Jan 4, 2012

திருமணங்கள் கேரளாவில் நிச்சயிக்கப் படுகின்றன


என்னதான் கவிதை, கட்டுரை என்று நிறைய எழுதினாலும் பெண்களிடம் பேசும் போது மட்டும் எனக்கு சரியாக சிக்னல் கிடைக்காத செல்போன் மாதிரி, வார்த்தைகள் கட்டாக ஆரம்பித்து விடும். என்னுடைய எல்லா காதலும் கருமாதியிலே முடிய, கட்டாயப் படுத்தி மனதை பறிக்க நானும் கடைசியாக கல்யாண சந்தையில் தள்ளப்பட்டு விட்டேன்.

இது மாடுகள் விலை பேசப்படும் செவ்வாய் சந்தை.




தண்ணி அடித்து பெண்கள் பின்னால் அலைந்து, ஜாலியாக எதை பற்றியும் வருத்தப் படாமல் ஊர் சுற்றி கொண்டிருக்கும் வாலிப வயசு பையன்களை பார்த்து அவர்களது உறவினர்கள்,

"ஒரு கால்கட்டு கட்டி விட்டால் எல்லாம் சரியாகிடும்"
"மூக்கணாங் கயிறு போட்டால் அடங்கிடுவான்"

என்று மாடுகளையே உதாரணம் சொல்லி பேசுவார்கள். கல்யாணம் ஆவதற்கு முன் நாய் மாதிரி சுற்றி கொண்டிருக்கும் ஆண்கள், கல்யாணம் ஆகி விட்டால் மாடு மாதிரி உழைக்க வேண்டும்.

கேம்பஸ் இன்டர்வியுவிக்கே படிக்காமல் தெனாவட்டாக செல்லும் பையன்கள், பொண்ணு பார்க்க போகும் போது மட்டும் பொண்ணுகிட்ட எப்படி பதில் பேசறது என்று தனிமையில் கண்ணாடி முன் நின்று ஆஸ்கார் விருது வாங்கும் அளவுக்கு நடித்தெல்லாம் பார்ப்பார்கள்.

பெண் வீட்டார்கள் கேட்கும் ஏராளமான கேள்விகளுக்கு, அன்லிமிடெட் ஆந்திரா மீல்ஸ் சாப்பிட்டு விட்டு போனால் தான் நம்மால் பதில் சொல்ல முடியும்.

மாடு என்ன படிச்சிருக்கு?
மாடு எவ்வளவு சம்பளம் வாங்குது?
மாடு அமெரிக்கா போயிட்டு வந்திருக்கா? இல்லையா?

டயர்டு ஆகி விட்டால், கொஞ்சம் தண்ணி குடித்து விட்டு பதில் சொல்லலாம்.

இதில் அமெரிக்கா சென்று வந்த மாட்டுக்கு முன்னுரிமை அதிகம்.

இப்போது ஐ.டி துறையில் வேலை செய்யும் பையன்களுக்கு சரியான வயதில் திருமணம் ஆவதே சவாலான விஷயம். அப்படி இருக்க அதிகமாய் படித்திருக்காமல் டிரைவர் மற்றும் இதர வேலைகளை செய்யும் இளம் சிங்கங்களின் நிலைமை இன்னும் மோசம். இதனால் நிறைய பேர் திருமணம் ஆகாமல், "ராமன் தேடிய சீதை" சேரன் போல முகத்தை மூடிக் கொண்டு அழுகின்றனர்.

பெண்களுக்கு Options அதிகமாய் இருக்கின்றன. பையன்களுக்கு?  

They are the Options!.

படித்து முடித்து விட்டு வேலைக்காக அலைந்து கொண்டிருக்கும் பசங்களிடம் வேலை வாங்கி கொடுக்கிறேன் என்று சொல்லி ஏமாற்றி காசை பிடுங்குவதற்கென்றே சிட்டியில் ஒரு கும்பல் எப்போதும் நடமாடி கொண்டிருக்கும். அதுபோல திருமணம் ஆகாமல் தவித்து கொண்டிருக்கும் பையன் வீட்டார்களை ஏமாற்றி பணம் பிடுங்க ஜோசிகார கும்பல் நாட்டில் பஞ்சமில்லாமல் நிறைந்திருக்கிறது.

