Dec 8, 2009

முத்தங்களுக்கு வேண்டும் முன்னுரிமை


 
உன் பார்வையின்
பராக்கிரமம் பற்றியே
பறை சாற்றும்
என் கவிதை நோட்டின்
நடு நடுவே
உன் முத்தங்களுக்காகவும்
சில பக்கங்கள்
விட்டு வைக்கிறேன்.

இனி பார்வைகளை
சிறுகதை ஆக்கி
முத்தங்களை
தொடர்கதையாய் எழுதுவோம்.

நாம் சேர்ந்து கழிக்கும்
நிமிட நேரங்களில்
பார்வைகளையே அதிகமாய்
பரிமாறி கொள்கிறோம்.
இனி,
முத்தங்களுக்கும்
வேண்டும் முன்னுரிமை.

சீக்கிரம் உன் முத்தப் படையுடன்
முன்னேறி வா!
நம் வெட்கக் கோட்டையை
தகர்த்தெறிந்து    
பார்வைகளை சிறை வைப்போம்.




Nov 27, 2009

இதழ் செய்த தவறு





நம் ஒவ்வொரு சந்திப்பிலும்
தாங்கள் பேச வேண்டிய வார்த்தைகளை
விழிகளை விட்டே பேச வைக்கும்
நம் இதழ்களை கொஞ்சம்
கடுமையாய் 
தண்டிப்போம்
வா!


டிஸ்கி : இதன் ஆங்கில பதிப்பு இங்கே.




Dec 4, 2008

இரண்டாவது காதல்


 
மீண்டும் கவிதை எழுதுகிறேன்.
முகப்பருக்களின் மறுவிளைச்சல்.
பிறந்துவிட்டது
என் இரண்டாவது காதல்.




என் கல்லறை வாசகம்

வருடத்தில் ஒரு முறையாவது
நீ என்னை நினைக்க வேண்டும்
என்பதற்காகத்தான்
உன் பிறந்த நாளில் என்
இறந்த நாள்.




Sep 28, 2008

தனிமையின் ராஜாங்கம்




இரவின் பிள்ளை நான்
நிலவைத் தேடுகிறேன்

அழகின் பஞ்சத்தில் என்னை
கடவுள் படைத்தான்
கள்ளிப் பூக்களாய்
தனிமை என் இடம்தான்

நீரின் அருகாமையா?
சற்றே ஒதுங்குகிறேன்
என் உருவம் தெரிவதனால்

கண்ணாடியை வெறுக்கிறேன்
என்னை அழகாய்க் காட்டுவதில்லை

இயற்கையை வைத்துக்
கவிதைகள் எழுதுகிறேன்
செயற்கைத்தனமாய் காதல் கவிதையும்

உண்ட அவசரத்தில்
உறங்கச் செல்கிறேன்
கனவிலாவது காதல் கிட்டுமென்று

நிழற்படம் எடுக்கையில்
சரி பார்த்தே நிற்கிறேன்
அழகாய் இருந்ததாய்
இதுவரை சரித்திரம் இல்லை

காதல் கைகூடாது
ராசிபலன்களின்
வாழ்நிலை அறிக்கைகள்

தனிமை என் ராஜாங்கம்
விளையாடுகிறேன் சதுரங்கம்
ராணி இல்லாமல்.