May 17, 2011

பஞ்ச பாண்டவர்களுக்கு உதவிடுங்கள்

வீட்டு ஓனர்களும், வீட்டு புரோக்கர்களும், எனது ரூம் நண்பர்களும், மற்ற ஏனையவர்களும் மன்னிக்கவும். இது முழுதும் நகைச்சுவைக்கே.


நியூ ஏஜ் பாண்டவர்கள் ஆகிய நாங்கள் ஐந்து பெரும் ஐ.டி துறையில் அமெரிக்கர்களுக்கு அடிமை வேலை சொகுசாய் செய்கிறோம். இந்த பாண்டவர்களில்,

தருமன் Onsite -இல் தாய்நாட்டை விட்டு வனவாசம் இருக்கிறார்.
அர்ஜுனன் எப்போதும் அடுத்த வீட்டு ஆண்டிக்கு அம்பு விட்டு கொண்டிருப்பார். தினமும் செல்லும் ஜிம்மிலும் அம்புகளின் அட்டகாசம் தானாம்.
பீமருக்கு பீட்சா என்றால் பெரும் இஷ்டம். உருளை கிழங்கில் பண்ணிய அயிட்டம் என்றால் சாப்பிட்டு உருண்டு கிடப்பார்.
நகுலன் அனுஷ்காவின் இடுப்பை பற்றியே அதிகம் சிந்தித்துக் கொண்டிருப்பார். "சுத்தம் சோறு போடும்" என்ற பழமொழியில் அவருக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை.
சகாதேவன் சனிக்கிழமை ஆனால் டாஸ்மாக்கில் சரக்கடித்து விட்டு குப்புறப் படுத்து விடுவார்.



தன் மகளின் குடும்பம் குடித்தனம் வரப்போகிறது என்று வீட்டு ஓனர் இணங்கி கேட்டு கொண்டதால் இப்போது இருக்கும் வீட்டை காலி பண்ண சம்மதித்து விட்டோம்.

வாடகைக்கு அடுத்த வீடு தேடும் போது தான் தெரிந்தது சென்னையில் காலி வீடுகளை விட, வீட்டு புரோக்கர்கள் அதிகம் என்று. நாங்கள் சுலேகா போன்ற வெப் சைட்டுகளில் உலவி புரோக்கர் உதவி நாடாமல் வீட்டை பிடிக்க முயற்சி செய்தோம். Owner என்று search செய்து பொன் பண்ணினால், மறுமுனையில்

"சொல்லுங்க சார் நான் வீட்டு புரோக்கர் பேசறேன்".

"அட நீங்களா?" நயன்தாராவிடம் பேசியது போல் ஒரே இன்ப அதிர்ச்சியில் நான்.

போங்கடா! பொறம்போக்குகளா!

நிறைய ப்ரோக்கர்கள் Owner என்ற பெயரில் ரெஜிஸ்டர் செய்து வைத்திருக்கிறார்கள். வீடு பார்த்து கொடுப்பதற்கு அவர்கள் சுலபமாய் கேட்பது ஒரு மாத வாடகை. நானும் புரோக்கர் வேலையை பகுதி நேரமாக செய்யலாமா என்று தீவிரமாக யோசித்து வருகிறேன்.

டூவீலர் எடுத்துச் சென்று வீடு வீடாக Tolet போர்டு பார்த்து தேடலாம் என்றால், ஒவ்வொரு வீட்டின் கேட்டிலும் எண்ணற்ற "No Parking" மற்றும் "Contact for Plumper Service" விளம்பர பலகைகள் அடித்துபிடித்துக் கொண்டு இடம் பிடித்துள்ளன. இதற்குள் Tolet போர்டை தேடி கண்டு பிடிப்பது, பத்து வருடத்திருக்கு முன் பத்தாம் வகுப்பு ரிசல்ட்டை தமிழ் நாளிதழில் கண்டு பிடிப்பது போல வெகு சிரமமான விசயமாய் இருக்கிறது.

எப்படியாவது வீடு மாற்றியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்ததால் ஆசை ஆசையாய் புரோக்கர்களையும் நாடினோம். மாமுல் போலீஸ்காரர்கள் போல ப்ரோக்கர்கள் ஒவ்வொருவருக்கும் தனி தனி ஏரியா இருக்கின்றது. நாம் ஒருவரிடம் வாடகைக்கு வீடு வேண்டும் என்று கேட்டால், அவர் நம்மை இன்னொருவரிடம் அழைத்து செல்கிறார். அந்த இன்னொருவர், இன்னொருவரிடம் பேசி (குழப்பமா இருக்கா?) கடைசியாக வீட்டையும் ஓனரையும் கண்ணில் காண்பிக்கிறார்கள். அது கிட்டதட்ட கேங்க்ஸ்டர் படங்களில் ஒவ்வொரு அல்லக்கையையும் பார்த்து, பேசி முன்னேறி கடைசியில் வில்லன் தாதாவை சந்திப்பது போல் உள்ளது.

