Jul 18, 2013

பன்னி - 2 (இது பன்னி டான்ஸ்)


"நான் என்ன குப்பையை எடுத்தாலும் நீ பாக்கணும். உனக்கு இது போதும்" என்ற மனோபாவம் கொடுமையானது. அது எல்லோருக்கும் பொதுவானது.




தமிழக மக்களின் ஆழ்மனதில் வேரூன்றியிருக்கும் மொன்னையான ரசிப்பு தன்மையை, அதிரடியாக வெளிக்கொணர்ந்து வெற்றி பெற்ற 'பன்னி' -யின் முதல் பாகத்தை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் 'பன்னி - 2' வும், அதே பார்முலாவில், மக்களின் அதே மொன்னை ரசிப்பு தன்மையை நம்பி, அதே பன்னி பட்டாளங்களின் நடிப்பில் வெளிவந்திருக்கிறது.

இம்முறை சந்தானம் என்ற காமெடி
பன்னியும், ஹன்சிகா என்ற வெள்ளை பன்னியும் மற்றும் ஒரு ஆப்பிரிக்க வில்லன் பன்னியும் நியூ அடிசனாக (addition) சேர்க்கப் பட்டுள்ளன(ர்).

Recap:


முதல் எபிசோடில், நல்லூர் கிராமத்தில் இன்ஸ்பெக்டராக இருக்கிறார் நாயகன். ஊரில் நடக்கும் அனைத்து சாக்கடை பிரச்சினைகளையும் சுமுகமாக, வன்முறையின்றி தீர்த்து வைக்கிறார். அதனால் நாயகனின் 'பன்னீர் செல்வம்' என்ற பெயரை சுருக்கி
பன்னி என்றே எல்லோரும் செல்லமாக அவரை கூப்பிடுகின்றனர். ஊர் மக்கள் தங்கள் வீடுகளில் பன்னிக்குட்டி உண்டியல் வைத்திருப்பது அவர் மேல் இருக்கும் அன்பின் உச்சக்கட்டம்.

ஒருமுறை அரேபிய குதிரை அனுஷ்காவின் காணாமல் போன சங்கிலியை, "நைட்டியை எப்படி கழட்டினீங்க?" என்று கேட்டு செர்லாக் ஹோம்ஸ் பாணியில் சாதுர்யமாய் கண்டுபிடிக்க, அவருக்கும் நாயகிக்கும் உடனே தமிழ் சினிமா சம்பிரதாய படி காதல் துளிர்க்கிறது. டூயட்டுகளில் தன்னை விட மிகவும் உயரமான குதிரையுடன் ஆடுவது பன்னிக்கு சாவாலான விசயமாய் தோன்றினாலும், ஹைஹீல்ஸ்களின் உதவியோடு அதை செவ்வனே செய்து முடிக்கிறார். அதன் பிறகு அவருக்கு, 'கொலுசு காணாமல் போனது', 'கொடியில் காயபோட்டிருந்த பாவாடை காணாமல் போனது' போன்ற கேசுகளே அதிகம் வருகின்றன. 

இதனால் கடுப்பாகும் பன்னி, அந்த கேசுகளை கான்ஸ்டபிள் எரிமலை ஏகாம்பரத்துக்கு டிரான்ஸ்பர் செய்கிறார். பிறகு கதையில் வில்லன்கள் அறிமுகமாகின்றனர். படத்தில் ஐந்து பைட்டு, எக்கச்சக்க பன்ச்கள் என்று முடிவாகி இருந்ததால், வில்லன்களிடம் பஞ்ச் டயலாக் பேசி முதலில் அவர்கள் காதில் இருந்து ரத்தம் வர வைக்கிறார். பிறகு குற்றுயிராய் இருக்கும் அவர்களை கையால் அடித்து துவம்சம் செய்கிறார்.

கடைசியாக கிளைமாக்சில் அனைத்து வில்லன்களின் காதுகளையும் பஞ்சராக்கி, அவர்களை கொன்ற பின் அனுஷ்காவுடன் வீட்டிற்கு காரில் பயணிக்கிறார். இனி கல்யாணம் செய்து, பஸ்ட் நைட்டு தான் என்று குஜாலாய் யோசித்துக் கொண்டே வரும் போது, இடையில் ஹோம் மினிஸ்டர் விஜய குமார் வண்டியை நிறுத்தி சீக்ரெட் தையல் மிஷன் ஒன்றை தந்து பன்னியை சோகத்தில் ஆழ்த்துகிறார். இருந்தாலும் கடமையை கண்ணாக நினைத்து, Gun-யை எடுத்து கொண்டு கிளம்புகிறார்.