அவர்கள் சொல்லும் சில ஏமாற்று சடங்கு வேலைகள்.

1. வாழை மரத்திற்கு தாலி கட்டுவது

பெண்ணின் கால்களை வாழை தண்டு கால்கள் என்று  கவிஞர்கள் வர்ணித்து காதலில் மூழ்கி முத்தெடுப்பர்கள். ஆனால் இங்கு முழு வாழை மரத்தையே பெண்ணாக்கி விடுகிறார்கள். நீங்கள் வாழை மரத்திற்கு தாலிகட்டும் சடங்கை செய்து முடித்தால் உங்கள் திருமண தோஷம் விலகி திருமணம் நடந்து, முதலிரவை பஞ்சு மெத்தையில் குஜாலாய் கொண்டாடலாம் என்பது நம்பிக்கை.

இது கிட்டத்தட்ட ஒரு நிஜ திருமணம் போலவே நடக்கும். ஆற்றோர கோவில் கரையில், ஓம குண்டம் வளர்த்து, அதில் ஒரு கையால் அரிசி மற்றும் இதர வகைகளை போடுவதுடன், மற்றொரு கையில் உங்களது மணமகளை அதாவது இளம் வாழைக் கன்றை பிடித்துக் கொண்டு, அய்யர் சொல்லும் மந்திரங்களை ஒன்றும் புரியாமல் திருப்பி ஓத வேண்டும். மேளதாளம் மட்டும் இருக்காது. மிமிக்ரி தெரிந்த உங்கள் நண்பர் யாராவது இருந்தால் அதையும் அடித்து கொள்ளலாம்.

அந்த வாழை மரத்திற்கு ஒரு பெயரும் வைக்கப் படும். கடைசியில் முகூர்த்த நேரம் வரும் போது அய்யரிடம் இருந்து மஞ்சள் கயிறை வாங்கி வாழை மரத்திற்கு மூன்று முடிச்சு போடவேண்டும். அப்போது அந்த வெட்டிய வாழை மரம் தண்ணீர் (கண்ணீர்) விட்டால் கவலைப் படக் கூடாது. ஆனால் கடைசியாக முதலிரவு கூட முடியாமல் அந்த வாழை பெண்ணின் கழுத்தை அரிவாளால் வெட்டி ஆற்றில் தூக்கி வீசி விடுவார்கள் என்பது வருத்தமான விஷயம்.

இதில் மேலும் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் என் வாழ்விலும் இச்சம்பவம் நடந்தேறியது. எனக்கு நடந்த திருமணத்தில் என் பொண்டாட்டியின் பெயர் காவ்யா. காவ்யா செத்து போனதில் கொஞ்ச நாள் நான் தாடி வளர்த்து கஞ்சா அடித்து "அவ என்னை என்னை தேடி வந்த அஞ்சல" என்று பாட்டு பாடி புலம்பி கொண்டிருந்தேன். நம்மூரில் தான் கழுதைக்கும், மரத்திற்கும் தாலி கட்டி அவைகளை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்குகின்றனர்.

2.  திருமணஞ்சேரிக்கு சென்று மாலை வாங்கி வருவது.

திருமணஞ்சேரி என்பது நாகப் பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம். கடவுள் சிவன், பார்வதியை இங்கு தான் திருமணம் செய்தாராம். இங்கு வந்து கடவுளை வழிபட்டு பூ மாலையை வாங்கி கொண்டு சென்றால், உங்கள் திருமணம் ஏற்படுவதில் இருக்கும் தோஷம் நீங்கி விடும் என்பது நம்பிக்கை. அந்த மாலையை உங்களுக்கு திருமணம் ஆகும் வரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். திருமணம் ஆனவுடன் மணமக்களாக மீண்டும் அங்கு சென்று அந்த மாலையை திருப்பி தர வேண்டும் என்பது சம்பிரதாயம். அங்கிருக்கும் ஐயர்கள் உங்களை கட்டுத்தரையில் அடைத்து வைத்த மாடுகளை போல தான் நடத்துவார்கள்.

