Apr 27, 2011

கோ - நமீதா திரை விமர்சனம்.

சில படங்களை திரை அரங்குகளில் பார்க்க முடியாமல் போனதற்கு மிகவும் வருத்தப்படுவோம். அதே போல் சில படங்களை பார்த்துவிட்டு எதோ ஒரு காரணங்களால் விமர்சனம் எழுத முடியாமல் போனாலும் வேதனையான விஷயம். ஆனால் படத்தை பார்க்கவும் முடியாமல் விமர்சனமும் எழுத முடியாமல் போய் எனக்கு மன கஷ்டத்தை  தந்த சமீபத்திய இரு படங்கள். நமது பாசத்திற்கு உரிய தமிழ் தாத்தா உரைநடை எழுதிய மன்னிக்கவும் கதை வசனம் எழுதிய இளைஞன், பொன்னர் சங்கர்.

சரி இனி கோ.



இந்த படத்தின் கதை?...என்ன என்று கேட்பவர்களுக்கு, ஆஸ்காருக்கு நாமினேட் ஆகி இருக்கும் இந்த படத்தின் கதையை இன்னும் தெரியாமல் உலவி கொண்டு இருக்கிறீர்களா?

ஒரு மாநிலத்தில் உள்ள அரசியல்வாதிகளாலும் அரசியல் கட்சிகளாலும் பொது மக்களும் ஊடகங்களும் எவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதை மற்ற விசயங்களோடும் சொல்லி இருக்கிறார்கள். இந்த படத்தில் வரும் அரசியல்வாதியும்,  அரசியல் கட்சியும் தமிழகத்தின் எந்த ஒரு அரசியல்வாதியையோ அரசியல் கட்சியையோ குறிப்பிடுபவன அல்ல என்று மட்டுமே இங்கு நாம் எடுத்து கொள்ள வேண்டும். மற்ற மாநிலங்களில் வேண்டுமானால் இது போல நடந்து கொண்டு இருக்கலாம்.

பொதுவாக கே.வி. ஆனந்தின் பட ஹீரோக்கள் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் வரும் சூர்யாவை போல ஓவர் ஆக்டிங் செய்து வந்த வழியே திரும்பி ஓட வைப்பார்கள். அயனில் முதலில் வரும் ஏர்போர்ட் காட்சிகளில் சூர்யா காட்டும் ஆக்டிங் பார்த்த பிறகு அந்த படத்தின் கதை எனக்கு என்ன என்று தெரியாமல் போனது. இதிலும் ஜீவா அதை செவ்வனே ஒரு கேமராவோடு செய்கிறார்.

கனாகண்டேன் படம் மட்டும் விதிவிலக்கு. கனாகண்டேன் படம் போல இது ஒரு எதார்த்தமான படமாக இருக்கும் என்று நம்பி போனேன். ஆனால் முதல் சீனில் பேங்கில் கொள்ளைஅடித்து விட்டு செல்லும் நக்சல்களை ஜீவா பைக்கில் வீலிங் செய்து கொண்டே சுற்றி சுற்றி படம் எடுக்கும் காட்சியின் மூலமாக இது எதார்த்த படம் இல்லை, இது ஒரு மசாலா படம் தான் என்று சொல்லி நம் முகத்தில் சாணியை கரைத்து அடிக்கிறார் இயக்குனர்.

ஜீவா தின அஞ்சல் என்ற பத்திரிக்கையின் போட்டோகிராபர். கழுத்தில் கட்டிய சாமி தாயத்து போல எப்போதும் கேமராவை கழுத்தில் இருந்து கழட்டாமலே சுற்றுகிறார். பியாவும், கலை உலகத்திற்கு அர்பணிக்கப்பட்ட ராதாவின் வாரிசு கார்த்திகாவும் அதில் பணியாற்றும் அழகான நிருபர்கள். ஒரு தமிழ் தினசரி பத்திரிக்கை ஆபிசில் இப்படி எல்லாம் அழகாய் மாடர்னாய் நிருபர்கள் இருப்பாங்களா? என்று தினசரி பத்திரிக்கை அலுவலகத்தில் வேலை செய்யும் கனவான்கள் பொறாமையில் பாப்கார்னை கொறித்துக் கொண்டே படம் பார்க்கிறார்கள். பத்திரிக்கை ஆபிஸ் செட்டிங் அப்படியே நிறைய ஹாலிவுட் தரம்.

ஜீவாவின் அம்மாவும் அப்பாவாக வரும் பட்டிமன்ற பேச்சாளரான ராஜாவும் அப்படியே சங்கரின் சிவாஜி டைப் பெற்றோர்கள். ராஜா அவர்கள் பட்டிமன்றத்தில் அருமையாக பேசுவார் என எங்க தாத்தா சொல்லுவாரு.

ஜீவா எந்த பெண்ணையும் தொட்டதில்லை என்றாலும் கூட பியா இவரை தொடும் பொது எறும்பை தட்டிவிடுவது போல தட்டிவிட்டு போய்கொண்டே இருக்கிறார் ராமபிரானாக. தமிழ் கலாசாரத்தில் வாழும் இப்படி ஒரு "இளைஞனை பார்ப்பது மிகவும் கஷ்டம்".



