுனீங்க?" என்று கேட்க, "சின்னம்மா, நம்ம அம்மாவை ஆக்சிஜன் கொடுக்காம கொன்னுட்டா. அம்மாவை கொண்டு போய் செய்ய வேண்டியதெல்லாம் செஞ்சாச்சு" என்றனர் இருவரும் கோரஸாக. "யாரை கேட்டு கொண்டு போனீங்க, அம்மாவோட கால பிடிச்சு ஒரு தடவையாச்சும் அழுத்திருப்பனே" என்று கதற,

 "கால கூட விட்டு வைக்கல பாவி பசங்க" என்று துண்டை வாயில் வைத்து கொண்டு அழுதனர். "அதுவரைக்கும் நீங்க என்னடா பண்ணுனீங்க?" என்று கேட்க எல்லோரும் மௌனமாக நின்றனர். ஆத்திரம் அடைந்த அர்னால்டு டெர்மினேட்டரில் பயன்படுத்திய பெரிய கன்னை பிடலின் திருநீறுக்கு நடுவில் உள்ள சிகப்பு பொட்டில் வைத்து மிரட்டி கேட்டார். அப்போது "நான் தர்ம யுத்தம் செய்தேன்" என பிடல் உளற, "நான் காபியில் மிக்ஸர் போட்டு சாப்பிட்டேன்" என்று சொல்லி சேகுவாரா சிரிக்க, "அம்மா இட்லி சாப்பிட்டதா பொய் சொன்னோம்" என திண்டுக்கல் ரீட்டா சொல்ல, "வெளியில் சேர் போட்டு உட்கார்ந்திருந்தோம்" என சறுக்கு மரம் சொல்ல, ஒவ்வொருவராய் உண்மையை ஒப்பு கொண்டு வரிசையாய் காலில் விழுந்தனர்.

இவர்களை பிறகு பார்த்து கொள்ளலாம் என மெரினா பீச்சுக்கு புறப்பட்டு போய், சமாதியை கட்டி புரண்டு அழுகிறார் அர்னால்டு. தினகரன் பின்னே சென்று தோளை தட்டி, "தம்பி, இவரும் உங்க ரிலேஷன் தான், ஆனா உங்க மம்மி சமாதி அங்க இருக்கு பாரு" என்று கை காட்ட, எம்ஜியார் சமாதியிலேயே எல்லா எமோஷனையும் கொட்டி தீர்த்ததால், அம்மா சமாதிக்கு சென்று வாய் திறக்கும் போதும் நா வறண்டு விட்டது. என்ன இருந்தாலும் ஹாலிவுட் ஹீரோ அல்லவா? துரைசிங்கத்தை போல எதிரிகளிடம் நாக்கு வரலாமல் பேச முடியாது. அதிலும் அர்னால்டு, அவர் படத்திலியே அதிகம் பேச மாட்டார்.

அந்த நேரம் "இந்தாங்க இத குடிங்க" என்று ஒரு ஆண் குரல் கேட்க, அங்கே சுருதி ஹாசன் ஒரு பேண்டா பாட்டிலை நீட்டுகிறார். அதை வாங்கி குடித்தவர் கொண்டு வந்த கன்னை சமாதியின் மேல் வைத்து விட்டு "அதிமுக கட்சியை காப்பாற்றி, அம்மாவை கொன்ற தீய சக்திகளை பழி வாங்கி தீருவேன்" என்று ஓங்கி சபதம் போட கையை தூக்கிய போது சமாதியை கவனிக்கிறார். ஆங்காங்கே நிறைய விரிசல்களுடன் காண படுகிறது சமாதி. வெகுண்டெழுந்த அர்னால்டு "பிக்காளி பசங்களா, அம்மாவுக்கு சமாதி கட்றதுல கூட ஊழல் பண்ணீட்டீங்களேடா?" என்று சொல்லி கொண்டே கன்னை எடுத்து அனைவரையும் சுட போக, பதறியபடி அவர் காலில் விழுந்த அவர்கள் "அது சின்னம்மா போட்ட சாபத்தால் உடைஞ்சது" என்று தெரிவிக்கின்றனர். "சரி, ஏண்டா எதுக்கெடுத்தாலும் கால்ல விழறீங்க" என கேட்க, "ஓல்ட் ஹேபிட் ஆர் டை ஹார்ட்" என பிடல் பட்டர் ஆங்கிலத்தில் பேசுகிறார். "ஒரு பொம்பள சபதம் போட்டு இப்படி தரையை ஒடச்சுருக்கா. அப்போ எவ்ளோ பெரிய வில்லியா இருப்பா?" என உள்ளுக்குள் சின்னம்மாவை நினைத்து லேசாக உதறல் எடுக்கிறது அர்னால்ட்டுக்கு. டெர்மினேட்டரின் முதல் பாகத்தில் வரும் வில்லியின் மறுஉருவமாக சின்னம்மா இருக்கலாமோ என யோசித்தபடி எந்திரன் ரிலீஸ் பங்க்சனுக்கு நடையை கட்டுகிறார். ஆனாலும் அவர் மனதில் ஒரு கேள்வி மட்டும் குடைந்து கொண்டே இருந்தது.