நீங்கள் யூகித்தது போலவே, என்னிடமும் அந்த பூ மாலை இருக்கிறது. என் பெற்றோரின் கட்டாயத்தின் பேரில் இதை செய்த பின், அற சீற்றம் கொண்டு எழுதிய பதிவு தான் இது. :-(




இப்படியாக ஏமாந்து கடைசி வரை சந்தையில் விலை போகாத மாடுகள் எல்லாம் கடைசியாக கேரளாவுக்கு அனுப்பபட்டு அடிமாட்டு விலைக்கு விற்கப் படும். கேராளாவில் திருமண சம்பந்தம் பிடிப்பதற்கென்றே எங்கள் ஊரில் ஒரு Specialized மேரேஜ் புரோக்கர் இருக்கிறார். நெருங்கிய சொந்தக்காரர் தான். தமிழ் நாட்டிற்கும் கேரளாவிற்கும் நிறைய broadband இணைப்புகள் கொடுத்துள்ளார்.

நம்ம ஊரு கல்யாணங்கள் போல மாப்பிள்ளை வீட்டு அழைப்பு, பெண் வீட்டு அழைப்பு, நிச்சயதார்த்தம் என்பதெல்லாம் தனித்தனியாய் இருக்காது. ஹனிமூன் செல்வது போல ஒரு வாரம், மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் கேரளா சென்று, திருமணம் முடித்து, அதன் பின் "கேரள நாட்டு முல்லை"யை எந்த பிரச்சினையும் இல்லாமல் தமிழ் நாட்டிற்கு கூட்டி வந்து 'அணை'க்கலாம்.

என் ஆபிஸ் கேரள பெண் ஒருத்தியை இளநி என்று குறிப்பிடுவோம். கேரள பெண்கள் அந்த ஊரை போலவே செழுமையாய் இருக்கிறார்கள். அந்த ஊர் இளநி பார்க்க பெரிதாகவும், சுவை மிகுந்ததாகவும் இருக்கும்.

கேரளா சுற்றி பார்க்க அழகான இடம் என்பதால் நீங்கள் திருமணதிற்கு பின் ஹனிமூன் செல்ல அவசியம் இருக்காது.

பெண் வீட்டார்களிடம் இருந்து பெண்ணை தவிர எதையும் அதிகம் எதிர்பார்க்க முடியாது. மாப்பிள்ளை வீட்டார்கள் தான் பெண்ணுக்கு நகைகள் போடுவது முதல் திருமணத்திற்கான அனைத்து செலவுகளையும் செய்து கொள்ள வேண்டியது போல் இருக்கும். அவர்களால் முடிந்தால் நீங்கள் திரும்பும் போது வழிச் செலவுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து அனுப்புவார்கள்.

ஆந்திராவில் உங்களுக்கு எந்த டிகிரி, எந்த university -யில் வேண்டும் என்றாலும் பணம் கொடுத்தால் போதும் Fake certificate வாங்கி விடலாம். அதே போல் மாப்பிள்ளை வீட்டார்க்கு எந்த ஜாதியில் எந்த குலத்தில் பெண் வேண்டுமென்றாலும், அந்த Fake பெண் வீட்டார்கள் உங்களுக்கு கிடைப்பார்கள். உங்கள் உறவு, ஜாதி வட்டங்களுக்குள் ஒரே ஜாதி என்று புளுகி கொள்ளலாம்.

ஆனால் இன்னொரு வகையில், சாதி மத பேதம் அற்ற சமுதாயத்தினை உருவாக்கி நீங்கள் மற்றவர்களுக்கு முன்னோடியாய் திகழ்வீர்கள் என்பதை மறந்து விடக் கூடாது.

எனக்கு கேரளா ஜஸ்ட் மிஸ் ஆகி விட்டது. :-(



Jan 3, 2012

கொலைகார வாசகன் - ஆபாயில்


2012 ஆம் வருடம் பிறந்து விட்டது.

