உன்னை பார்த்து பழகிய நாள் முதலே பல வண்ணங்களால் எனது உலகையே கலகம் செய்தாய். நீல நிறங்களால் வான் நீலத்தையும் நீர்த்து போக செய்தாய். பச்சை நிறங்களில் பசுமை புரட்சி செய்தாய். மஞ்சள் நிறத்தால் சூரியனையும் சுருங்க வைத்தாய். சிவப்பு நிறத்தால் எரிமலையை குமுற வைத்தாய். இன்னும் பல பெயர் அறியபடாத நிறங்களில் மலர்களை மதி மயங்க வைத்தாய். இறுதியாக கரிய நிறத்தால் என்னை முழுதாக இருளில் மூழ்கடித்தாய். நிறங்கள் அற்று நான்.
கல்லூரி பேருந்து உன் நிறுத்தம் வருவதற்கு முன்பே ஏறி அழகாய் அமர்ந்து கொள்கிறாய் என் நினைவில். நீ வராத நாட்களில் கல்லூரி பேருந்து கரும் புகையை கக்கிக் கொண்டு என் உடலை ஏற்றி செல்லும் ஓர் சவ ஊர்தியாய் உருமாற்றம் கொள்கிறது. உனை காணும் நோக்கிலே தினமும் கல்லூரி வருவதால் வருடா வருடம் தவறாமல் பெறுகிறேன் வருகை பதிவேட்டில் நூறு சதவிகிதம். நீ இருக்கும் வரை கல்லூரி பேருந்தின் ஜன்னலோர இருக்கைகள் சிறிதும் என் கவனம் ஈர்ப்பதில்லை.
என் காதலை சொல்ல ஒவ்வொரு முறையும் கண்ணாடியின் முன் நின்று மனதிற்குள்ளும் சத்தம் போட்டும் பேசி சரி பார்த்த வார்த்தைகளை எல்லாம் அப்படியே விழுங்கி கொன்று தீர்க்கின்றன உன் முதலை கண்கள். நீ அழகில் அகலிகையாய் பக்கம் நெருங்கையில் அகழியாய்!
வகுப்பறையில் நுழைந்ததுமே தானாக உன் இருக்கையிலே விழும் என் கண்கள் நீ இல்லாத நிலை உணர வகுப்பறை கடிகாரமும் சில நொடிகள் நின்று போகின்றன என் இதய துடிப்போடு. கடைசி மணி அடிக்கும் வரை கண் திறந்தே வேண்டுகிறேன் வகுப்பறையில் மாட்டியிருக்கும் காலண்டர் தெய்வங்களை. வருகை பதிவேட்டில் கடைசி பெயர் அழைக்கும் வரை வாசலையே வெறிக்கின்றேன் என் நாள் கடத்தும் உன் பாதங்களுக்காய். இன்னும் நம்பிக்கை தளராமல் "நீ வரும் பேருந்து தாமதம்", "உன் நண்பனுக்கு உடல் நலம் சரி இல்லை மருத்துவமனைக்கு கூட சென்றிருக்கிறாய்" என்றெல்லாம் காரணங்களை தேட சொல்லி என் கற்பனையை விரட்டுகிறேன். இதெல்லாம் பொய்த்து விட்டதாய் உணர்ந்த சில நிமிட நேரங்களில் இருட்ட தொடங்கிவிடுகின்றன என் பொழுதுகள். காத்திருக்கிறேன் உன் விழி சேர்க்கும் அடுத்த விடியலுக்காக!