"அப்போ அந்த இட்லியை சாப்பிட்டது யாரா இருக்கும்?"


Big Boss

போன வாரம் கிங்ஸ்மேன் முதல் பார்ட் (2104) பார்த்து கொண்டிருக்கும் போது முகேஷ் தான் நியாபகத்துக்கு வந்தார். கேன்சரால் செத்து போன நோயாளி முகேஷ் இல்லை. அனைவருக்கும் இலவசமாய் நெட்பேக்குடன் சிம் கொடுத்து பேஸ்புக்கில் புரட்சியை கொண்டு வந்த முகேஷ் அம்பானி தான். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் முகேஷின் பங்கு அளப்பரியது. போராளி ஜூலி அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறார் என்றால் அது மிகையல்ல.

கிங்ஸ்மென்னில் வரும் வில்லன் ஒரு பெரும் தொழில் அதிபர். அவர் மக்கள் அனைவருக்கும் இலவசமாக ப்ரீ கால், ப்ரீ நெட் வசதியுடன் சிம்மை இலவசமாக தருகிறார். கிட்டத்தட்ட இந்தியாவில் நடந்தது போல மக்கள் இரவெல்லாம் நின்று அடித்து பிடித்து வாங்குகிறார்கள். அவருடைய பிளானே, சேட்டிலைட்டை பயன் படுத்தி அந்த சிம்மின் மூலம் நியுரோலொஜிக்கல் அலையை பரப்பி மக்களை ஒரு பைத்தியக்கார மனநிலைக்கு (RSS கும்பலை போல) கொண்டு சென்று ஒருவரை ஒருவர் அடித்து கொண்டு சாக விட்டு, அதன் மூலம் சுற்று சூழலையும் இந்த பூமியையும் மக்கள் அழிப்பதில் இருந்து காப்பாற்றுவது தான் (அப்ப அவர் ஹீரோ தான?). பெரும் அரசியல் புள்ளிகள், பணக்காரர்கள் போன்ற குறிப்பிட்ட மக்களை மட்டும் தன் பக்கம் சேர்த்து கொள்கிறார். அவர்களுக்கெல்லாம் காதின் கீழே ஒரு ஆப்பரேசன் செய்து ஒரு சிப்பை பொருந்துகிறார். மோடியை குளோசப்பில் கவனித்தால் தெரியும், காதின் கீழே ஒரு தழும்பு இருக்கும்.

கார் Pooling செய்வது,
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காமல் இருப்பது,
ஆபிஸில் Go Green விழா கொண்டாடுவது,
வீட்டில் கணபதி ஹோமம் செய்யாமல் இருப்பது,
அதிகம் கேஸ் விடுவதை தவிர்க்க, நான்வெஜ் சாப்பிடாமல் தவிர்ப்பது,
வெஜ் ஒன்லி போர்டை கேட்டில் மாட்டுவது,
பேலியோவை எதிர்ப்பது,

இதெல்லாம் அதிக பலன் தராது, சுத்த வேஸ்ட் என்கிறார்.