ஒரு ரூபாயை மிச்சபடுத்தி உங்களுக்கு ஒரு நாள் முன்பாகவே அட்வான்ஸ்டு புத்தாண்டு வாழ்த்துக்களை, உங்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருக்கும் நண்பர்கள் SMS மூலம் வாழ்த்தி  இருப்பார்கள்.

நீங்களும் அடுத்த நூற்றாண்டின் மாமனிதர் விருது வாங்கி விடுவீர்கள். மக்கள் எல்லோரும் நல்லவர்கள் ஆகி விடுவார்கள். நாடே சுபிட்சம் அடைந்து விடும்.

இவ்வருடம் உலகம் அழிந்து விடும் என்று மாயன்ஸ் மக்கான்ஸ் சொல்லுகிறார்கள். பயமாய் இருக்கிறது. என்னுடைய மொபைலும் Virgin நானும் Virgin.

சரி, ஏன் Virgin மொபைல் என்று பெயர் வைத்தார்கள்?

எல்லா மொபைலும் Virgin ஆக தான் இருக்கின்றன. அதிக நேரம் கொஞ்சி கொஞ்சி பேசி, பின் முத்தம் கொடுத்து அதை சூடேற்றி விட்டு தன் வேலையை பார்க்க போய் விடுகிறார்கள்.



போன வருடம் வந்த மொக்கை படங்களை வரிசை படுத்தி தொலைகாட்சிகள் எல்லாம் இம்சை படுத்த, "எனக்கு பிடித்த பத்து படங்கள்", "எங்க ஆயாவுக்கு பிடித்த பத்து படங்கள்" என ஒவ்வொரு பிலாகர்களும் அதற்கு மேலும் புண்ணை கிளற, புத்தாண்டு எனக்கு இனிமையாய் கழிந்தது.



ரு நாள் காலை எப்போதும் போல முகம் கழுவாமல் என் பிளாக்கை திறந்து பார்த்த போது, என் பிளாக்கில் ஒரு கமெண்ட் போடபட்டிருந்தது. தான் ஒரு கொலைகாரனாக இருந்ததாகவும், என் பிளாகை படித்து திருந்தி விட்டதாகவும் எழுதியிருந்தான். இப்படி திருந்திய வரிசையில் அரசியல்வாதி, ரேப்பிஸ்ட் என நிறைய பேர் இருக்கிறார்கள் என்பது சம்பந்தம் இல்லாத விஷயம்.

என் எழுத்தின் மேல் பற்று கொண்டு அவன் நிறைய போலி ப்ரோபைல்கள் உருவாக்கி என் எல்லா பதிவுகளுக்கும் ஒட்டு போட்டு தமிழ் மணத்தின் அதிகம் வாசிக்கப் பட்ட இடுகைகளின் வரிசையின் உள்ளே நுழைத்து, எனக்கு மணி மகுடம் வாங்கி கொடுப்பதில் குறியாக இருக்கிறான்.

அந்த மகுடத்தில் மணி இருக்குமா? இருக்காதா?

தமிழ் தெரியாத என்னுடைய பிரெண்டு ஒருவன் தமிழ்மணம் (Tamilmanam) என்பதை எப்போதும் தமிழ்மானம் என்றே படித்து மானம் வாங்குவான். அவனை சாகடிக்கலாம் என்றிருக்கிறேன்.

1330 குறள் எழுதி வைத்துவிட்டு கடலுக்குள் போய் தனியாக நின்று தவம் செய்து கொண்டிருக்கும் திருவள்ளுவருக்கே தெரியாது எத்தனை பேர் அதை படித்து உத்தமனாய் மாறி இருக்கான் என்று. பத்து குறள் மனப்பாடம் பண்ணுவதற்கே நாக்கு தள்ளும். பனிரெண்டாம் வகுப்பு பப்ளிக் எக்சாமிலே மினி பிட் எடுத்துட்டு போய் தான் நான் பாஸ் ஆனேன்.

கலைஞர் எழுதிய திருக்குறள் உரையை படித்த பின் தான் எனக்கு எல்லா குறளின் பொருளும் புரிய துவங்கியது. அந்த உரையை (தலையணை உறையல்ல) எப்போதும் தலைமாட்டிலே வைத்து தான் தூங்குவது வழக்கம். அதை நான் காசு கொடுத்து வாங்கவில்லை. அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இருந்து தான் சுட்டு வந்தேன்.

