Jul 1, 2010

பெண்ணாகிய பேனா

 
 
கண்ணுக்கு மையிட்டு
கவிழ்த்துகின்ற பார்வையாலே
கதையொன்று எழுதுகிறாய்
காகிதமாய் நான் மாற.

பார்க்கும் பார்வைகளை
அழுத்தமாய் பார்க்காதே
ஈர்க்கும் உன் (இ)மையால்
என் இதயம் உய்த்து விடும்.

என் வாழ்கையின் அர்த்தங்களை
வரிகளாய் எழுதுகிறாய்
என்று எண்ணிதான்
காற்றில் பட படத்திருந்தேன்.

முழுதாக முடிக்கும் முன்னே
எடுத்து எறிந்தாய்
என்னை
முள்ளை போலே

காரணங்கள் யாது என்றேன்
கதையில் சிறு மாற்றங்கள் என்றாய்.
வலி கொண்டு உணர வைத்தாய்,
அவை கண்கள் அல்ல
முட்கள் என்று.





எனக்கு ஒரு முடி(வு) தெரிஞ்சாகனும்



பொதுவாக நீண்ட தலைமுடியை வைத்துக் கொண்டு இருக்கும் பையன்களை பார்த்தாலே எனக்கு அவர்களிடம் நிறைய கேள்விகள் கேட்க வேண்டுமென்று தோன்றும்.

எப்படி அவர்களால் இப்படி வளர்க்க முடிகிறது?
கஷ்டமாக இருக்காதா?

இப்படி நிறைய.

  • தினமும் நீங்கள் காலையில் குளித்தவுடன், உங்கள் அம்மா தான் தலை துவட்டி விடுவாங்களா? இல்ல, நீங்களே பொண்ணுங்க மாதிரி தோள் மேல முடியை எடுத்து போட்டு துவட்டி கொள்வீர்களா? துவட்டிய பின், முடியை அள்ளி முடிந்து விட்டு, வாசலில் போய் கோலம் போடுவீர்களா?
  • ரொம்ப குறைச்சலாக முடியை கட் (வட்டு கிராப்) பண்ணி கொள்கிற எனக்கே ஏகப்பட்ட பொடுகு தொல்லை இருக்கிறது. நீங்கள் எப்படி சமாளிக்கிறீங்க? சன் மியூசிக்கோ அல்லது இசை அருவிக்கோ போன் பண்ணி கூந்தல் பராமரிப்பு பற்றி குறிப்புகள் சொல்லுவீங்களா? (சொன்னா இதை படிக்கிற பிகருங்களுக்கு எல்லாம் கொஞ்சம் உபயோகமா இருக்கும்)
  • வாரம் ஆனா, சனிகிழமை சீகைக்காய் போட்டு உங்கள் அம்மா உங்கள் தலையை தேய்ச்சு விடுவாங்களா? உலர வைக்க முடிக்கு சாம்பராணி புகை எல்லாம் பிடிப்பிங்களா?
  • இந்த பேன் தொல்லையை எப்படி சமாளிக்கீரிங்க? நடு வாசப்படியில் உட்காரவைத்து உங்களுக்கு யார் பேன் பார்ப்பாங்க?
  • பச்சை, சிவப்பு மாதிரி கலர்கலரா ஒரு டீ சர்ட் போட்டுக்கிட்டு  போகும் போகையில், உங்களை பிகர் என்று தவறாய் நினைத்து யாராவது பாலோவ் செய்து வந்து, உங்களின் பின்புறத்தை தட்டி ஏமாந்து போய் இருக்கார்களா? நீங்கள் வேண்டுமென்றே யாரையாவது விளையாட்டுக்காக ஏமாற்றி இருக்கீங்களா?
  • வராவாரம் பியூட்டி பார்லர் போய் முடி பராமரிப்பு செய்வீர்களா? எத்தனை நாளுக்கு ஒரு முறை சலூனுக்கு செல்வீர்கள்? மாசம் பட்ஜெட் சமாளிக்க முடியுதா?
  • உங்களுக்கு கேர்ள் பிரெண்ட் இருந்துச்சுன்னா, நீங்களும் உங்க கேர்ள் ப்ரெண்டும் மாற்றி மாற்றி தலை வாரி  கொள்வீர்களா? மற்ற பொண்ணுங்க எப்போதாவது உங்கள் முடியை பார்த்து பொறாமை கொண்டு அலைந்து இருக்காங்களா?
  • உங்கள் அக்கா தங்கச்சியோடு, முடியை பிடித்து சண்டை போட்ட அனுபவம் இருக்கா? அப்படி யாரும் இல்லாத பட்சத்தில், தண்ணி பிடிக்க போகும் போது, குழாய் அடியிலாவது சண்டை போட்டதுண்டா?
  • உங்க வீட்டில் யாராவது டூர் போனால், வரும் போது உங்களுக்கு ஹேர் பின், பேண்ட்(Band), கிளிப் இதெல்லாம் வாங்கிட்டு வருவாங்களா?
  • கிரிக்கெட் விளையாடும் போது, தலை முடி டிஸ்டர்ப் பண்ணாதா?  அப்போது மட்டும் Band மாட்டிக் கொள்வீர்களா?
  • நீங்கள் blog வைத்திருந்தால், Hair Care பற்றி Post போடுவீங்களா?
  • உங்க கூந்தல் பற்றி எந்த பெண்ணாவது கவிதை எழுதி, காதலித்து பைத்தியமாய் அலைந்து இருக்காங்களா?


"இத பத்தி என்ன மயித்துக்குடா கேட்கற?" என்று கோபித்து கொள்ளாதிர்கள்.

யாராவது தெரிந்தால் பதில் கேட்டு சொல்லுங்களேன்.




அத்தனைக்கும் ஆசை படு



அத்தனைக்கும் ஆசை படு 
ஜத்குரு ஜாக்கி வாசுதேவ் சொன்னார்.

ஒன்றுக்கு தான் ஆசை பட்டேன்
எதிர் வீட்டு அங்கிள் 
அடிக்க வருகிறார்.



Jun 30, 2010

நிறங்களின் அரசி



உன்னை பார்த்து பழகிய நாள் முதலே
பல வண்ணங்களால்
எனது உலகையே  
கலகம் செய்தாய்.

நீல நிறங்களால்
வான் நீலத்தையும் நீர்த்து போக செய்தாய்.
பச்சை நிறங்களில்
பசுமை புரட்சி செய்தாய்.
மஞ்சள் நிறத்தால்
சூரியனையும் சுருங்க வைத்தாய்.
சிவப்பு நிறத்தால்
எரிமலையை குமுற வைத்தாய்.
இன்னும் பல
பெயர் அறியபடாத நிறங்களில்
மலர்களை மதி
மயங்க வைத்தாய்.

இறுதியாக கரிய நிறத்தால்
என்னை முழுதாக
இருளில் மூழ்கடித்தாய்.

நிறங்கள் அற்று  நான். 




Jun 25, 2010

கல்லூரி பேருந்து


 
கல்லூரி பேருந்து 
உன் நிறுத்தம் 
வருவதற்கு முன்பே 
ஏறி அழகாய் அமர்ந்து கொள்கிறாய்
என் நினைவில்.

நீ வராத நாட்களில்
கல்லூரி பேருந்து
கரும் புகையை கக்கிக் கொண்டு
என் உடலை ஏற்றி செல்லும்
ஓர் சவ ஊர்தியாய்
உருமாற்றம் கொள்கிறது.

உனை காணும் நோக்கிலே
தினமும் கல்லூரி வருவதால்
வருடா வருடம்
தவறாமல் பெறுகிறேன்
வருகை பதிவேட்டில்
நூறு சதவிகிதம்.

நீ இருக்கும் வரை
கல்லூரி பேருந்தின்
ஜன்னலோர இருக்கைகள்
சிறிதும்
என் கவனம் ஈர்ப்பதில்லை.




Apr 30, 2010

முதலை கண்ணி



என் காதலை சொல்ல
ஒவ்வொரு முறையும்
கண்ணாடியின் முன் நின்று
மனதிற்குள்ளும்
சத்தம் போட்டும்
பேசி சரி பார்த்த
வார்த்தைகளை எல்லாம்
அப்படியே விழுங்கி
கொன்று தீர்க்கின்றன
உன் முதலை கண்கள்.

நீ
அழகில் அகலிகையாய்
பக்கம் நெருங்கையில்
அகழியாய்!





Apr 27, 2010

நீ வராத நாட்களில்...

                                                                                         

வகுப்பறையில் நுழைந்ததுமே
தானாக உன் இருக்கையிலே
விழும் என் கண்கள்
நீ இல்லாத நிலை உணர
வகுப்பறை கடிகாரமும்
சில நொடிகள் நின்று போகின்றன
என் இதய துடிப்போடு.

கடைசி மணி அடிக்கும் வரை
கண் திறந்தே வேண்டுகிறேன்
வகுப்பறையில் மாட்டியிருக்கும்
காலண்டர் தெய்வங்களை.

வருகை பதிவேட்டில்
கடைசி பெயர் அழைக்கும் வரை
வாசலையே வெறிக்கின்றேன்
என் நாள் கடத்தும்
உன் பாதங்களுக்காய்.

இன்னும் நம்பிக்கை தளராமல்
"நீ வரும் பேருந்து தாமதம்",
"உன் நண்பனுக்கு உடல் நலம் சரி இல்லை
மருத்துவமனைக்கு கூட சென்றிருக்கிறாய்"
என்றெல்லாம்
காரணங்களை தேட சொல்லி
என் கற்பனையை
விரட்டுகிறேன்.

இதெல்லாம் பொய்த்து விட்டதாய்
உணர்ந்த
சில நிமிட நேரங்களில்
இருட்ட தொடங்கிவிடுகின்றன
என் பொழுதுகள்.

காத்திருக்கிறேன் உன் விழி சேர்க்கும்
அடுத்த விடியலுக்காக!




Dec 8, 2009

முத்தங்களுக்கு வேண்டும் முன்னுரிமை


 
உன் பார்வையின்
பராக்கிரமம் பற்றியே
பறை சாற்றும்
என் கவிதை நோட்டின்
நடு நடுவே
உன் முத்தங்களுக்காகவும்
சில பக்கங்கள்
விட்டு வைக்கிறேன்.

இனி பார்வைகளை
சிறுகதை ஆக்கி
முத்தங்களை
தொடர்கதையாய் எழுதுவோம்.

நாம் சேர்ந்து கழிக்கும்
நிமிட நேரங்களில்
பார்வைகளையே அதிகமாய்
பரிமாறி கொள்கிறோம்.
இனி,
முத்தங்களுக்கும்
வேண்டும் முன்னுரிமை.

சீக்கிரம் உன் முத்தப் படையுடன்
முன்னேறி வா!
நம் வெட்கக் கோட்டையை
தகர்த்தெறிந்து    
பார்வைகளை சிறை வைப்போம்.




Nov 27, 2009

இதழ் செய்த தவறு





நம் ஒவ்வொரு சந்திப்பிலும்
தாங்கள் பேச வேண்டிய வார்த்தைகளை
விழிகளை விட்டே பேச வைக்கும்
நம் இதழ்களை கொஞ்சம்
கடுமையாய் 
தண்டிப்போம்
வா!


டிஸ்கி : இதன் ஆங்கில பதிப்பு இங்கே.