'பிக்பாஸ்' முகேஷ் எதற்கு அனைத்தையும் இலவசமாக தருகிறார் என்று நீங்களும் யோசிக்காமல் வாங்கி யூஸ் செய்ய ஆரம்பித்து விட்டீர்கள். ஜியோ வாடிக்கையாளர்களே, கவனமாக இருங்கள். எந்நேரமும் ஜியோ சேட்டிலைட் உங்கள் சிம்மை 'ட்ரிகர்' செய்யலாம்.

ஜியோ சிம் வாங்கி மோடியின் கிளீன் இந்தியா திட்டத்தை கலாய்த்து மீம் போடுபவர்களுக்கு தெரியாது, மோடியின் கிளீன் இந்தியா திட்டமே இனிதான் ஆரம்பமென்று.

நான் சொல்வதெல்லாம் வேடிக்கையாக இருக்கலாம். போன மாதம் வரை தமிழ்நாட்டை அடிமை படுத்தி வைத்திருந்த பிக்பாஸ் தயாரித்த நிறுவனம் கூட முகேஷ் உடையது தான். அவருக்கு எப்படி மக்களை ஆட்டு மந்தை கூட்டங்கள் போல மாற்றுவது என்று தெரியும்.

காசு வைத்து கொண்டு இலவசத்திற்கு அலைபவர்கள் பூமிக்கு எக்ஸ்டரா லக்கேஜ் தான்.


தியாக தலைவிகள்

அது சென்னையில் வெள்ளம் வந்த சமயம். மக்கள் மின்சாரம் இல்லாமல் இருட்டில் மிகுந்த கஷ்டத்திற்கு உள்ளாகினர். மெழுகுவர்த்தி சப்ளையும் போதவில்லை. மக்கள் படும் துன்பத்தை கண்டு, வெகுண்டெழுந்த அம்மா தன் அரசியல் வாழ்க்கையை தியாகம் செய்து விட்டு, சொத்து குவிப்பு வழக்கில் தானே விருப்பத்துடன் சிறைக்கு சென்றார். இரவு பகலாக மெழுகுவர்த்தி தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டார். சிறை நிர்வாகமும் அம்மா விரும்பும் போது, சிறையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி கொள்ளலாம் என்று அறிக்கை விட்டது. அயராது உழைத்ததில் அவரின் உடல்நிலை மோசமாகி அப்பல்லோவில் சேர்ந்து இட்லி கிடைக்காமல் தன் இன்னுயிரை நீத்தது நம் அனைவருக்கும் தெரியும். அம்மா இறந்த பின் அவருடன் உடன்கட்டை ஏற துணிந்த, அவரது உடன்பிறவா தோழியான சின்னம்மாவும் அம்மாவின் வழியே சிறைக்கு சென்று, மெழுகுவர்த்தி உருட்டி கொண்டிருக்கிறார். ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி அடைந்ததில் அம்மாவுக்கும் முக்கிய பங்கு உண்டு. இனி ஒரு கேண்டில் லைட் போராட்டமோ அல்லது கேண்டில் லைட் டின்னரோ உங்களுக்கு அம்மாவின் நியாபகம் கண்டிப்பாக வர வேண்டும். ஒவ்வொரு அரிசியிலும் விவசாயின் பெயர் எப்படி எழுதப் பட்டிருக்கிறதோ அது போல நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு மெழுகுவர்தியிலும் அம்மாவின் பெயர் இருக்கும். அம்மா செய்த மெழுகுவர்த்தியை கொண்டே, அம்மாவின் உண்மை தொண்டர்கள் அம்மாவுக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலியை அனுசரித்த கொடுமையை எப்படி விவரிப்பது? என் நெஞ்சம் வெடித்து விட்டது.
"மக்களால் நான். மக்களுக்காக நான்" என்பதில் எவ்வளவு உண்மை இருக்கிறது!
அம்மாவின் தியாகம், மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு ஒப்பானது. மெழுகுவர்த்திக்கு எக்ஸ்பைரி டேட் இல்லை. அம்மாவுக்கு மறைவு இல்லை. என்றும் தமிழக மக்களின் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டு இருப்பார்.
அம்மாவை யாரும் கொல்ல வில்லை. மெழுகுவர்த்தி மக்களுக்காக தன்னையே எரித்து கொண்டது.
அம்மா ஒரு மெழுகுவர்த்தி. சின்னம்மா ஒரு மெழுகுவர்த்தி.
அடுத்த தேர்தலுக்கு இரட்டை மெழுகுவர்த்திக்கு வாக்களித்து நன்றிக்கடன் செலுத்துங்கள்.