நான் வழக்கமாய் செவ்வாய்கிழமை காலை சாப்பிட்ட பின் காக்காய்க்கு சோறு வைத்துவிட்டு  சரியாய் 10:00 மணிக்கெல்லாம் பதிவு போட்டு விடுவேன். அவனும் அதை ஷார்ப்பாய் போட்டவுடன் படித்து விடுவான். அதுவரை உயிரை கையில் பிடித்து வைத்துக் கொண்டு தான் காத்திருப்பான்.

ஆனால் அன்று இரண்டு நிமிடம் தாமதம் ஆகி விட்டது. அதற்கே அவனுக்கு மூச்சு விட சிரமமாக போய் விட்டது.

நல்லவேளை இரண்டு நிமிட தாமதம் அவனை காப்பாற்றி விட்டது. அதனால் அவன் உயிரோடு இருக்கிறான். இன்னும் ரெண்டு நிமிஷம் தாமதித்து போஸ்ட் போட்டிருந்தால் கூட அவன் பிழைத்திருக்க வாய்ப்பு ரொம்ப கஷ்டமாக இருந்திருக்கும் என டாக்டர் கண்ணாடியை கழட்டி கொண்டே சொன்னார்.

செக்ஸை கலந்து, படிக்கின்றவர்களை கவர்வது போல கதை எழுத விரும்புகிறவர்கள், நேட்டிவிட்டியுடன் எழுத வேண்டும். சும்மா ஒரிஜினாலிட்டி இல்லாமல் மார்பு, உறுப்பு என்று வெறும் வார்த்தைகளை நிரப்பி போரடித்து தூக்கம் வரவைக்க கூடாது.




ழுக்காய் இருந்த என்னுடைய உலகம் Surf Excel போட்டு துவைத்ததை போல புதிதாக மாறிவிட்டது.

"பிகர் ஏதாவது செட் ஆகிடுச்சா?" ன்னு கேட்கறீங்களா?

நோ.

வேலை நேரம் மாறி விட்டது. இதுவரை மதியம் இரண்டு மணிக்கு ஆபிஸ் சென்று கொண்டிருந்த நான், இப்போது காலை ஆறு மணிக்கெல்லாம் சென்று விடுகிறேன்.

எப்பவுமே லேட்டாக எந்திருக்கிறேன் என்று வழக்கமாய் திட்டும் என் அப்பா இனி என்னை திட்ட முடியாது.  "சூரியனே எனக்கு அப்புறம் தான் எந்திரிக்குது" 

ஆனால் அதிகாலை ஐந்து மணிக்கு எழுவது சிரமமாக தான் இருக்கிறது. அதிகாலையில் வந்து மார்பில் கோலம் போடும் அனுஷ்காவையும், கழுத்தை பின்னி கட்டியணைக்கும் மோனிக்கா பெலுசியையும்  வலுகட்டாயமாய் உதறி தள்ளிவிட்டு எழுந்து வரவேண்டியதாய் இருக்கிறது. 

ஒரு சந்தேகம்.

ஏன் இந்த நடிகைகள் எல்லாம் அதிகாலை ஆரம்பித்தவுடன் தான் வருகிறார்கள்?




Jan 1, 2012

ஒளியோவியம்

அறையில் வண்ண மயமான
ஆடம்பர மின்விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது.
தலையை இருபுறமும் ஆட்டி ஆட்டி
காற்றில் தள்ளாடும் மெழுகுவர்த்தியை போல
எதிரில் அமர்ந்து அழகாய் பேசி கொண்டிருக்கிறாள்.
அவளை பார்த்து கொண்டு
எரியாமல் உருகி கொண்டிருக்கிறேன் நான்.

மின்சாரம் நின்று போய்
விளக்கு அணைந்து விட்டது.

இப்போது
இன்னும் பிரமாண்டமாய்
ஒளிர்கிறது
அவள் முகம்.