என்னுடன் படித்த நண்பர்களில் நிறைய பேருக்கு திருமணம் ஆகி தண்டனை அனுபவித்து வருகிறார்கள். இன்னும் சிலருக்கு தப்பிக்க சிறிது கால அவகாசம் கொடுக்கப் பட்டுள்ளது. நான் இன்னும் எதை பற்றியும் கவலை படாமல் ஒரு நாயை போல தெருக்களில் உலா வந்து கொண்டிருக்கிறேன். கடந்த மாதம் மட்டும் மூவருக்கும் மேலாக தண்டனை உறுதி செய்யப் பட்டு வீட்டு காவலில் வைக்கப் பட்டுள்ளார்கள். நாமும் அப்போது அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு எஞ்சிய நாட்கள் முழுதும் அவர்கள் முடிந்த வரை சந்தோசமாக வாழுமாறு வாழ்த்த வேண்டிய நிர்பந்தம் உள்ளது. தன் கஷ்டங்களில் பங்கு கொள்கிறவன் தான் உண்மையான நண்பன். அவ்வாறு தன்னுடைய திருமணதிற்கு யார் வருகிறார்களோ என்பதை வைத்து தான் உண்மையான நண்பன் யார் என்பதையும் முடிவு செய்யப் படுகிறது. அதனால் நானும் முடிந்தவரை எல்லோருக்கும் உண்மையாகவே இருக்க விரும்புகிறேன்... ;-)
இன்றும் ஒருவனது திருமண வரவேற்பு நிகழ்சிக்காக புறப்படுகிறேன். அவன் பெயர் "பொய் புலவர் பிரகாஷ்". இவனுக்கு அரிச்சந்திரன் யார்? அவர் எப்படி பட்டவர்? என்ற வரலாறு துளியும் தெரியாது. அந்த அளவுக்கு இவனுக்கு உண்மைக்கும் நெருங்க முடியாத தூரம். ஒரு சின்ன உதாரணம். இவனுக்காக காத்திருக்கும் போது, மொபைல் போனில் அழைத்து "மச்சி எங்கேடா வந்துட்டு இருக்க?" என்று கேட்டால், அவங்க வீட்டு பாத்ரூமில் "இருந்து" கொண்டு பத்து நிமிஷத்தில் வந்து விடுவதாக கூச்சப் படாமல் அள்ளி விடுவான்.
ஒவ்வொரு வாரமும் விஜய் டிவியில் "அது, இது, எது?" என்று ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்புவார்கள். அதில் கடைசி சுற்றில், நிகழ்ச்சியில் பங்கேற்பவர் கதை ஒன்று சொல்ல வேண்டும். அதில் மூன்று பொய்களை, கதை சொல்லுபவர் திணித்து சொல்லியாக வேண்டும். இன்னொருவர் அவர் சொன்னதில் மூன்று பொய்யையும் கண்டுபிடித்து கூற வேண்டும். அதை போல இவனை ஒரு கதை சொல்ல சொல்லி, அதில் ஒரு உண்மையை கண்டு பிடிக்க சொன்னால், பெரும் சவாலான விஷயம்.
இவனை பற்றி முன்னரே ஒரு இடுகையில் எழுதி உள்ளேன்.
ஆனால் ஒரு நல்ல விஷயம் இவனிடம் உள்ளது. எந்த ஒரு அரசியல்வாதியிடம் கூட காணப்படாத மதசார்பற்ற தன்மை இவனிடம் மட்டுமே உள்ளது. எவ்வாறு எனில், பொழுது போக்காய் பல பெண்களிடம் பேசுவான். அப்படி புதிதாக ஒரு பெண்ணிடம் பேசும் போது ஏதோ இந்திய ரகசிய உளவு துறையில் வேலை செய்வது போல உண்மையான பெயரை மட்டும் சொல்லவே மாட்டான். அவ்வபோது அவன் கண்களுக்கு தட்டுப் படுகிற பெயரை தன் பெயராக சொல்லி விடுவான்.
சில சமயம் மகேஷ்.
சில சமயம் ஜேம்ஸ்.
ஒரு நாள் நானும் அவனும் பாய் கடையில் பிரியாணி சாப்பிட்டு கொண்டிருந்தோம். அப்போது அவனுக்கு ஒரு பெண்ணிடம் இருந்து அழைப்பு வர, தன் பெயரை காதர் பாய் என்று கடையின் பெயர் பலகையை படித்து அறிமுக படுத்தி கொண்டான். இவனுக்கு மத பாகுபாடு என்பது துளியும் இல்லை என்பதை அந்த மதிய நாளில் லெக் பீசை கடித்துக் கொண்டே உணர்ந்தேன். இவன் கல்யாண அழைப்பிதழ் கொடுக்கும் வரை, நாங்களும் இவன் பெயர் பிரகாஷ் என்ற அனுமானத்தில் மட்டுமே இருந்தோம்.
லெக் பீசை பற்றி பேசும் போது தான் இன்னொன்றும் ஞாபகம் வருகிறது. நம்மில் நிறைய பேர் பெண்களை பற்றி பேசும் போது பிகர் என்று தான் குறிப்பிடுவோம். ஆனால் இவன் "பீஸ்" என்றே குறிப்பிடுவான். அப்போ பிரியாணில இருக்கிறது என்ன பிகரா?
ஒரு நாள் அவனுடன் வழியில் சென்று கொண்டிருக்கும் போது "இந்த பீசு எப்படி இருக்கு?" என்று கை காட்டினான். திரும்பி பார்த்தால் அங்கே ஒரு பெண் சிமெண்ட் காரை சட்டியை தூக்கி கொண்டு சென்று கொண்டிருந்தாள். ஏழை பணக்காரர்கள் பாகு பாடும் இவனுக்கு பார்க்க தெரியவில்லை.
இவனுக்கு இன்னொரு பெயரும் உண்டு. அது "குடி பிரகாஷ்". பெயர் காரணம் தேவையில்லை என்று நினைக்கிறேன். நிறைய நண்பர்கள் கூப்பிடும் பெயரும் இதுவே. தினமும் குடிப்பதாய் அவனே சொல்லுவான். ஆனால் அவனுக்கு ஒரு டூவீலர் மட்டும் வாங்க காசே இருந்ததில்லை. ஒரு பன்னிகுட்டி உருவ உண்டியல் வாங்கி தினமும் குடிக்கும் காசை அதில் போட்டு வைத்திருந்தால் எளிதாய் ஒரு டூவீலர் வாங்கியிருக்கலாம்.
இவன் எங்கு பயணம் செய்தாலும் கூடவே ஒரு லேப்டாப் Bag-ம் வைத்திருப்பான். உள்ளே லேப் டாப் இருக்காது. நிறைய கோக், பெப்சி பாட்டில்களும், தண்ணீர் பாட்டில்களும் இருக்கும். ஆச்சாரம் உள்ளவர்கள் ஒரு அவசரத்துக்கு கூட இவனிடம் தண்ணி வாங்கி குடிக்க முடியாது. ஏனென்றால் எல்லாம் மிக்சிங்கோடு(Mixing) இருக்கும். எவ்வளவு தான் குடித்தாலும் மிகவும் நிதானமாக இருப்பான். சிறிதும் உளறவே மாட்டான். ஆனாலும் குடிக்காத நாட்களில் மட்டும் உளறுவான்.
இந்த உலக கோப்பையை ஆஸ்திரேலியா அல்லது பாகிஸ்தான் தான் வெல்லும் என்பது என் அனுமானமாக இருந்தது. இப்போது ஆஸ்திரேலியா வெளியேறி விட்டது. பாகிஸ்தானிடம் தான் அரை இறுதியில் இந்தியா தோற்க வேண்டும் என்று எழுதி இருக்கலாம். ஆனால் இந்தியா அவ்வளவு எளிதாக விட்டு விடாது. இந்தியாவின் மேல் நடந்த பாராளுமன்ற தாக்குதல், மும்பை மற்றும் டெல்லி தாக்குதல் இவற்றிற்கு பதிலடியாய் அரை இறுதி போட்டியில் வென்று பலி தீர்க்கும் என்றே இந்திய குடிமக்கள் எல்லோரும் ஆவலாய் உள்ளார்கள். அப்போது தான் மும்பை குண்டு வெடிப்பில் பலியான மக்களின் ஆவிகள் எல்லாம் சாந்தி அடையும். அப்படி இந்தியா பாகிஸ்தானை வென்று உலக கோப்பையையும் வெல்லும் பட்சத்தில், நாடாளு மன்றத்தில் இந்திய வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, கசாபையும் விடுதலை செய்வார்கள். இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றத்தை எண்ணி வருத்தப்படுவதை விட கசாப்புக்கு வேறு என்ன தண்டனை மற்றும் அவமானம் இருக்க முடியும்?
இது தேர்தல் காலம் என்பதால், தி.மு.க. கலை உலக வாரிசுகள் தங்கள் பட வெளியீட்டை கொஞ்ச காலம் நிறுத்தி வைத்திருந்தாலும், கலைஞர் ஒரு கதாநாயகியையும், ஒரு கதா நாயகனையும் அறிமுகப் படுத்தியிருக்கிறார். கதாநாயகி தேர்தல் அறிக்கை என்று உங்களுக்கு தெரியும். காதாநாயகன் கீழே இருக்கிறார். நடிகர் விஜயகுமார் குடும்பத்தை பின்னுக்கு தள்ளி இப்போது கலைஞரின் குடும்பம் தான் மிகப்பெரும் கலை குடும்பமாக உருவெடுத்துள்ளது. உங்க கலை ஆர்வத்துக்கு ஒரு அளவே இல்லடா.
இப்போது ஜெயலலிதா கவர்ச்சி நாயகியை வெளியிட்டு விட்டதால் கதாநாயகியை பற்றி ஏதும் சொல்லத் தேவையில்லை.
பெண்ணை பெற்ற ஏழைகள் எல்லாம் இனி கவலை பட தேவையில்லை. கிரைண்டர், மிச்சி, பேன், நாலு கிராம் தங்கம், ஆடு, மாடு இவைகளோடு ஒரு கட்டில் மெத்தையும் கொடுத்திருந்தால் பெண்ணுக்கு கொடுக்க வேண்டிய சீர் ரெடி. கலைஞர் தாத்தாவின் கதாநாயகி, 1970 களில் வந்த கருப்பு வெள்ளை நாயகியை போல, வயது முதிர்ந்தவர்களையும், குடும்ப தலைவிகளையும் மட்டுமே பெரிதளவு கவர்ந்திருந்தது.
ஆனால் கவர்ச்சி நாயகி ஷகிலாவை போல, பள்ளி மாணவர்களில் இருந்து கிழவர்கள் வரை கவர்ந்து இழுத்து இருக்கிறது. இப்போது குடும்ப பெண்கள் கூட கவர்ச்சி நாயகியையே விரும்புகிறார்கள். பத்தாவது படிச்சிட்டு கட்டட வேலைக்கு போற என் பள்ளி பருவத்து நண்பன் கூட, இப்போ பதினொன்னாவது படிக்கலாமன்னு யோசிக்கிறான். தமிழகத்தில் செல்போன்கள் சாதரணமாகிவிட்ட காலகட்டத்தில் லேப்டாப்களும் சாதரணமாக போகின்றன.
போடுங்கம்மா ஒட்டு இரட்டை இலைய பாத்து...
வோடபோனின் சமீபத்திய இந்த விளம்பரம் என்னைய மிகவும் ரசிக்க வைத்தது.
இதோட விளம்பரத்துக்காகவே நான் வோடபோனுக்கு மாறலாமான்னு யோசிக்கிறேன். நானும் இந்த விளம்பரத்தில் வர்ற "சூப்பர்மேன் ஜூ ஜூ" மாதிரி மாறிட்டேன். டேபிள் டென்னிஸ் மட்டைக்கு பதிலாக கொசு அடிக்கும் மட்டை. தினமும் இரவு தூங்க முடியல. பயங்கர கொசு. அதனால இந்த மட்டைய எடுத்து கண்ணை மூடிக்கிட்டு, திரும்பி நின்னு, சிலசமயம் இருட்டுல கூட, எப்படி அடிச்சாலும் கொசு அடிபட்டு சாகுது.
3 comments:
என்ன, ரொம்ப நாளாச்சு பதிவு போட்டு?
கொசு மட்டை மேட்டர் சூப்பரு :)
"நடிகர் விஜயகுமார் குடும்பத்தை பின்னுக்கு தள்ளி இப்போது கலைஞரின் குடும்பம் தான் மிகப்பெரும் கலை குடும்பமாக உருவெடுத்துள்ளது. உங்க கலை ஆர்வத்துக்கு ஒரு அளவே இல்லடா."
Good Comedy . . .
Thanks
good one Katz..
Post a Comment