வகுப்பறையில் நுழைந்ததுமே தானாக உன் இருக்கையிலே விழும் என் கண்கள் நீ இல்லாத நிலை உணர வகுப்பறை கடிகாரமும் சில நொடிகள் நின்று போகின்றன என் இதய துடிப்போடு. கடைசி மணி அடிக்கும் வரை கண் திறந்தே வேண்டுகிறேன் வகுப்பறையில் மாட்டியிருக்கும் காலண்டர் தெய்வங்களை. வருகை பதிவேட்டில் கடைசி பெயர் அழைக்கும் வரை வாசலையே வெறிக்கின்றேன் என் நாள் கடத்தும் உன் பாதங்களுக்காய். இன்னும் நம்பிக்கை தளராமல் "நீ வரும் பேருந்து தாமதம்", "உன் நண்பனுக்கு உடல் நலம் சரி இல்லை மருத்துவமனைக்கு கூட சென்றிருக்கிறாய்" என்றெல்லாம் காரணங்களை தேட சொல்லி என் கற்பனையை விரட்டுகிறேன். இதெல்லாம் பொய்த்து விட்டதாய் உணர்ந்த சில நிமிட நேரங்களில் இருட்ட தொடங்கிவிடுகின்றன என் பொழுதுகள். காத்திருக்கிறேன் உன் விழி சேர்க்கும் அடுத்த விடியலுக்காக!
உன் பார்வையின் பராக்கிரமம் பற்றியே பறை சாற்றும் என் கவிதை நோட்டின் நடு நடுவே உன் முத்தங்களுக்காகவும் சில பக்கங்கள் விட்டு வைக்கிறேன். இனி பார்வைகளை சிறுகதை ஆக்கி முத்தங்களை தொடர்கதையாய் எழுதுவோம். நாம் சேர்ந்து கழிக்கும் நிமிட நேரங்களில் பார்வைகளையே அதிகமாய் பரிமாறி கொள்கிறோம். இனி, முத்தங்களுக்கும் வேண்டும் முன்னுரிமை. சீக்கிரம் உன் முத்தப் படையுடன் முன்னேறி வா! நம் வெட்கக் கோட்டையை தகர்த்தெறிந்து பார்வைகளை சிறை வைப்போம்.
நம் ஒவ்வொரு சந்திப்பிலும் தாங்கள் பேச வேண்டிய வார்த்தைகளை விழிகளை விட்டே பேச வைக்கும் நம் இதழ்களை கொஞ்சம் கடுமையாய் தண்டிப்போம் வா! டிஸ்கி : இதன் ஆங்கில பதிப்பு இங்கே.