வீட்டு ஓனர்களும் வில்லன்களை போன்றே பேசியும், கேள்வி கேட்டும் பயமுறுத்துகிறார்கள். நானெல்லாம் என்ஜீனியரிங் நுழைவு தேர்வில் கூட ஆப்சன் (Option) உள்ள கேள்விக்கு மட்டுமே பதில் எழுதினேன். அதுவும் கணிதத்தில் உள்ள Probability என்பதை உபயோகித்துதான். Probability எனக்கு அருமையாக வரும் என்று நினைத்து விடாதிர்கள். Probability -க்கும் பென்சில் ரப்பர் தான் (dice) பேருதவியாய் இருந்தது. குழப்பம் வேண்டாம், நான் தருமனில்லை.


ஒரு வீட்டை வைத்திருந்தால், என்ன ஒரு ஆணவம்?
அதிலும் பேச்சுலர்கள் என்றால் மரியாதை அதிகம் கொடுத்து பேசுகிறார்கள்.

"எத்தனை பேரு?" (நாங்க என்ன அதுக்கா(சாப்பிடறதுக்கு) வர்றோம்?

"எந்த கம்பனில வேலை செய்றீங்க?" (மன்னாரன் கம்பனின்னு சொன்னா ஒத்துக்குவீங்களா? அதிலும் MNC கம்பனி என்று சொன்னால் தான் மதிப்பு.)

"நான்வெஜ் சாப்பிடுவீங்களா?" (இல்லைங்க சார்! நான்வெஜ் ஜோக் மட்டும் சொல்லுவேன்)

எல்லாத்துக்கும் பதில் சொல்லிவிட்டு வாடகை எவ்வளவு என்று கேட்டால், ஏலம் விடுவது போல பனிரெண்டாயிரம், பதினைந்தாயிரம், இருபதாயிரம். வாரணம் ஆயிரம் அளவுக்கு பயமுறுத்துகிறார்கள். வேலை இல்லாதவர்கள் தங்க வீடு தேட வேண்டும் என்றால், ஹோம் லோன் மாதிரி "Home Rent Loan" என்ற ஒன்றை வங்கிகள் அறிமுகப் படுத்த வேண்டும்.




இங்கு எனக்கு வேறு ஒரு சிந்தனையும் அடிமனதில் இருந்தது. இந்த பசங்களோடு எத்தனை நாள் தான் தங்குவது?

Sharing with Girls!

அமெரிக்காவில் உள்ளது போல் பெண்களோடு ரூம் ஷேர் பண்ணி தங்க முடியுமா என்றொரு நப்பாசை. வெப் சைட்டுகளில் தேடி பார்த்தால், "We need two female roommates to share our room" என்று அண்டர்லைன் செய்து விளம்பரம் கொடுத்து இருந்தார்கள் இந்திய கலாச்சாரம் கடைபிடிக்கும் பெண்கள். இந்த ஜென்மத்தில் கனவில் கூட இது நடக்காது. அடுத்த ஜென்மத்துல நாயாய் பிறக்க வைத்தாலும் அமெரிக்காவில் பிறக்க வை கடவுளே!

புரோக்கரை கூட்டிட்டு போய் வீட்டை பார்த்தாலும், ஆளாளுக்கு சொல்லும் ஒரு காரணத்தால் அந்த வீடு பிடிப்பதில்லை.

"தண்ணி சரி இல்லை" (ரெகுலரா டாஸ்மாக் போகிற நானே அமைதியா இருக்கேன்)

"நடக்க ரொம்ப தூரமா இருக்கு" (காண்டாமிருகம் பின்னாடி துரத்திட்டு வருதுன்னு நினைச்சிட்டு ஓடுங்க. தூரம் தெரியாது.)

"ஏரியா பசுமையாவே இல்லை" (சென்னையில் சுற்றி கொண்டிருக்கிற எருமை மாடே இதை பற்றி கவலை படுவதில்லை என்று சொன்னால், பசுமை=பிகர்கள் என்று அர்த்தம் சொல்கிறான் அவன்)

"வீட்டு ஓனருக்கு வயசுக்கு வந்த பொண்ணு இல்லை" (வயசுக்கு வந்தா நீ குடிசை கட்ட போறியா? வீட்டு ஓனருக்கு பொண்ணு இருந்தா, கரெக்ட் பண்ணி வீட்டோட செட்டில் ஆகிடலாம் என்கிற அல்ப கனவு.)


மொத்தத்தில் ஐந்து பேருக்கும் ஒத்து போகிற பாஞ்சாலி மாதிரி ஒரு வீடு வேணும். அது போல ஒரு வீடு கிடைக்க பொறுமை மிக அவசியம். சத்ய ஜித்ரே 1957 -இல் இயக்கிய "பதர் பாஞ்சாலி" (Pathar Panchali) என்ற பெங்காலி படத்தை உட்கார்ந்து நான்கு முறை பார்த்தால் அந்த பொறுமை நமக்கு கிட்டலாம்.



3 comments:

சமுத்ரா said...

hmm :)

Vinoth S said...

perusa yengaloda image ah damage pannula :)

Manikanda kumar said...

மச்சி, நீங்க வீரபாகு மாதிரி பொண்ண நான் கட்டிக்கிறேன், வீட்டை பசங்களுக்கு கொடுத்திடுங்கனு டீல் போட்டிருக்கணும்.

ஐடியா இல்லாத பசங்க.. :)