இரவின் பிள்ளை நான் நிலவைத் தேடுகிறேன் அழகின் பஞ்சத்தில் என்னை கடவுள் படைத்தான் கள்ளிப் பூக்களாய் தனிமை என் இடம்தான் நீரின் அருகாமையா? சற்றே ஒதுங்குகிறேன் என் உருவம் தெரிவதனால் கண்ணாடியை வெறுக்கிறேன் என்னை அழகாய்க் காட்டுவதில்லை இயற்கையை வைத்துக் கவிதைகள் எழுதுகிறேன் செயற்கைத்தனமாய் காதல் கவிதையும் உண்ட அவசரத்தில் உறங்கச் செல்கிறேன் கனவிலாவது காதல் கிட்டுமென்று நிழற்படம் எடுக்கையில் சரி பார்த்தே நிற்கிறேன் அழகாய் இருந்ததாய் இதுவரை சரித்திரம் இல்லை காதல் கைகூடாது ராசிபலன்களின் வாழ்நிலை அறிக்கைகள் தனிமை என் ராஜாங்கம் விளையாடுகிறேன் சதுரங்கம் ராணி இல்லாமல்.
உன் பார்வைக்கு அலையும் என் கண்கள் உன் குரல் வேண்டி கேளாவிரதம் இருக்கும் என் செவிகள் உன் வாசத்திற்கு வசமாகும் என் நாசி உன் முத்தத்தை வாய் விட்டுக் கேட்கும் என் இதழ் உன் தோள் உரசி நடக்கத் துடிக்கும் என் தோல் என் செய்வேன்? என் ஐம்புலன்களுக்கு அடக்கமில்லை.
அம்மா அப்பா அக்கா தங்கை என யார் திட்டியும், என் நகக்கண் சிவந்தும், நகம் கடித்தலை விடாத என் பற்கள் நீ சொல்ல நிறுத்தி விட்டது தன்னை தானே கடித்(ந்)துக் கொண்டு.