இனி, 

இரண்டாம் பாகத்தில், தூத்துக்குடி வரும் அவர், அந்த தையல் மிஷனை வைத்து பள்ளிக் கூடம் ஒன்றின் அருகில் ஸ்கூல் யூனிபாம் தைத்து கொடுக்கும் தையல் கடை ஒன்றை ஆரம்பிக்கிறார். அளவு எடுக்கும் பையனாக சந்தானத்தை வேலைக்கு அமர்த்தி கொள்கிறார். சூப்பர் பிகர்களுக்கு மட்டுமே சந்தானம் அளவு எடுக்கிறார். சப்பை பிகர்களை அசிங்கமாய் கலாய்த்து வெளியே அனுப்பும் அவரின் பிரமாதமான காமெடி நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.

தையல் கடை வைத்து கொண்டே, அண்டர் கவர் ஆப்பரேஷனில் ஈடுபடுகிறார் பன்னி. அண்டர் கவர் ஆப்பரேசன் என்பதால், கீழே மட்டும் கவர் செய்து கொண்டு அவ்வப்போது புதர் பின்னல் இருந்து துறைமுகத்தில் நடக்கும் சட்ட விரோத வேலைகளை வேவு பார்க்கிறார். அவருக்கு இயற்கையிலேயே தூரப் பார்வை என்பதால், ஆறு கிலோமீட்டர் தள்ளி இருக்கும் கப்பலையும் பைனாகுலர் இல்லாமலே நோட்டம் இடுகிறார்.


பள்ளிகூடத்திலும் 'டஸ்டர் காணாமல் போனது', 'சாக்பீஸ் காணமல் போனது' போன்ற கேஸ்கள் வர, வழக்கமான உத்தியில் கண்டு பிடிக்கிறார். 
இதற்கிடையே மார்க்கெட்டில் பூசணிக்காய் விற்று படிக்கும் ஹன்சிகா என்ற பள்ளிமாணவி இவரை ஒருதலையாய் காதல் செய்கிறார். பன்னி தன் ஒரு தலையை அனுஷ்காவுக்கு அல்ரெடி கொடுத்து விட்டதால், அவரது காதலை மறுத்து விடுகிறார்.

அடிக்கடி ரவுடிகளோடு சண்டை போட்டாலும், இரண்டாம் பாகத்தில் பைட் அதிகம் வர வேண்டும் என்ற காரணத்திற்க்காக, பொதுமக்கள் சிலரை பிடித்து பன்ச் டயலாக் பேசி, தங்களை ரவுடி என அவர்களையே நம்ப வைத்த பின் அடிக்கிறார்.

ஒருமுறை வில்லனின் இடத்திற்கு செல்லும் போது துப்பாக்கியை மறந்து விட்டு வந்து விட, பஞ்ச் டயலாக் வைத்தே சமாளித்து திரும்பி வந்து விடுகிறார். அவர் Rivital மருந்து எடுத்து கொள்வதால், மனப் பாடம் செய்து படிக்கும் பஞ்ச் டயலாக மட்டும் மறக்காமல் நியாபகத்தில் இருக்கிறது. ஒரு மிஸ்டேக் கூட வராமல் இருக்க வீட்டில் கண்ணாடி முன் நின்று அதிகம் பேசி ரிகர்சலும் எடுத்து கொள்கிறார். 

கடைசி பைட்டில், தங்கள் குடும்பத்தை கொல்ல வரும் வில்லன்களை வன்முறையில்லாமல் சமாளிக்க, வேண்டுமென்றே துப்பாக்கியை விட்டு விட்டு, வாயை மட்டுமே எடுத்துக் கொண்டு போகிறார். வில்லன்கள் வரும் போது, தன் வீட்டு கேட்டை பூட்டி விட்டு வாயை திறக்கிறார். ஒவ்வொரு பன்ச்சும் புல்லட்டாய் சீற, அறுந்த காதுகளோடு அலறி அடித்து ஓடுகின்றனர் வில்லன்கள். 

