Mar 2, 2016

இளைய தளபதி டிகாஃப்ரியோ



டிகாஃப்ரியோவுக்கு ஆஸ்கார் கெடைச்சிடுச்சு பாத்தியாடா? என்று குதுகலித்த நண்பன், எனக்கு தெரிந்து கடைசியாய் ரசித்து பார்த்தது டைட்டானிக்.

இன்றும் அவனது பேஸ்புக் புரபைலில், பார்த்த ஆங்கில பட வரிசையில் ஜுராசிக் பார்க், அனகோண்டாவுக்கு அடுத்து டைட்டனிக் மட்டும் தான்.

அதிலும் ஹீரோ, கேட் வின்ச்லேட்டை அரை நிர்வாணமாய் வரையும் காட்சியை pause செய்து அவள் முலைகளை பார்த்து, பல மணிநேரம் பரவசம் அடைந்திருக்கிறான். அதை ஸ்க்ரீன் சாட் எடுத்து வால் பேப்பராக வைத்து தினமும் பயபக்தியுடன் வழிப்பட்டு வந்தான்.

கனவில் கேட் வின்ஸ்லெட் வர வேண்டும் என்று ஆசைப்பட்டு தினமும் மானிட்டரை பார்த்து கொண்டே படுத்தாலும், டைனோசர்களும் அனகோண்டாக்களுமே வந்து அவனை விடாது பயமுறுத்தின.

தன் காதலி ஆசைப்பட்ட காரணத்தால், தன் காதலை தியாகம் செய்து, வேறு ஒருவருடன் அவளை சேர்த்து வைத்த "பூவே உனக்காக" படம் பார்த்து  விஜய்க்கு Die Hard பேனாக மாறியிருந்த சமயம், அடுத்த வருடத்தில் வெளியான டைட்டானிக்கிலும் காதலியை காப்பாற்ற  குளிர் நீரில் விதைப்பை விறைத்து செத்து போன டிகாஃப்ரியோவும் அவன் நெஞ்சில் இடம் பிடித்து அவனுக்கு இன்னொரு தளபதியாய் மாறினார்.

இவனிடம் லவ் பெயிலியர் கேஸ்கள் மாட்டினால்,

"மச்சி, காதல்ன்றது பனிக்கட்டி பாற மாதிரி, எவ்ளோ பெரிய கப்பலா இருந்தாலும் தொப்பலா நனைய வச்சு முழுக்கிடும்."

என்று பன்ச்சு சொல்லி அவர்களை தற்கொலைக்கு தூண்டுவான்.

அதிலிருந்து ஒரு தளபதிக்காவது ஆஸ்கார் கிடைத்துவிடாதா? என்று வருடா வருடம் எதிர்ப்பார்த்து கிடந்தான். பிரண்ட்ஸ் பட கிளைமேக்சில் தலைவனின் நடிப்பை பார்த்து மிரண்டு, கண்டிப்பாக ஆஸ்கார் கிடைக்கும் என்று நம்பிக்கை கொண்டிருந்த போது அதை ஆஸ்கருக்கு பரிந்துரைக்காமல் வஞ்சம் செய்த இந்திய அரசை எதிர்த்து அப்போதே தேசிய கொடியை எரித்தவன்.

லோக்கல் தளபதி கரும்புலியிடம் கடி வாங்கி கஷ்டப்பட்டு சண்டை போட்ட புலி படம் வழக்கம் போல ஆஸ்காருக்கு போகா விட்டாலும், பாரின் தளபதி கரடியுடன் சண்டை போட்டு ஆஸ்கர் வாங்கியதில் அவனுக்கு ஆத்ம திருப்தி.

"ஆமா மச்சி, தல க்கு எப்ப ஆஸ்கார் கெடைக்கும்?" என்று கொஞ்சம் சொரிந்து விட்டால், நக்கலாய் சொல்வான்,

"அவரு ரேஸ்கார் வேணா வாங்கலாம், ஆஸ்கார்லாம் வாங்க முடியாது"