கார்த்திகா, நூலை போல சேலை. கண்ணும் இன்ன பிறவும் அழகு. ரஜினி தாத்தாவுக்கும் கமல் தாத்தாவுக்கும் புது இளமொட்டு ரெடி. ஆனால் ரஜினியும் கமலும் பீல்டில் இருக்கிறவரைக்காவது இவர் நிலைத்திருக்க வேண்டும் என்பது எனது அவா. கார்த்திகாவின் மகள் வரும் வரை அவர்கள் பீல்டில் இருப்பார்கள் என்பது வேறு விஷயம்.

பாடல் காட்சிகளில் வரும் மலை பகுதிகளிலும், கார்த்திகாவின் இடுப்பு பிரதேசங்களிலும் மனதை லயிக்க வைக்கிறது கே.வி.யின் கேமரா.

பியா தனக்கு எவ்வளவு ரேட் வரும் என்று ஜீவாவை கேட்கும் காட்சியிலும், ஒரு சின்ன பையனிடம் சட்டையை திறந்து காட்டும் காட்சியிலும் இயக்குனரின் முற்போக்கு சிந்தனையை பாராட்டியே ஆக வேண்டும். எனக்கும் பியாவின் ரேட் இதுவரை தெரியவில்லை. ஆனால் ஜீவாவிடம் பியாவுக்கு "ஐ லவ் யு" சொல்ல மட்டும் முடியாமல் போவதற்கு பியாவின் வெட்கம் மட்டுமே காரணம் என்று இயக்குனர் அடித்து சொல்கிறார்.

பியாவுக்கு வரும் முதல் பாட்டு வரும் இடத்திலும், இரண்டாவது பாதியில் வரும் "வெண்பனியே" பாட்டு வரும் இடத்திலும் புகழ் பெற்ற எடிட்டர் கத்தரிக்கோல் கண்னழகன் ஆண்டனி தூங்கி உள்ளார் என்று தெளிவாக தெரிகிறது. வீணாய் போய்டும்ன்னு பந்தியில வச்சுட்டாங்க.

முதல் பாட்டில் பெண்களின் இடுப்பை கிராபிக்ஸால் மறைத்துவிட்டு, அடுத்த காட்சியில் சில உழைக்கும் வர்க்கத்து பெண்கள் தெருவில் ஆடும் பொது மட்டும் அவர்கள் இடுப்பை தெளிவாக காமிப்பது என்ன ஒரு பாகுபாடு? என்று என் நண்பன் குமுறி கொண்டே படம் பார்த்தான். அதுவே பின்னால் நிறைய பாடல்களில் கார்த்திகாவின் இடுப்பை பார்த்த பின்பு ஒருவாறாக அவனின் குமுறல் அடங்கியது.

இந்த படத்தை வாங்கி வெளியிட்ட ரெட் ஜெயண்ட் உதயநிதி ஸ்டாலின் ஒரு உண்மையான பிசினஸ்மேன். இவரின் தொழில் பக்தி உன்னதமானது. பொரிக்கடலை விற்பதில் லாபம் வரும் என்றால் கருணாநிதியின் குடும்பம் பொரிக்கடலை வியாபாரமும் செய்யும் என்று நடிகர் விஜயின் அப்பா கூறியாதாக எங்கேயோ படித்தது உண்மையிலே மிகையல்ல, சிறுமையாகவே தோன்றுகிறது.

ஆனால் கே.வி.ஆனந்த அவர்கள் ஒருவகையில் புத்திசாலி என்பதையும் நாம் ஒப்பு கொள்ள கடமைப் பட்டு இருக்கிறோம்.

நமிதா டச்: கோ - போடாங்கோ!

டிஸ்கி:   ஒருமுறை பார்க்க கூடிய சுமாரான இந்த படத்தின் மீதான என் கோபத்திற்கு காரணம் இயக்குனர் நமீதாவையும், அவர் செந்தமிழையும், சிறு வயதில் சிரமப்பட்டு படித்த கெமிஸ்ட்ரியையும் நக்கல் அடித்ததே.


Apr 20, 2011

நகுலன் என்றொரு அழகன்

என் அக்கா பையனுக்கு,



கன்னி ராசிதான்
இந்த கண்ணனுக்கு
கணக்கில்லை
பின்தொடரும் இளங் கன்னிகளுக்கு.


வேட்டையாடுவதில் மாவீரன்
இவனை கண்டாலே
நடுநடுங்கும்
சிங்கம் புலி கரடி (பொம்மை)கள்.


இவன் கை பட்டு
கவிழவே காத்திருக்கின்றன
சரியாக மூடப்படாத
பலசரக்கு டப்பாக்கள்.

நிற்கவே நேரம் இருக்காது
எந்நேரமும் இவன் பின்னாலேயே
ஓட வைத்துக் கொண்டிருப்பான்
பாட்டியையும் தாத்தாவையும்.

பார்க்கும் அநேக நேரம் 
பூனையை இவன் துரத்திக் கொண்டிருப்பான்.
சில நேரம் பூனை 
இவனை துரத்திக் கொண்டிருக்கும்.





Related post :  The Good Stranger: கார்த்திகா தீபா வாழ்த்துக்கள்