Sep 29, 2011

A Copycat Movie - ஆபாயில் (அப்படியே சாப்பிடுங்க)

ம் வாழ்கையை நினைவு படுத்தும் திரைப்படங்கள் நம்முடன் எளிதாய் ஒன்றி விடுகின்றன. அந்த வகையில் என்னோடு ஒன்றிய திரைப் படங்கள்,

7G ரெயின்போ காலனி.
எம்(டன்)-மகன்
சந்தோஷ் சுப்ரமணியம்.

இந்த படங்களின் நாயகன் கதாப்பாத்திரத்திற்கும் எனக்கும் அதிகமாய் சம்பந்தம் இல்லையென்றாலும், அந்த அப்பா கதாப்பாத்திரங்களுக்கும் என் அப்பாவுக்கும் நிறைய சம்பந்தங்கள் உண்டு.

நாம் சின்ன வயதில் அப்பாவின் மேல் வைத்திருக்கும் பிம்பம், நாம் பெரியவர்கள் ஆகும் போது கொஞ்சம் கொஞ்சமாய் உடைந்து விடுகிறது. பையன்களுக்கு ஒரு கட்டத்திற்கு பிறகு, அப்பாவிற்கும் அவர்களுக்குமான தொலைவு அதிகமாகி விடுகிறது.

நாம் பெரிதாக பெரிதாக அவர்கள் சிறுவர்களாக ஆகி விடுகிறார்கள் (அல்லது) நமக்கு அப்படி தோன்றுகிறது.

சந்தோஷ் சுப்ரமணியம் படத்தின் ஆரம்பத்தில் தன் அப்பாவை பற்றி ஹீரோ மற்றவர்களிடம் சொல்லும் காட்சிகளில், நிறைய பீப் சவுண்ட்கள் வரும். நான் பேசும் போதும் பீப் சவுண்டுகள் அதிகம் கேட்பதாய் நண்பர்கள் சொல்லுகிறார்கள்.


மிழ் சினிமாவின் இயக்குனர்கள் நிறைய பேர் டைட்டில் கார்டில் இப்படி பந்தாவுக்காக போடுவார்கள்.

A Manirathnam Film.
A Selvaragavan Film.
A Gaudav menan Moive.
A Venkat Prabu Movie

இப்படி நிறைய பேர்.

இவர்கள் அனைவரும் A Copycat Movie என்று பொதுவாய் போட்டு கொள்ளலாம்.

Copycat - என்ற ஒரு படம் பார்த்தேன். அருமையான திரில்லர். எதையை எதையோ காப்பி அடிப்பதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் நாம். ஆனால் கொலை செய்வதை கூட ஒருத்தன் காப்பி அடிக்கிறான்.


அவன் ஒரு சீரியல் கில்லர். ஒவ்வொரு கொலையையும் வெவ்வேறு கொலைகாரர்கள் செய்ததை போல செய்கிறான்.

ஒவ்வொரு கொலையையையும், யாரைப் போல செய்தான் என சீரியல் கொலைகளை பற்றி ஆய்வு செய்யும் ஒரு பெண் டாக்டர் கண்டுபிடிக்கிறார். தமிழ் இயக்குனர்கள் எந்த படத்தை காப்பி அடித்தார்கள் என்று நம் பிளாகர்கள் சூப்பராய் கண்டுபிடிப்பது போல.

டோர்ரன்ட் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக்கவும்.



தினமும் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்களாக இருந்தாலோ அல்லது விடிய விடிய தூக்கம் கெட்டு ப்ளாக் எழுதி உலகத்துக்கு தொண்டு செய்து தியாக செம்மல்களாக வாழ்பவர்களாக இருந்தாலோ, நீங்கள் கம்ப்யுட்டரில் ஓரளவு கீபோர்டை பார்க்காமல் டைப் செய்து பழகி இருப்பீர்கள்.

ஆனால் என் நண்பன் ஆறு வருடம் சாப்ட்வேர் நிறுவனத்தில் ஆணி புடுங்கியும் அவனுக்கு கீபோர்டை பார்க்காமல் டைப் செய்ய வராது. அதிகாலை எழுந்து வாசலில் கோலம் போடும் பெண்ணை போல, குனிந்த தலை நிமிராமல் கீபோர்டை பார்த்து அனைத்தையும் டைப் செய்து முடித்த பின் தான், நிமிர்ந்து மானிட்டரை பார்ப்பான்.

ஒரு நாள் அவன் கீழே குனிந்து மும்முரமாய் டைப் செய்து கொண்டிருக்கும் போது, கம்ப்யூட்டர் மானிட்டரை மட்டும் கழட்டி கொண்டு போய்விடலாம் என்றிருக்கிறேன்.


அன்று இரவு நான் அனுஷ்காவை கட்டிபிடித்து முத்தமிட்டு முன்னேறும் போது, திடீரென்று நாய் ஒன்று பயங்கரமாய் கத்தி என் கனவை கலைத்தது. வெகு நாள் கழித்து அனுஷ்கா வந்திருந்தாள். நாயின் சத்தம் தொடர்ந்து ஒலித்து கொண்டிருந்தது.

மறுபடியும் கண்ணை மூடி அனுஷ்காவை வரவழைக்க முடியாமல் நொந்து கொண்டே எழுந்து சென்று பால்கனியில் இருந்து கீழே பார்த்தேன். கீழ் பிளாட்டின் உள்ள காம்பவுண்டுக்குள் நாய் ஒன்று வெளியே போக முடியாமல் தவித்து கொண்டிருந்தது.

காம்பவுண்ட் சுவரின் உயரம் அதிகமாய் இருந்ததால் அதனால் வெளியே தாண்ட முடியவில்லை. அதனால் அது பின்னே ரொம்ப தூரம் சென்று, வேகமாய் ஓடி வந்து ஒரு திட்டின் மீது கால் வைத்து தாண்ட முயற்சி செய்ததது. முடியவில்லை. மீண்டும் அதே மாதிரி திரும்ப திரும்ப ஓடி தாண்ட முயற்சி செய்து கொண்டே இருந்தது.

நான் கீழே சென்று பார்த்தேன். கேட் பூட்டி இருந்ததால் நான் ஏதும் செய்ய முடியாமல் திரும்ப வந்து படுத்து விட்டேன்.

கிட்ட தட்ட மனிதனை போலவே யோசித்து தாண்ட முயற்சி செய்து கொண்டிருந்ததை பார்க்கும் போது, அவற்றிற்கும் நாம் பேசுவது போல ஒரு மொழி இருக்கலாம் என்று தோன்றுகிறது. நமக்கு அவைகள் குறைப்பது ஒரு சத்தம் அவ்வளவே. அனால் நாய்களை யார் பெயர் சொல்லி கூப்பிட்டாலும் திரும்பி பார்க்கும். நம் மொழிகளை அவை உணர்ந்து கொள்கின்றனவா?

நாய்களின் வாழ்க்கை சிரமமானது. காலையில் சீக்கிரம் சுறுசுறுப்பாய் எழுந்து, நகர்வலம் சென்று விட்டு, நேரம் தவறாமல் நட்ட நடு ரோட்டில் காலைக் கடனை முடித்து விட்டு திரும்பி வீட்டுக்கு வரும். இரவெல்லாம் மனிதர்களுக்காக எச்சரிக்கையுடன் கண்விழித்து பாதுகாப்பாய் இருக்கிறது.

மார்க்கெட்டிங் வேலை செய்பவர்கள் "என்னடா இது நாய் பொழப்பு?" என்று அலுத்து கொள்வதை பார்க்கலாம்.

You bark harder and you got less/nothing by end of the day.

நாய்களை நாம் மதிப்பதே இல்லை. திட்டுவதற்கு மட்டுமே அதிகமாய் "நாய்" என்ற வார்த்தையை உபயோக படுத்துகிறோம்.

சீய் பொம்பளை பொறுக்கி நாயே!
திருட்டு நாயே!
ஓடுகாலி நாயே!
நன்றி கெட்ட நாயே!

பன்றிகளை விட நாய்களே அதிகம் திட்டு வாங்குகின்றன.

ஹாலிவுட்டில் நாய்களை வைத்து ஏகப்பட்ட படம் எடுத்து இருக்கிறார்கள். மனிதர்களை வைத்தே ஒழுங்காய் படம் எடுக்க தெரியாத, நம் மரியாதைக்குரிய தமிழ் சினிமா இயக்குனர்கள், எங்கே நாய்களை பற்றிய படம் எடுக்க போகிறார்கள்?

ஒரு படத்தில் நாய் குறைப்பதை (பேசுவதை) ஒரு voice converter மெஷின் போல ஒன்றை அதன் கழுத்தில் மாட்டி, அதன் மூலம் அது ஆங்கிலத்தில் மனிதர்களிடம் பேசுவது போன்று காட்டி இருப்பார்கள்.

அப்படி உண்மையாக ஒரு மெஷின் இருந்தால் நினைத்துப் பாருங்கள்.

தெரியாமல் அதன் வாலை மிதித்து விட்டால், "த்தா! பார்த்து போகமாட்ட?" என்று நம்மை அந்த நாய்கள் எல்லோர் முன்னிலையிலும் அசிங்க அசிங்கமாய் திட்டலாம்.

"அடுத்த ஜென்மத்தில் நாயாய் பொறந்து தெரு தெருவாய் அலைய போகிறாய்" என்று உங்களைப் பார்த்து யாரவது சாபம் இட்டாலும், சீனாவில் மட்டும் பிறக்காமல் இருக்க வேண்டும் என நீங்கள் கடவுளிடம் வேண்டி கொள்ளுங்கள்.

நம்மூரில் சொல் பேச்சு கேட்காத ஆடுகளையோ, எருமைகளையோ பார்த்து "இரு, இரு, உனையெல்லாம் கசாப்பு கடைக்கு விட்டாதான் சரி படுவ" என்று அதன் எஜமானர்கள் சொல்லுவதுண்டு. அது போல அந்த ஊரில் நாய்களைப் பார்த்து அவர்கள் இப்படி சொல்லுவார்கள்.

நம் வாழ்வில் பெரும்பாலான நேரங்கள், நாமும் பிகருக்கும், பணத்திற்கும், சாப்பாட்டிற்கும் நாயைவிட அதிகமாக அலைந்து திரிந்து கொண்டிருக்கிறோம்.


என்ன மனுஷ பொழப்புடா!

ஒரு ஜோக்:
-----------



மனைவி: இனி காரணம் இல்லாம குடிக்க மாட்டேன்னு சொன்னியே! இப்ப ஏன் குடிச்ச?
கணவன்: ராக்கெட் விட பாட்டில் தேவை பட்டுச்சு. அதான் குடிச்சேன்.

உங்கள் ஆபாயிலின் அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.




Sep 24, 2011

எங்கேயும் எப்போதும் - நமீதா விமர்சனம்




"வண்டியை வேகமா ஓட்டாதிங்க"

இதுதான் கதையின் உட்கரு, வெளிக்கரு எல்லாம். தமிழ்நாடு அரசு சார்பாக தயாரித்திருக்கும் விபத்தைப் பற்றிய விழிப்புணர்ச்சி படமாக இதை எடுத்துக் கொள்ளலாம். எய்ட்ஸ் விழிப்புணர்ச்சி விளம்பரத்தில் திரையுலக பிரபலங்கள் வந்து அட்வைஸ் செய்வது போல இந்த படத்தில் அஞ்சலி அனன்யா மற்றும் பலர் நடித்து அதை வலியுறுத்துகிறார்கள். ஒரு குறும்படமாய் எடுக்கவேண்டியத்தை நீட்டி பெரும் படமாய் எடுத்திருக்கிறார்.

முக்கால்வாசி கதைகள் பஸ்ஸில் நடக்கும் ஒரு படத்துக்கு, பிண்ணனி இசை என்பது பெரும் பலமாய் இருக்க வேண்டும். ஆனால் இந்த படம் முழுதும் கனாக் காலங்கள் சீரியலுக்கு போடும் இசையை போலவே இருப்பது துரதிஷ்டம். படத்தின் திரைக்கதையும் கனாகாலங்கள் சீரியலில் சிரிப்பை மூட்டுவதற்காக திணிக்கப்படும் திரைக்கதையை போலவே உள்ளது. உதாரணம், Lavazza காபி ஷாப் சீன்கள்.

இதில் இரு காதல் கதைகள். அனன்யாவுக்கும் சாராவுக்கும் உள்ள காதலாவது ஒரு வகையில் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் ஜெய்க்கும் அஞ்சலிக்கும் இடையேயான காதல் காட்சிகள் காமெடி ட்ராக்காக உபயோக படுத்தப்பட்டுள்ளன.

இந்த ஜெய் பையனுக்கு நடிக்கவே தெரியவில்லை. கிளைமேக்சில் காட்டும் பெர்பார்மன்சை படம் முழுதும் காட்டுகிறார். ". யாரோ தெரியாத்தனமாக "நீ விஜய் மாதிரி இருக்க" ன்னு சொல்லிட்டாங்க. அதை நம்பி இன்னமும் நடித்து கொண்டு இருக்கிறார் அப்பாவியாய். இவரை ஹீரோவாக நினைத்து பார்க்கவே முடியவில்லை.

படம் முழுதும் அஞ்சலி சொல்றதை எல்லாம் வாய் பொத்தி ஒழுங்கா கேட்கும் இவர், "எப்படி நடிக்கறது?" என்பதையும் அஞ்சலியிடம் கேட்டு நடித்திருக்கலாம். ஜெய்யின் பெற்றோர்கள் அவரை கூத்துப்பட்டறைக்கு ரெண்டு வருஷம் அனுப்பிவிட்டால் நலம். சரவ் மற்றும் அனன்யாவின் நடிப்பு கவருகின்றன.

அஞ்சலி பற்றி, அய்யோ என்ன சொல்வது?




அவரது கண்களும் வாயும் போட்டி போட்டு கொண்டு பேசி நடிக்கின்றன. இறுக்கி அணைத்து ஒரு உம்மா கொடுத்து பாராட்டலாம். இவரது காதாப்பாத்திரத்தை இயல்புக்கு மீறி வடிவமைத்து இருந்தாலும், கண்ணை மூடிக்கொண்டு ரசிக்க வைக்கின்றன. இவரை சரியாய் பயன் படுத்தினால் சிம்ரனுக்கு அடுத்து ஒரு "நடிகை" தமிழ் சினிமாவுக்கு கிடைக்கலாம்.

அங்காடிதெரு அஞ்சலிக்கு

படம் முழுதும் அங்காங்கே நாலு முழம் மல்லிகை பூவை வாங்கி நம் காதில் சுத்திவிடுகிறார் இயக்குனர். அதை பஸ்ஸில் உள்ளவர்கள் மல்லிகை பூவை வாங்கும் சீன் மூலமாக குறிப்பாய் உணர்த்தியதே இயக்குனரின் திறமை.

நமீதா டச்: எங்கேயும் எப்போதும், ஒரு கமர்சியல் சீரியல்

ஒரு இயக்குனரின் முதல் படம் என்று சொல்லுவதற்கு பெரிய அளவில் எதுவும் இல்லை. படம் முடிந்து தப்பித்தோம் பிழைத்தோம் என வெளியே வந்து என் பைக்கை எடுத்து வேகமாய் தொண்ணூறில் விரட்டினேன் சந்தோசமாய்.

டிஸ்கி: இந்த விமர்சனத்திற்கும், நமீதாவிற்க்கும் எந்த தொடர்பும் இல்லை. ஹிட்சுக்காக மட்டுமே உபயோக படுத்தப்பட்டுள்ளது.


Sep 20, 2011

ரயில் பயணங்களில் - ஆபாயில் (அப்படியே சாப்பிடுங்க)

நான் சென்னை வந்த சில காலங்களுக்கு சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வர, தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகத்தையே பயன்படுத்தினேன்.

பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே அமையும் என் பேருந்து பயணங்கள் மிகவும் கொடுமையானது. ரூ 100 -க்குள்ளே தான் சாதாரண பஸ் டிக்கெட் விலை இருக்கும்.

பஸ்ஸில் போடப் படும் மொக்கை படங்களின் இம்சையை மீறி தூக்கம் வரும் போது, முன் சீட்டில் உள்ள கம்பி மீதோ அல்லது ஜன்னல் கம்பி மீதோ தலை வைத்து படுப்பேன். பஸ் குலுங்க குலுங்க கம்பியில் பட்டு அடுத்த நாள் காலையில் தொட்டு பார்க்கும் போது, என் தலை பஸ்சின் ஹாரனை போல வீங்கி காணப்படும். அந்த வீக்கம் குறைய மறுநாள் ஆகும்.




ரு முறை நண்பர்களோடு ரயிலில் ரிசர்வ் செய்து போன பிறகு, ரயில் பயணங்கள் அலாதியான சந்தோசத்தை எனக்கு தந்தன. பேருந்தை போல அதிகம் குலுங்காமல், தலை முதல் கால் வரை போர்த்தி கொண்டு படுத்து செல்வது சுகம்.

இது தவிர, அழகழகான பெண்கள் நமக்கு எதிரிலேயே படுத்து கொண்டு வருவதை பார்க்கின்ற சந்தர்ப்பம் ரயிலில் மட்டுமே கிடைக்க கூடியது. பெண்களின் உடையை போலவே, அவர்கள் போர்த்தும் போர்வையும் அழகான டிசைனில் கலர்புல்லாக இருக்கும். ஆனால் நம் (ஆண்களின்) போர்வை, நம் சட்டையின் டிசைனை போல வெகு சாதாரணமாக இருக்கும்.

முன்பு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வீட்டிற்கு சென்று கொண்டிருந்த நான், மாதத்திற்கு இரு முறை வீட்டிற்கு ரயிலில் புக் செய்து செல்வது, என் அம்மா அப்பாவிற்கு மட்டுமல்ல, பக்கத்துக்கு வீட்டு எல்.கே.ஜி. பையனுக்கும் புதிதாகவே தென்பட்டது.

வீட்டிற்கு செல்லும் அந்த வெள்ளிக்கிழமை இரவு, எனக்கு விடிந்த காலைப் பொழுதாகவே தோன்றும். ரயில் வந்து நின்று, வெளியே பெயர் வரிசை ஒட்டியவுடனே ஓடி சென்று நம் பெர்த்துக்கு அருகில் எத்தனை பெண்கள் பெயர் வருகிறது என்று பார்த்து விடுவேன்.

எந்த பெண்ணும் வராத நாட்களில், இந்த ஆண்கள் முகத்தை பார்ப்பதை வெறுத்து, குப்புறப் படுத்து தூங்கி விடுவேன். என் ராசிக்கு என் பெர்த் பக்கத்தில் ஒரு பெண்ணுக்கு மேல் வருவதே அரிது.

அரிது அரிது பெண் வருவதே அரிது 
சுமாரான பிகராய் இருத்தல் அதனினும் அரிது. 

அப்படியிருக்க ஒரு வெள்ளிகிழமை, பெயர் வரிசையை பார்த்த எனக்கு இன்ப அதிர்ச்சி. வரிசையாய் நாலு பெண்களின் பெயர்.

கிருத்திகா 
அர்ச்சனா 
கயல்விழி 
பிரியதர்ஷினி 

ஆஹா! என் கண்களுக்கு அந்த எழுத்துக்கள் தங்க நிறத்தில் தக தகவென மின்னியது போல இருந்தது. சந்தோஷத்தில் இதயத்தில் லேசாய் ஒரு வலி. நான் சென்று என் சீட்டில் உட்கார்ந்து காத்திருந்தேன் அவர்களின் வருகைக்காக.

"எப்படியோ இன்று ஒரு பெண்ணிடமாவது பேசிடலாம்" என்று மனசுக்குள் றெக்கை பட படத்தது. ரயில் கிளம்ப ஐந்து நிமிடம் தான் இருந்தது. ஒரு வித பரபரப்பு என்னுடன் ஒட்டி கொண்டது. கடைசியாய், ரயில் புறப்படும் சில நிமிடங்கள் முன்பு அவசர அவசரமாய் வந்து சேர்ந்தார்கள் அவர்கள்.

அவர்களை கண்டவுடன் என் கனவெல்லாம் தடம் புரண்ட ரயில் பெட்டிகள் போல தண்டவாளத்தை விட்டு எகிறி விழுந்தது.

வந்த அத்தனையும் ஐயர் வீட்டு கிழவிகள்.

அப்போது எனக்குள் அதிதீவிரமாய் சொல்லிக் கொண்டேன்.

"இனி பெயர் பார்க்கும் போது, வயதையும் சேர்த்து பார்க்க வேண்டும்".





டவுள் இருக்கிறாரா? இல்லையா? என்று நம்மில் நிறைய பேருக்கு ஒரு குழப்பம் இருக்கலாம். எனக்கு அதை அறிய விருப்பம் இல்லை. ஆனால் நானாய் விரும்பி கோவில் பக்கம் செல்வதில்லை.

போன வாரம், எனக்கு ஜாதகத்தில் சனிபெயர்ச்சி நடக்கிறதென்று என் அப்பா, நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு கூட்டி சென்றார். ஆஞ்சநேயருக்கு வடமாலை (வடைமாலை) சாத்தி வழிபட்டால் நல்ல பரிகாரமாய் அமையும் என்பது மக்களின் நம்பிக்கை.

ஆஞ்சநேயர் சிலைக்கு வடையை கோர்த்து, நிறைய மாலைகளாய் செய்து போட்டிருந்தார்கள். புரட்டாசி மாதம் முதல் நாள் என்பதால் நல்ல கூட்டம் அலைமோதியது. நாங்களும் குடும்பத்தோடு கூட்டத்தை முட்டி உள்ளே சென்று, ஆஞ்சநேயரை வழிபட்டு விட்டு வெளியே வந்தோம்.

வெளியே எங்களைப் பார்த்து,

"சாமி", "நாராயணா" என்று கையேந்திய பிச்சைகாரர்களின் குரல்கள்.

அவர்கள் சிம்பாளிக்காக சொல்ல வருவது என்னவென்றால்,

"நீங்கள் தான் கடவுள். உங்கள் மனம் தான் கோவில்" 

இது நம்மில் நிறைய பேருக்கு புரிவதில்லை.

அலங்காரம், பூஜை எல்லாம் முடிந்தவுடன் அந்த வடைமாலையை பிரித்து, நமக்கே அந்த வடைகளை எல்லாம் கொடுத்து விடுகிறார்கள்.

கடவுள் உண்மையாக அந்த இடத்தில் இருந்திருந்தால் என்ன நினைத்திருப்பார்?

"வடை போச்சே!"

அந்த வடையை தொட்டால் பாறாங்கல்லை தொட்ட உணர்வு. பெவிகால் கலந்து சுட்டிருப்பார்கள் போல. ஒருவேளை நன்றாக மணமாய் சாப்பிடுகிற மாதிரி சுட்டு, மாலையாய் சாமிக்கு போட்டிருந்தால், பக்தர்களுக்கு எல்லாம் பக்தியுணர்வை விட பசியுணர்வே அதிகம் உண்டாகியிருக்கும்.

என் அப்பா என்னிடம் நூறு ரூபாய் கொடுத்து உண்டியலில் போட சொன்னார் . தேங்கா, பழம், வடையை போல, இதுவும் சாமிக்கு போகாது என்று தெரியும். அதனால் எனக்கு அந்த நூறு ரூபாயை உண்டியலுக்குள் போடுவதற்கு சுத்தமாய் மனம் வரவில்லை. என் அப்பா கூடவே இருந்ததால், போடாமல் இருக்கவும் முடியவில்லை. ரோட்டில் போட்டு விட்டு போவதை போன்ற ஒரு உணர்வுடனேயே உண்டியலில் போட்டேன்.

கோவிலின் உள்ளே கூட்டத்தில் சாமியை பார்ப்பதற்கு பயங்கர தள்ளு முள்ளு நடந்து கொண்டிருந்தது. அதில் ஒருவர் தன் குழந்தையை தோளில் தூக்கி வைத்து சாமியை காட்டி கொண்டிருக்க, பின்னால் இருந்து ஒருவர் 

"ஏய்! குழந்தையை கீழே இறக்கி விடுயா! நாங்கெல்லாம் எப்படி சாமிய பாக்கிறது?" 

என்று சண்டை போட்டு கொண்டிருந்தார். 

குழந்தையும் தெய்வமும் வேறு வேறோ?



Sep 15, 2011

Service Unavailable - ஆபாயில்



"Service Unavailable" இந்த மெசேஜ் நம்மில் நிறைய பேருக்கு பரிச்சயமாக இருக்கும். ரயில் டிக்கெட்டை, IRCTC வெப் சைட்டின் மூலம் புக் செய்ய பழகி இருக்கும் எந்த ஒரு தத்தா பாட்டியும், இந்த Error மெசேஜை அவர்கள் வாழ்கையில் பார்த்திராமல் சாக முடியாது.

சரி. ஏன் இந்த மெசேஜ் வருகின்றது? 

"120 கோடி மக்கள் தொகை உள்ள இந்திய திருநாட்டில் வாழும் மக்கள் எல்லாருடைய தேவையையும் பூர்த்தி செய்ய முடியாது" என்று நம்மூர் அரசியல்வாதிகள் சொல்வதை தான், IRCTC சைட்டும் நமக்கு எடுத்துரைக்கிறது.

நான் மாதம் ஒரு முறை ஊருக்கு செல்லும் போதும், பல் விலக்காமல் கண் துடைக்காமல், காலையில் 7 :55 -க்கு அவசர அவசரமாய் எழுந்து, டிக்கெட் Tatkal -லில் ரிசர்வ் செய்ய கணினி முன் உட்கார்ந்தால், என்னை போல ஊருக்கு செல்லும் கணினி துறை கண்மணிகளும், மற்ற ஏனையவர்களும் பல்துலக்கி காலை கடன் முடித்து எக்ஸாமுக்கு செல்வது போல, பயங்கர prepared -ஆக உட்கார்ந்து, IRCTC சைட்டில் Login ஆகி, Refresh பட்டனை அமுக்கி கொண்டு உள்ளார்கள்.

சரியாக எட்டு மணி ஆனதும், பயணம் செய்யும் விபரம் அவசர அவசரமாய் டைப் செய்து, Submit பட்டனை அமுக்கியதும், சர்வருக்கு சென்றடையும் லட்சக் கணக்கான HTTP request -களில், சீக்கிரம் வரும் Requests -களின் தேவைகள் மட்டுமே சர்வர்கள் பூர்த்தி செய்கின்றன. Slow நெட்வொர்க் கனெக்சனில் திருவாரூர் தேர் போல மெதுவாய் ஆடி அசைந்து செல்லும் HTTP requests -கள் அப்படியே வந்த வழியே திருப்பி அனுப்பப் படுகின்றன.


இது என்ன திருப்பதி லட்டா? வருகின்ற எல்லோருக்கும் கொடுப்பதற்கு.

பொறுத்தார் பூமி ஆளலாம். ரயில் டிக்கெட் புக் செய்ய முடியாது.

பொங்கல், தீபாவளி நாட்களில் இது இன்னும் பெரும் பிரச்சினை.

டிக்கெட் கிடைத்தால் தீபாவளி.
இல்லையென்றால் முதுகு வலி.

தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகத்தில், நெடுஞ்சாலை குழியில், "சுறா" "ஏகன்" படங்களை பார்த்து கொண்டே சென்றால், முதுகு வலியோடு "தல" வழியும் சேர்ந்து கொல்லும்.

ஹை ஸ்பீட் நெட்வொர்க் கனெக்சன்களில் இந்த பிரச்சினை மிக குறைவு. கோயில்களில் அதிக காசு கொடுத்து சிறப்பு கட்டண வழியில் சென்று எளிதாய் கடவுள் தரிசனத்தை பெறுவது போலதான்.

அதனால், ஆன் சைட்டில் வேலை செய்யும் நம் நண்பர்களிடம் சொல்லி டிக்கெட் புக் செய்ய சொல்ல வேண்டும். அங்கெல்லாம் நெட் ஸ்பீட், அதி வேகம் தான். அதுவும் சரியான விலையிலே கிடைக்கும்.

அங்கெல்லாம் எப்போதே 3G -யை தாண்டி, 4G -க்கு சென்று விட்டார்கள். 5G -யில் research செய்து கொண்டிருக்கிறார்கள். அதுவும் கொஞ்ச வருடங்களில் வந்து விடும் என்கிறார்கள். ஆனால் இங்கு 3G -க்கே இன்னும் அடிதடி. அதிக விலையில்.

நம் நாட்டில் மொபைல் சர்வீஸ் நிறுவனங்களைப் போல, பிராட் பேண்ட் சர்வீஸ் நிறுவனங்களும் நம்மை வெகுவாய் ஏமாற்றி கொண்டு உள்ளன.




வார இறுதிகளில், ரயிலில் செல்லும் முக்கால்வாசி பேர்கள் இந்த ஐ.டி துறையினர்கள் தான். இவர்கள் விடும் சீன்கள் அளப்பற்றது. எங்கே பார்த்தாலும்,

"பிராஜெக்டில் போட்டுட்டாங்களா இல்லையா?",
"எவ்வளவு pay?"
"அந்த மேனேஜர் அப்படி பண்றார்."
"ஆன் சைட் கிடைச்சிடுச்சா? விசா வாங்கிட்டியா?"

இப்படி தொனந்தொனன்னு கண்டது பேசிகிட்டே வர்றாங்க. என்னாலேயே சகிக்க முடியல. இந்த ரயிலுக்கு கூட இனி "சேரன் எக்ஸ்பிரஸ்", "பாண்டியன் எக்ஸ்பிரஸ்" ங்கறதை மாற்றி, "ஜாவா எக்ஸ்பிரஸ்", "டாட் நெட் எக்ஸ்பிரஸ்" ன்னு வச்சிடுங்கப்பா!


ற்போது ரிலையன்ஸ்  3G -க்கு டிவியில் விளம்பரம் சில போட்டு கொண்டு இருக்கிறார்கள். ரயில் தண்டவாளத்தின் மேல் நின்றிருக்கும் வாகனத்தில் ஒருத்தன் கையிற்றால் கட்டி வைக்கப் பட்டிருப்பான். ரயிலும் தூரத்தில் வந்து கொண்டிருக்கும். பக்கத்தில் ரிலைன்ஸ் நெட் கனேக்சனுடன் ஒரு லேப்டாப் இருக்கும். கட்டப்பட்ட கையுடன், முடிச்சை எப்படி அவிழ்பதென்று, அவர் நெட்டில் ப்ரௌஸ் செய்து கண்டுபிடித்து ரயில் வந்து மோதுவதற்குள் தப்பிப்பாராம்.

என்ன ஒரு மூளை!! இந்த விளம்பரத்தை யோசித்தவனுக்கு. அவனை இதே மாதிரி தண்டவாளத்தில் கட்டிவச்சிட்டு, முடிஞ்சா தப்பிச்சுக்கோ அப்படின்னு சொல்லிட்டு போயிடனும்.

இதே டைப்பில் இன்னும் சில ரிலைன்ஸ் 3G விளம்பரங்கள் உள்ளன.

அந்த வீடியோவை பார்த்து வியப்படையுங்கள்.


  
பிசில் உட்கார்ந்து மிகவும் பயந்து பயந்து, பேஸ்புக் பார்க்க வேண்டி இருக்கா? கவலையே படாதிங்க.

இந்த மாதிரி கஷ்டப் பட்டு, பேஸ்புக் பார்ப்பவர்களின் நலன் கருதி, சில மாதங்களுக்கு முன்பே உங்களுக்காகவே உருவாக்கி, ஒரு வெப்சைட்டை வெளியீட்டு இருக்காங்க .

http://www.hardlywork.in/

வெப்சைட் பெயரே கலக்கலாக இருக்குல்ல. உள்ளே போகும் முன், ஒரு மெசேஜ் காண்பிக்கிறது. 

"Okay hang in there you little corporate warrior you"

இதை விட உங்களை யாராவது கலாய்க்க முடியுமா?

இந்த வசதி தற்போது ட்விட்டருக்கும் கொண்டு வந்து விட்டார்கள்.

என்ன, ஒரே ஒரு பிரச்சினை! நீங்கள் எல்லா அப்டேட்களையும், பார்க்க மட்டுமே முடியும். Reply பண்ணவோ, கமெண்ட் பண்ணவோ முடியாது.

கூடிய சீக்கிரம் கூகிள் பிளாகுக்கு இந்த வசதியை கொண்டு வந்து விட்டால் பரவாயில்லை. ஹீ! ஹீ!




ங்காத்தாவை எனக்கு நிஜமாய் பிடிக்கவில்லை. சும்மா வெட்டி பந்தாவுக்காக எல்லாம் சொல்லவில்லை. பிளாக்கிலும் மங்காத்தாவை இதுவரை யாரும் கடுமையாய் விமர்சித்து, நான் பார்க்கவில்லை.

எல்லோருக்கும் அஜீத் ரசிகர்களின் மேல், அவ்வளவு "பய" பக்தியா? எனக்கும்தான்.

படத்தை விட, படத்தில் அஜீத் கெட்டவனாய் நடித்தது பயங்கரமாய் பேசப் படுகிறது. என் ஆபிசில் அருகில் உட்கார்ந்திருக்கிற பெண் "கடைசியில் அட்லீஸ்ட் த்ரிஷாவுடன் சேர்ந்து சந்தோசமாய் வாழ்வது போல யாவது முடித்திருக்கலாம்." என்றார்.

நம் தமிழ் மக்கள் எல்லோரும் அவ்வளவு நல்லவர்களா?
நம்மை சுற்றி நல்லது மட்டும்தான் நடந்து கொண்டிருக்கிறதா?

நடிகர்களை எல்லாம் தெய்வங்களாக நினைக்கும் நாட்டில், இதை விட வேறு என்ன எதிர் பார்க்க முடியும்? நம் மக்கள் உண்மையை ஏற்று கொள்ளவே மறுக்கிறார்கள். ஹாலிவுட்டை அரைத்து மசாலா போல, மொக்கையாய் பண்ணிய இதுக்கே இப்படி என்றால்? கஷ்டம்! தமிழ் சினிமாவின் எதிர்காலம்.

"மங்காத்தா, ஹாலிவுட்டுகே சவால் விடும் படம்". 
"வெங்கட் பிரபு ஒரு சினிமா மாமேதை" 

அப்படின்னு சும்மா ஹிட்ஸ் வர்றதுக்காக, என்னாலும் அட்டகாசமாய் ஒரு விமர்சனம் எழுத முடியும்.

அதிலும் இந்த வெங்கட் பிரபுவும், வெற்றி மாறனும், எதோ ரொம்ப நாளாய் கஷ்டப் பட்டு சாப்பிடாமல் சிலை செதுக்கியது போல், தாடி வளர்த்து கொண்டு விடும் சீன்கள் ஓவர். அடிக்கடி தாடியை வேற, தடவிகிட்டே பேசுறது அலம்பலின் உச்சக்கட்டம்.

நானும் எவ்வளவு நாள் தான் நல்லவனாவே நடிக்கிறது!!!