தறுதலைகளின் அம்மாசினிமாவில் தறுதலை ஹீரோக்களுக்கு ரேங் போட்டால் சிவ கார்த்திகேயன் தான் கில்லியாய் வருவார். இரண்டாம் இடம் தனுசுக்கு கிடைக்கலாம். பின் விமல், ஆர்யா, ஜீவா, சிம்பு எல்லாம் பத்து இடங்களுக்குள் வருவார்கள்.

ஆனால் வெள்ளித்திரையில் இது போல தறுதலைகளை வதவதவென்று அதிகம் பெற்ற அம்மா யார் என்றால் அது சரண்யா பொன்வண்ணன் தான். அடுத்த இடம் ஊர்வசிக்கு. இவர்கள் இருவரின் கால்ஷீட்டும் இல்லையென்றால் தான் அந்த வாய்ப்பு மற்ற நடிகைகளுக்கு போகிறது. அந்த அளவிற்கு இருவரும் அந்த கேரக்டர்களுக்கு செமத்தியாய் செட்டான அம்பாசிட்டர்கள். நாசரை போல கண்டிப்பான அப்பாக்கள் இவர்கள் நடித்த படம் என்றால் அதை பார்க்காமல் தவிர்த்து விடலாம். இவர்கள் படத்தை பார்க்கும் நிஜ தறுதலைகளின் அம்மாக்கள், படத்தில் வருவது போல தன் பிள்ளையும் ஒரு நாள் முன்னேறி வெற்றி பெறுவான் என நப்பாசை கொள்கிறார்கள். அது நிஜத்தில் நடக்காது எனினும் சந்தோசமாய் படம் பார்த்து ஆறுதல் அடைந்து கொள்கின்றனர். அதனாலேயே தாய்மார்களின் ஆதரவுடன் இவ்வகை படங்கள் பெரிய ஹிட் ஆகிறது. சி.கா பெரிய ஹீரோவானதே இப்படி தான். வேலை இல்லா பட்டதாரி போல நடுவே கொஞ்சம் தூக்கலாக அம்மா சென்டிமென்டை கலந்து விட்டால் அம்மாக்கள் குபு குபுவென்று கண்ணீரை கொட்டி அமோக வெற்றியை அள்ளி கொடுப்பார்கள். இப்போது அப்பா செண்டிமெண்ட் படங்களும் பெருகி வருகின்றன. இருந்தாலும் தமிழ்நாட்டில் அம்மா சென்டிமென்டுக்கு அப்புறம் தான் எல்லாம்.

VIP படத்தில் வரும் "அம்மா அம்மா" போன்ற பாடலை ரிங் டோனாக வைத்திருப்பவர்களை கவனியுங்கள் தெரியும். மொடா குடிகார்களாகவும் ஊதாரிகளாகவும் இருப்பார்கள்.

தறுதலை மகனை பெற்ற அம்மாக்களுக்கு மட்டுமே தெரியும், தங்கத்தில் நகை வாங்கினால் மணப்புரம் பைனான்ஸ்க்கு சென்று விடுமென்று.


வேலைக்காரன்
சிவகார்த்திகேயன் நல்ல கேரக்டரில் நடித்த முதல் படம். வழக்கமாய் ஊதாரியாய், வேலைவெட்டியின்றி பெண்கள் பின்னால் அலைந்து மிரட்டி காதலிக்க வைக்கும் கேரக்டரிலேயே பார்த்து பழகிய நமக்கு இது கொஞ்சம் இன்ப அதிர்ச்சியாய் தான் இருக்கிறது. ஒருவேளை அவருக்கே அது போல நடித்து போரடித்திருக்கும். படம் இடைவேளை வரை நன்றாக தான் போகிறது. அதிலும் குப்பத்து ரவுடியிசத்தை கலாய்ப்பதெல்லாம் அதகளம். இது போல படத்திற்கு அளவான காதல் காட்சிகள். இடைவேளைக்கு பிறகான காட்சிகள் விமல் சொல்வது போல "இதெல்லாம் நம்பர மாதிரியாங்க இருக்கு?" என்பது போல் தான் இருக்கிறது. இருந்தாலும் அவர்கள் சொன்ன கான்செப்ட் அருமை. பணத்துக்காக தன் கம்பெனி செய்யும் தவறு எவ்வாறு நம் சுற்றத்தை பாதிக்கும், ஒவ்வொரு வேலைக்காரனும் அதை தடுக்க முடியவில்லை என்றாலும் அதை பற்றி வெளியில் புரணியாவது பேசலாம் என சொல்வது சிறப்பு.

அதையே நம் குடும்பத்திற்குள்ளும் எடுத்து கொள்ளலாம். ஊழல் செய்தோ லஞ்சம் வாங்கியோ சம்பாரிக்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகளை அந்தந்த குடும்ப உறுப்பினர்கள் கேள்வி கேட்டு திருத்தினாலே பெரிய மாற்றங்கள் நடக்கும். நம் நாட்டில் நடக்கும் அத்தனை அட்டூழியங்களுக்கும் காரணம் அதை செய்பவர்களின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் எதையும் கேட்காமல் அந்த பணத்தில் உண்டு கொழுத்து வாழ்ந்து வருவது தான். அவர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதால் தவறு செய்பவனுக்கும் குற்ற உணர்ச்சி எதுவும் ஏற்படுவதில்லை. ஊரில் கெத்தாக வலம் வருகிறான். தவறு செய்பவனை கூட மன்னித்து விடலாம். இவர்கள் தான் எல்லா பிரச்சனைகளுக்கும் முழு முதற் காரணம். "நீ தவறு செய்து சம்பாதித்த பணத்தில் வாழ்க்கையை நடத்த மாட்டோம்" என குடும்ப உறுப்பினர்கள் போராடினாலே அவன் திருந்தி விடுவான். குடும்பம் தான் வேர். அங்கே பிரச்னை சரியானால் மற்ற இடங்களில் தானாக தீரும். படத்தில் இதை பற்றி ஆழமாக பேசியிருந்தால் மிக சிறப்பாய் இருந்திருக்கும்.

கன்ஸயுமரிசத்தில் முழுகி உழலும் சிட்டி மக்கள் இந்த படத்தை பார்க்க, அவர்கள் வாங்கி வந்த ஒரு அடி பாப்கார்ன் பாக்கெட், கூல்ட்ரிங்ஸ் இதெல்லாம் தியேட்டரில் சாப்பிட்டு ஜீரணிக்க கொஞ்சம் கஷ்டமாய்தானிருக்கும்.

இடைவேளையில் ஐஸ்க்ரீம் கேட்ட குழந்தைகளுக்கு, பெற்றவர்கள் "இப்போ தான் படம் பார்த்த. அதுல பாய்சன் இருக்காம்" என்று சொல்லி பயமுறுத்தி வைத்தார்கள்.

படம் ஊரில் உள்ள லோக்கல் தியேட்டரில் தான் பார்த்தேன். கண்ட கண்ட விளம்பரங்கள் எதுவும் இல்லை. டிக்கெட் கூட ஐந்து நிமிடத்திற்கு முன் வாங்கினால் போதும். நிம்மதியாய் படம் பார்க்கலாம். மல்டிப்ளெக்ஸில் கிடைக்காத திருப்தி கிடைக்கிறது