சில புத்திசாலி வில்லன்கள், இயர் போனை காதில் மாட்டி தப்பிக்க பார்க்கின்றனர். அப்படி எஸ்கேப் ஆக முயற்சிப்பவர்களின் காதில், தன் பாக்கெட்டில் வைத்திருக்கும் பஞ்சிங் மெசினை வைத்து ஓட்டை போட்டு ரத்தம் வர வைக்கிறார். 

ஹீரோவின் பன்ச்சிலிருந்தும், பஞ்சிங் மெசினில் இருந்தும் பாதுகாத்துக் கொள்ள, தப்பி ஓடும் தமிழ் அறியா அந்த ஆப்பிரிக்க வில்லனையும், அவன் நாட்டுக்கே சென்று, தனது பன்ச்சால் காதறுத்து கடைசி வரை அவனால் கூலிங் கிளாசே போடமுடியாமல் செய்து விடுகிறார், மிஸ்டர் பன்னி. 

இரண்டு சீனுக்கு ஒருமுறை இவரும், ஹோம் மினிஸ்டர் விஜய குமாரும் போனில் பேசி கொண்டே இருக்கின்றனர். இப்படத்தில் பன்னிக்கு நாயகியுடன் பேசுவதை விட, ஹோம் மினிஸ்டருடன் தான் அதிகம் டயலாக் வருகின்றன. அபீசியல் (Official) விஷயம் பேசி முடித்தவுடனும் "அப்புறம்..." "இம்..." "சொல்லு..." "சாப்டாச்சா?" என்ற அளவுக்கு அன்னியோன்யமாய் பேசுகிறார்கள். கொஞ்சம் பிசகி இருந்தாலும் ஆபத்தாய் போயிருக்கும் அவர்களது அன்பை, லாவகமாய் காட்டி இருக்கிறார் இயக்குனர்.

படத்திற்கு இயக்குனர் கிராபிக்ஸை, Flat 50% டிஸ்கவுன்ட் ரேட்டில் கேட்டு வாங்கியிருக்கலாம். சண்டை காட்சிகளில் அவரின் நகத்தை காண்பிக்கும் போது, ரியல் பன்னியின் நகமாக மாறுகிறது. பஞ்ச் டயலாக் பேசும் போது, பன்னி உறுமுவது போலவும் காட்டுகிறார்கள். அப்போது அவரது வாய், உருண்டை வடிவத்தில் மாறுகிறது.

'ஏம்பா குமாரு' என்று கட்டை குரலில் பேசும், 'நான் கடவுள்' புகழ் வில்லனின் மொட்டை தலையும் ஒரு முறை கிராபிக்ஸில் பளீரென மின்னுகிறது. சில பேர் அரைகிலோ தக்காளி வாங்கும் போது, எடை போட்டவுடன் கடைக்காரரிடம் சண்டை போட்டு எக்ஸ்ட்ரா ஒரு தக்காளி எடுத்து பையில் போட்டு கொள்வார்கள். எடுத்து போட்ட எக்ஸ்ட்ரா தக்காளி தான்,அந்த மொட்டை தலை கிராபிக்ஸ்.

சுமார் ஆறு மணி நேர போராட்டத்திற்கு பிறகு, படம் முடிந்து தியேட்டர் விட்டு வெளியே கொண்டு வரப்படும் ஒவ்வொருவரின் நாடியை பிடித்து பார்க்கும் டாக்டர் "பச்" என்று சொல்லி பரிதாபமாய் வாயை அசைக்கிறார். எஞ்சிய சிலரும் "இருக்கிறதா?" என்ற சந்தேகத்தில் தங்கள் காதுகளை பிடித்து பார்த்து செக் செய்த படியே வெளியேறுகின்றனர்.

மக்களின் நாடி துடிப்பை அறிந்து சீக்வல்(Sequel) படம் எடுத்து வெற்றி பெற்றுள்ள இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.

"பன்னி, பன்னி ஹி இஸ் மிஸ்டர் பன்னி."




பன்னி 2 - தமிழின் முதல் சீக்குவல் வெற்றி படம்.


No comments: