Jun 17, 2011

God must not be Crazy (என் ட்ரெக்கிங் அனுபவம்)

ஜூன் மாதத்தில் இமயமலை பிரதேசத்தின் குழு மணாலியின் கிழக்கே அமைந்துள்ள கசோல்(Kasol) என்ற பகுதியில் பத்து நாள்  ட்ரெக்கிங் போயிருந்தேன். என் வாழ்வின் மறக்க முடியாத நிகழ்வாக அது அமைந்தது ஆச்சர்யமே. அது போல ஒரு அனுபவத்தை பெறுவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. 

அங்கு இருந்த பத்து நாட்களில் பேஸ் கேம்ப்பை தவிர, மற்ற இடங்களில் செல்போன் நெட்வொர்க் அதிகம் கிடைக்கததால் எல்லா நாட்களும் மகிழ்ச்சியாக கழிக்க முடிந்தது. ஒரு சில நெட்வொர்க்குகள் மட்டுமே அங்கங்கு கிடைத்தது. அந்த நாட்களில் தமிழ் நாட்டை பற்றிய எந்த ஒரு செய்தியும் தெரியவில்லை.

ரஜினி இன்னும் உயிரோடு இருக்காரா?
கனிமொழியின் கதி என்ன ஆச்சு? ஜாமீன் கிடைத்ததா?
சினிமாகாரங்க யாருக்காவது பாராட்டு விழா எடுத்தாங்களா?
தமிழ் தாத்தா கருணா லூசுத்தனமாய் ஏதாவது அறிக்கை விட்டாரா?
ஜெயலலிதா ஆட்சியில் தமிழ்நாடு சொர்க்கபுரியா ஆகிடுச்சா?

இப்படி எதை பற்றியும் தெரியாமலே சுற்றி கொண்டிருந்தேன்.

என் முதல் விமானப் பயணமும் அதில் தான் அமைந்தது. ஜன்னல் ஓர இருக்கை வேறு. ஏர் இந்தியா பனி பெண்கள் பனியை போன்றே வெள்ளை வெள்ளையாய் அவ்வளவு அழகாய், கண்களுக்கு காண குளிர்ச்சியாய் இருக்கிறார்கள். இந்திய காலாச்சார உடையான சேலைதான் அவர்கள் டிரஸ் கோடு. ஜன்னலுக்கு வெளியே வெள்ளை மேகங்கள். உள்ளே வெள்ளை இடுப்பு. எனக்கு எதை பார்ப்பது என்ற மிக பெரிய தடுமாற்றம் ஏற்பட்டது. இதற்கு மேல் நான் விவரித்தால் நன்றாக இருக்காது.

http://www.yhaindia.org/ என்ற அமைப்பின் மூலமாகத்தான் இந்த ட்ரெக்கிங்கிற்கு சென்றோம் நானும் என் நண்பன் தமிழ் அரசனும். அரைகுறையாய் சில ஹிந்தி வார்த்தைகள் மட்டும் தெரிந்து கொண்டு சலோ(Chalo) என்று கிளம்பிவிட்டோம். ஆட்டோகாரன் முதல், எங்களிடம் பேசும் எவரிடமும் "ஹிந்தி நஹி மாலும்" என்று சொல்லிவிட்டு தான் அடுத்தகட்ட பேச்சு வார்த்தைக்கே தயாராவோம். நாங்கள் டெல்லியில் ஹிந்தி தெரியாமல் கஷ்டப் படுவதற்கு காரணமான தமிழக அரசியல்வாதிகளும் அதே தலைநகரில் துன்பம் அனுபவித்து கொண்டிருந்தார்கள் வேறுவகையில்.




 காலையில் டெல்லியில் தரை இறங்கியவுடன், குதுப்மினாருக்கு சென்று கோபுரத்தை மல்லாக்கப் படுத்து ஒரு போட்டோவும், அடுத்து போய் செங்கோட்டைக்கு முன்னால் கம்பீரமாய் நின்று போஸ் கொடுத்து ஒரு போட்டோவும் எடுத்து கொண்டு அன்றைய சாயுங்காலம் கசோலுக்கு பஸ் பயணம் தயாரானோம். அடுத்தநாள் காலை பேருந்து கசோலை நெருங்க மழை லேசாய் தூறியது. பார்வதி ஆற்றின் கரை ஒட்டியே சாலை பயணம். இயற்கையின் அட்டகாசங்கள் அங்கிருந்தே ஆரம்பமானது. 

முதல் நாள்:
கசோலில் உள்ள YHAI Base Camp -க்கு வந்து சேர்ந்தோம். நான் பசி தாங்கமாட்டேன் என்று தெரிந்து உடனே கூப்பிட்டு நூடுல்ஸ் சாப்பிட கொடுத்தார்கள் கேம்ப் சமையல்காரர்கள். தெய்வங்கள் அவர்கள். முதல் நாள் நம் பெயரை மெடிக்கல் சான்றிதழ் கொடுத்து பதிவு செய்ய வேண்டும். அடுத்த இரண்டு நாள் பயிற்சிகள். நான்காவது நாள் தான் ட்ரெக்கிங்-க்கு கிளம்ப முடியும்.

நாங்கள் தமிழில் பேசி கொண்டிருக்கும் போது, நீங்கள் தமிழா? என்று கேட்டு  என்று அறிமுகம் ஆனார்கள் இரண்டு தமிழர்கள். வரிஷ்டாவும், மகியும். அப்புறம் மொத்தமாய் பத்து தமிழர்கள் சேர்ந்தோம். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முழுதும் நடைபெறும் SARPASS எனப்படும் இந்த ட்ரெக்கிங் ப்ரோக்ராமுக்கு, ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு குழு வந்திறங்கும். ஒவ்வொரு குழுவிலும் அதிக பட்சமாய் ஐம்பது பேர் இருக்கலாம். ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, கல்கத்தா, நாக்பூர் ஆகிய இடங்களில் இருந்து வந்திருந்தார்கள். என் இன்னொரு நண்பன் வரமுடியாததால் எங்கள் குழுவில் 49 பேர் மட்டுமே. 



முதல் நாள் பெயர் பதிவு செய்த உடன் உங்களுக்கு ஒரு கூடாரம்(Tent) ஒதுக்கி விடுவார்கள். ஒரு கூடாரத்தில் பத்து முதல் பனிரெண்டு பேர் வரை தங்க வைப்பார்கள். மாடிவீட்டு மகான்களும் வசதி பாராமல் இங்கு தான் தங்க வேண்டும். யாருக்கும் விதிவிலக்கு கிடையாது. அதற்கு அப்புறம் ஷாப்பிங், சாப்பிட என்று நாய் மாதிரி எங்கு வேண்டுமானாலும் சுற்றி விட்டு சாயுங்காலம் திரும்பி விட வேண்டும். இந்த பகுதியில் வெளிநாட்டுகாரர்கள் அதிகமாய் சுற்றுகிறார்கள். குறிப்பாய் இஸ்ரேல்காரர்கள் இரண்டு மூன்று மாதங்கள் இருந்து குடித்து கும்மாளம் அடித்து பின்பு நாடு திரும்புகிறார்கள்.

சாயுங்கலாம் டீ நேரம் முடிந்தவுடன்,  இரவு விரித்து, போர்த்தி தூங்க கம்பளி போர்வை இரண்டும், மலை ஏறுவதற்கு உபயோக படுத்த ஒரு BAG ஒன்றும் கொடுப்பார்கள். அந்த கம்பளியின் எடை உங்களுக்கு அடுத்த நாள் காலையில் தான் முழுமையாக தெரியும்.

இரவு டின்னர் முடிந்ததும், கேம்ப் பயர் நிகழ்ச்சி. அன்றைய தினம் SARPASS முடித்த குழு மெம்பர்களுக்கு சான்றிதழ் வழங்குவார்கள். பிறகு கலை நிகழ்ச்சிகள் நடக்கும். பாட தெரிந்தவர்கள் பாடலாம். டான்ஸ், மிமிக்க்ரி என்று எது உங்களுக்கு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் செய்யலாம். அங்கே "நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்" என்று சொல்லிக்கொண்டு இரண்டு கேம்ப் லீடர்கள் இருக்கிறார்கள். நிறைய கண்டிசன் சொல்லி பயமுறுத்துவார்கள்.

நோ ஸ்மோகிங். 
நோ டிரிங்கிங். 
அப்புறம் பசங்க டெண்டுக்குள்ள  பொண்ணுங்க ஆரும் போககூடாது. பொண்ணுங்க டெண்டுக்குள்ள பசங்க ஆரும் போக கூடாது

என்று நாட்டாமை விஜயகுமார் மாதிரி மிகவும் கண்டிப்புடன் சொன்னார் ஒருவர். முக்கிய விஷயமான சாப்பாட்டை பற்றி சொல்ல வேண்டும்.

  1. காலை எழுந்தவுடன் காபி வித் பிஸ்கட். 
  2. எட்டு மணிக்கு பிரேக் பாஸ்ட். 
  3. மதியம் ஒரு மணிக்கு லஞ்ச். 
  4. சாயுங்காலம் ஐந்து மணிக்கு டீ வித் பிஸ்கட். 
  5. இரவு 7:30 க்கு டின்னர். 
  6. படுக்க போகும் முன் போன்விட்டா.
 சாப்பாட்டை சேர்த்து மொத்தமாய் பதினோரு நாளைக்கும் சேர்த்து அவர்கள் வாங்கும் கட்டணம் வெறும் மூவாயிரத்து இருநூறு மட்டுமே.

இந்த ட்ரிப் முடித்து வந்ததும் என் நண்பன் என்னிடம் கேட்டான்,

ஏன்டா? பசங்களையும் பொண்ணுங்களையும் அவங்க ஒரே டெண்டல தங்க வைக்கல?

நான்: "அப்புறம் டென்ட் உடைஞ்சு விழுந்துடும் கண்ணா!"

இரண்டாம் நாள்:

"அடடே! இந்த ட்ரிப் ரொம்ப ஜாலியா இருக்கே!" என்று சந்தோஷத்தில் தலையோடு இழுத்து போர்த்தி குப்புறப் படுத்து குறட்டை விட்டு தூங்கி விடாதிர்கள். அடுத்த நாள் காலை காபி குடித்தவுடன் உடற்பயிற்சி செய்யும் இடத்துக்கு ஓட விடுவார்கள். ஷு வைத்திருக்காத காரணத்தால் சிலரை YHAI உள்ளே உள்ள இடத்திலே மூன்று ரவுண்டு ஓட விட்டார்கள். ஓடி போனதிலே குளிர் எல்லாம் போய் வியர்வை வழிய ஆரம்பித்து விடும். கஷ்டப்படட்டு உடற்பயிற்சி செய்து முடித்தவுடன் கடைசியில் ஹா! ஹா! ஹா! என்று சத்தம் போட்டு அந்த வலியிலும் சிரிக்க வேறு சொல்வார்கள்.

எல்லாம் முடிந்து காலை சாப்பிட்டவுடன் அன்றைக்கு (பனி) போருக்கு, ஐ மீன் ட்ரெக்கிங் செல்லும் குழுவை வழியனுப்பி வைக்க வேண்டும். அடுத்து உங்களது இரண்டு மொத்த கம்பளி போர்வையை எடுத்து அவர்கள் கொடுத்த Bag இல் அடைத்து மாட்டி கொண்டு அருகில் உள்ள மலை பகுதியில் ஏற வேண்டும். இது உங்கள் எடையுள்ள பையை தூக்கி கொண்டு மலை மீது ஏறி நடக்க பழகும் ஒரு பயிற்சிதான்.





மூன்றாம் நாள்:

அடுத்த நாள் காலை உடற்பயிற்சி, உணவு எல்லாம் முடிந்த பின், பாறை ஏறுதல் பயிற்சி. இது பார்க்க நல்ல காமெடியான நிகழ்ச்சியும் கூட. உங்கள் இடுப்பில் கயிறை கட்டி விடுவார்கள். மறுமுனை பாறையின் மேலே உள்ள மரத்தில் கட்டி வைக்கப்படும். சின்ன சின்ன இடுக்குகளில் காலை வைத்து கஷ்டப்பட்டு ஏற வேண்டும். சில பேர் வெகு நேரம் பாறைகளை கட்டிபிடித்து கொண்டு ஆனந்தத்தில் திளைத்திருப்பார்கள். சிலர் மேலே இருக்கும் மரம் ஒடிந்து விடும் என்ற நல்ல எண்ணத்தில் ஏறாமலும் விட்டு விடுவார்கள்.

நான்காம் நாள்:

அன்றைக்கு நாம் ட்ரெக்கிங் செல்லவதற்கு மற்றவர்கள் கைதட்டி வழியனுப்பி வைப்பார்கள். மதிய உணவு லஞ்ச் பாக்ஸ்சில் போட்டு கொடுத்து விடுவார்கள்.


அன்றைக்கு ஆரம்பித்து ஆறு நாட்கள் ஆறு கேம்பிற்க்கும் மலைமலையாய் ஏறி இறங்க வேண்டும். ஒவ்வொரு கேம்பிற்க்கும் ஏழு கிலோமீட்டர்கள் முதல் பத்து கிலோமீட்டர்கள் வரை ஏறி இறங்கி நடக்க வேண்டும். ஒவ்வொன்றும் புதிது புதிதான அனுபவத்தை தந்தது. ஏழாவது நாள் பேஸ் கேம்பிற்கு வந்து விட வேண்டும்.

போகும் வழியில் எல்லாம் எம்ஜியார், இளையராஜா பாட்டிலிருந்து இன்றைய பாட்டு வரை எல்லா பாடல்களையும் பாடி கிழித்து காட்டாற்றில் ஓட விட்டோம். வெகு தூரம் நடந்து கால் வலிக்கும் போது "கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை" சரணம் பாடினோம். சாமியே சரணம் ஐயப்பா!

நடு நடுவே நமக்கென்று வாங்கி சாப்பிட கடைகள் போட்டிருப்பார்கள். டீ முதல் நூடுல்ஸ், ஆம்லேட், ஸ்நாக்ஸ் வகைகள் எல்லாம் கிடைக்கும். விலையும் நீங்கள் ஏறி வந்த உயரத்தை போல அதிகமாகவே இருக்கும். உயரம் ஏற ஏற விலையும் நேர் விகித்தில் ஏறிக்கொண்டே இருக்கும். உதாரணமாக இங்கே ஐந்து ருபாய் மேகி நூடுல்ஸ் விலை அங்கு 10, 20,30,40,50 வரை சென்றது.

அழகிய இடத்தில் அமைந்திருக்கும் பத்ரி கேம்பிற்கு சென்ற சில நிமிடத்தில் பனி கட்டி மழை பொழிய ஆரம்பித்தது. விவரிக்க முடியாத மகிழ்ச்சி. அப்போதே எனக்கு அனுபவித்து போதும் வீட்டிக்கு செல்லலாம் என்ற மன நிறைவு வந்தது.


ஒவ்வொரு கேம்பிற்க்கும் ஒரு கேம்ப் லீடர் இருப்பார். ஒரு கேம்பை சென்றடைந்ததும், 
சாப்பாடு நேரம் என்ன?, 
குடிக்க தண்ணி எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும்?, 
புழங்குவதற்கு தண்ணி எங்கு பயன்படுத்த வேண்டும்? 
என பின்பற்ற வேண்டிய அனைத்து விதிமுறைகளையும் சொல்லிவிடுவார். 

அவற்றில் முக்கியமானது சாப்பிட்ட பின் செல்ல வேண்டிய இடம். எல்லாம் திறந்தவெளி பல்கலை கழகம் தான். இந்த நிலப்பரப்பு ஆண்களுக்கு, இந்த நிலப்பரப்பு பெண்களுக்கு என்று ஏரியா பிரித்து கொடுத்து விடுவார்கள். டாய்லெட் பேப்பர் நீங்கள் வைத்திருக்க வேண்டியது அவசியம். டாய்லெட் பேப்பர் யூஸ் செய்வதா? இல்லை குளிர் தண்ணி யூஸ் செய்வதா? என்பது உங்கள் விருப்பம். பொதுவாக நீரோடை ஓரமாய் தான் கேம்ப் அமைந்திருக்கும். கை கழுவுவதற்கு குளிர் நீரை தொட்டால் விரல் எரியும். மக்கள் தண்ணியை வாட்டர் பாட்டிலில் பிடித்து கொண்டு அவ்வபோது காட்டுப் பகுதியில் மறைந்து விடுவர். பனிமலையில் அதற்கு போகும் போது ஒரு குழி தோண்டி அதில் காரியத்தை முடித்து மூடிவிட்டு வந்து விட வேண்டும். ஏற்கனவே மூடிய குழிகளை மிதிக்காமல் செல்வது உங்கள் சாமர்த்தியம்.



நகாரு என்ற கேம்ப் தான் மிக உயரமான கேம்ப் (13,800 ft). பனிமலையில் அமைந்துள்ளது. இங்கு பனிக்குள் ஒரு பைப்பை செருகி சூரியன் மறையும் வரை உருகி வழியும் நீரை பிடித்து சேமிக்கிறார்கள். எந்த ஒரு கேம்பிலும் சாப்பாட்டுக்கு குறை ஏதும் வைக்க மாட்டார்கள். நீங்கள் சுறுசுறுப்பாகவும் வலிமையுடனும் ஏறுவதற்காக சத்தான உணவுகளை தருவார்கள். ரொட்டியுடன் உருளை கிழங்கு கூட்டு அதிகம் கொடுப்பார்கள். அவர்கள் தருகிறார்கள் என்று இஷ்டத்திற்கு உருளை கிழங்கை சாப்பிட்டால், அப்புறம் உங்களுக்கு வாயால் பிரச்னை இருக்காது. வாயை கட்டு படுத்த வேண்டும் அல்லது மற்றதை கட்டு படுத்த வேண்டும்.





பேஸ் கேம்ப்பை தவிர வேறு எந்த கேம்பிலும் மின்சாரம் கிடையாது. அதனால் மாலை சூரியன் மறைவதற்குள் டின்னர் முடித்தாக வேண்டும். நகாரு கேம்பில் இருந்து கிளம்பும் போது காலை 2:30 மணிக்கெல்லாம் எழுந்து, காலை உணவு சாப்பிட்டு விட்டு 4 மணிக்கு SARPASS எனப்படும் பனிமலைப் பகுதியை கடக்க வேண்டும். அதிகம் வெயில் வந்து விட்டால் பனி உருகி நடக்கையில் வழுக்க ஆரம்பித்து விடும். பனி மலையில் இருந்து கீழே இறங்கும் போது, படுக்க வைத்து தள்ளி விடுவார்கள். அப்படியே சறுக்கி கொண்டு கீழே வரலாம். அருமையான அனுபவம். என்ஜாய் பண்ணுவதற்கு இயற்கையை இவ்வளவு அழகாய் படைத்த இறைவன் கண்டிப்பாய் முட்டாளாய் இருக்க முடியாது.



அங்கே உங்கள் சுமைகளை தூக்கி கொண்டு நடக்க சிரமப் பட்டால், போர்டர்கள்(Porter) இருக்கிறார்கள். எங்கள் குழுவில் மூன்று போர்டர் பெண்கள் வந்தார்கள்.



அவர்கள் அனாயசமாக இரண்டு பைகளை(bags) தூக்கி கொண்டு ஏறுகிறார்கள். மேலே படத்தில் உள்ள இந்த பெண் ஒருமுறை என்னிடம் எதோ கேட்க, நான் "ஹிந்தி நஹி மாலும்"  என்று சொல்ல, அவள் வேண்டுமென்றே

"ஆப் கா நாம் கியா ஹே?" என்று கேட்டாள்.
"கதிர்வேல்" என்று பதில் சொன்னேன்.
நான் தப்பாய் பதில் சொல்லிவிட்டேனா என்று மறுபடியும் ஆங்கிலத்தில்
What is your name?" என்று கேட்டாள்.
"கதிர்வேல்" என்று மறுபடியும் சொன்னதை கேட்டு சிரித்து விட்டாள்.

பத்து நாட்களில் எங்களுக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். எங்கள் எல்லோருக்கும் இருந்த ஒரே ஒரு குறை என்னவென்றால், பத்து நாட்களுக்கு குளிக்க முடியவில்லை. குளிக்கவும் கூடாது.

ஆனால் இந்த காரணம் தான் என் நெருங்கிய நண்பன் முருகன் அடுத்த ஆண்டு SARPASS செல்லுவதற்கு ஆர்வமாய் அமைந்தது என்று சொன்னால் அது மிகைஅல்ல. பையன் சென்னையிலே அதிகம் குளிக்க மாட்டான்.

இதை தவிர எனக்கு இருந்த மிக பெரிய வருத்தம், ஒரு நல்ல SLR கேமராவும், எக்ஸ்ட்ரா பேட்டரிகளும் இல்லாததுதான்.

கடைசி நாள் திரும்பி வரும்போது மணிக்கரன் என்ற ஊரில் வரும் இயற்கை வெந்நீர் ஊற்றில் குளித்துவிட்டு, அருகில் உள்ள குருத்வார் சீக்கியர்கள் கோவிலில் இலவச சாப்பாடு கொடுக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்தவுடன், அங்கே சென்று சாப்பிட்டுவிட்டு வந்தோம்.


எல்லாம் முடித்து சான்றிதல்கள் எல்லாம் வாங்கிவிட்டு டெல்லி வந்து சேர்ந்தோம். மெட்ரோ ரயில் மூலமாக ஏர்போர்ட் செல்ல, அங்குள்ள கஸ்டமர் கேர் பெண்மணியிடம் விவரம் கேட்டால், அவள் என்னுடைய காதலி போல ஹஸ்கி வாய்சில் பதில் சொன்னாள். மறுபடியும் புரியவில்லை என்று காதை  உள்ளே நுழைத்து கேட்டேன். மறுபடியும் ஒன்னும் புரியவில்லை. நான் டென்ஷன் ஆக வேண்டியதிற்கு பதிலாக அவள் டென்ஷன் ஆகி பேப்பரில் எழுதி கொடுத்தாள்.

ஒருவேளை நமக்கு தான் காது கேட்கவில்லையோ என்று "ஆர்குட்" என்ற நண்பனிடம் இதை சொன்னால், அவனும் அவள் மேல் மிக கோபத்தில்  இருந்தான். மூன்றாம் பிறை ஸ்ரீதேவி மாதிரி வாய்பேச தெரியாதவள் எல்லாம் எதுக்கு கஸ்டமர் கேரில் இருக்கிறாள் என்பது தெரியவில்லை.

அடுத்த நாள் காலை மீண்டும்,
அதே ஏர்இந்தியா விமானம்.
அதே வெள்ளை மேகங்கள்.
அதே மனக் குழப்பம்.


பின் குறிப்பு: 
அடுத்த வருடம் இந்த ட்ரெக்கிங் செல்ல விரும்புவோர் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கமென்ட்டில் உங்கள் கேள்விகளை கேட்கலாம்.


May 24, 2011

20 Minutes to Heaven (ஆபாயில்)

எனக்கு வாழ்க்கைல பிடிக்காதது இரண்டு. பணமும், புகழும். நூறு பாலோவர்ஸ் கடந்து விட்டேன் என்று சொல்வது எனக்கு பெருமையாய் இல்லை. 

ஏனென்றால் வெட்டியாய் எழுதி பொழுதை கழிக்கிறேன் என்று மற்றவர்கள் கண்டு பிடித்து விடுவார்கள் என்பதுதான். சச்சினை எனக்கு பிடிக்காது என்றாலும் சச்சினைப் போல, தொண்ணூறில் இருந்து நூறு பாலோவர்ஸ் வருவதற்குள் நிறைய காலம் ஆகி விட்டன. 



பிளாக் எழுதுவது மதுவை போல அதிக போதை தரக்கூடியது. அதிலும் பின்னூட்ட ஊறுகாய் தொடர்ந்து கிடைத்தால் நீங்கள் காலி. இட்லிவடை மாதிரி, பிரேக் நியூஸ்சை கூட தனி போஸ்டாய் போடா வேண்டி வரும். 

உங்களுக்கு விருப்பம் இருந்தால், நீங்களும் ஒரு பிளாக் எழுதுங்கள். ஆனால் பிளாக் எழுதி பெண்களை மடக்கி விடலாம் என்று மட்டும் நினைத்து விடாதிர்கள். இன்டர்நெட் கபேக்கு போறவங்கல்லாம் உங்க ப்ளாக் தான் படிப்பாங்க என்று தயவு செய்து தப்பு கணக்கு போட வேண்டாம்.

வெட்டியாய் வீட்டில் உட்கார்ந்து பிளாக் எழுதுவதை விட ஒரு பெண் பின்னால் வெட்டியாய் சுற்றலாம். ஆங்கிலோ இந்தியன் பொண்ணு பின்னால பன்னாடை மாதிரி சுத்திய பையனுக்கு எல்லாம் தேசிய விருது கொடுத்துட்டாங்க. ஆனால் ஆஸ்திரேலியா போய் தீவிரவாதியை மடக்கி பிடித்த கேப்டனுக்கு மாநில விருது கூட கிடைக்காதது அசிங்கம்.



பொண்ணுங்க கிடைக்கிறாங்களோ இல்லையோ, போஸ்ட்ல மேட்டர் எழுதறதுக்கு நம்ம பசங்க தான் மாட்றாங்க. இப்படி தான் நான் ஒவ்வொருத்தனையும் மிரட்டி கொண்டு உள்ளேன்.



திகாலை சரியாக மூன்று மணி இரண்டு நிமிடம் இருக்கலாம். என் அலைபேசி "அய்யய்யோ என் நெஞ்சு அலையுதடி" என்று அலறியது. இன்டர்நேஷனல் நம்பர். கனடாவில் இருந்து ஒரு பெண் வாசகர். தேர்தல் முடிந்து ரொம்ப நாள் ஆகுது. ஆனால் இன்னும் தேர்தலைப் பற்றி என்னோட கருத்தை ஏதும் ஏன் சொல்லவில்லை என்றும் மிகவும் வருத்தப்பட்டார். என் கருத்தை அறியாமல் அவர் உறங்க முடியவில்லை எனவும் கூறினார். காலையில் எழுந்து பல் துலக்கி விட்டு என் கருத்தை பதிவு செய்வதாக வாக்குறுதி கொடுத்தேன்.

மே 13-ம் தேதி அதிமுக கொளுத்திய வெடிச் சத்தம் என்னைப் போலவே பொது மக்கள் பலரையும், தீபாவளிக்கு மீதமான பட்டாசுகளை முழுதும் புத்தாண்டிற்கு வெடித்திருக்காமல் மே 13-ம் தேதி வரை வைத்திருந்திருக்கலாம் என எண்ண வைத்தது. ஜெயலலிதாவையே ரொம்ப நல்லவங்க அப்படின்னு சொல்ல வைத்தவர் தன்னலமற்ற பெருந்தலைவர் கலைஞர்.


கனிமொழி ஜெயிலுக்கு போய் ரொட்டி சாப்பிடறது மகிழ்ச்சியா இருந்தாலும், ரஜினி வீட்டுக்கு போய் சூப் குடிக்காதது தமிழ் குடிமக்களுக்கு ரொம்பவே கஷ்டமாய் இருக்கிறது. ஆனால் கலைஞருக்கு அதுவே தலைகீழாய் இருக்கலாம். 

விஜயகாந்த் மட்டும் இப்போது "தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு" என்ற பஞ்ச டயலாக்கை தள்ளி வைத்துவிட்டு, வடிவேலுவை மன்னித்து அவர் கூட ஒரு படம் நடித்தால் அடுத்த தேர்தலில் அவர் கட்சி இன்னும் அதிக தொகுதிகளில் வெற்றி பெரும். கொஞ்ச நஞ்சம் இருக்கிற திமுக ஓட்டும் விஜயகாந்துக்கு தான்.

தேர்தல் முடிவுக்கு பிறகு நம்ம டாக்டர் விஜய் ஒரு பேட்டி கொடுத்தார்.


"நான் சொன்னதுக்காக ஒட்டு போட்டு அதிமுகவை வெற்றி பெற வாய்த்த அத்தனை பொதுமக்களுக்கும் நன்றி"

இதனால யாருக்கு கேவலம்? மக்களுக்கா? இல்லை ஜெயலலிதாவுக்கா? இல்லை டமில் கலைஞருக்கா?

நல்லவேளை நான் அதிமுகவுக்கு ஒட்டு போடவில்லை.


அம்மா ஆட்சிக்கு பிறகு, தமிழ் நாட்டு ரவுடிகள் எல்லோரும் "திருட்டு ரயில்" பிடித்து ஆந்திராவுக்கு ஓடிவிட்டார்களாம். பேரரசு படங்களில் ரவுடிகளாய் நடித்தவர்களும் அவர்களுடன் சேர்ந்து ஓடியது தான் இங்கே பிரச்சினையே. தற்போது தன் படத்தில் வில்லனாய் நடிக்க ஆள் இல்லாமல் பேரரசு கோடம்பாக்கத்தில் அலைந்து வருகிறார். அதனால் வில்லன் கேரக்டரில் தானே நடிப்பதாய் தனக்கு "நெருக்கமான" நடிகைகளிடம் சொல்லி வருகிறாராம். அந்த படத்தில் அவரே ஹீரோவாய் நடிப்பதாயும் வதந்திகள் வலம் வருகின்றன.

அப்புறம் இன்னொரு ஆள் கூட தமிழ் நாட்டை விட்டு ஓடி டெல்லியில் டென்ட் அடித்து தங்கி வருகிறார். அவர்






ரு இளமையின் நீரூற்றை (Fountain of youth) தேடி போவதுதான் பைரேட்ஸ் ஆப் தி கரிபியன் நான்காவது பாகத்தின் கதை. அதில் நாயகி, சாகப் போகின்ற அவருடைய அப்பாவை (வில்லன்) காப்பாற்ற அதை தேடி போவார். அவர்களுக்கு இரண்டு வெள்ளி கிண்ணங்கள் கிடைக்கும். அதில் ஒரு கிண்ணத்தில் தண்ணீரும், அடுத்த கிண்ணத்தில் தண்ணீரோடு கடற்கன்னியின் கண்ணீரும் கலந்து இருக்க வேண்டும். இரண்டாவது கிண்ணத்தில் (கண்ணீர் உள்ளது)  இருப்பவற்றை குடிப்பவர்க்கு, முதல் கிண்ணத்தில் இருக்கும் (தண்ணீர் உள்ளது) குடிப்பவறது மீதி ஆயுளும் கிடைக்கும். படத்தின் இறுதியில் நாயகியும் அவருடைய அப்பாவும், இருவருமே சாகும் தருவாயில் இருப்பார்கள். அப்போது அவர்களில் இருவரில் ஒருவர் தான் இரண்டாவது கிண்ணத்தில் உள்ளதை குடித்து உயிரோடு இருக்க முடியும். கடைசியில் யார் தன் உயிரை விட்டு கொடுத்தார்கள் என்பது தான் கதை.

அது போல ஒரு சமயத்தில் கனிமொழியும் கருணாநிதியும் இருந்தால் என்ன செய்வார்கள். யார் விட்டு கொடுப்பார்கள்?

ஒரு க்ளு. தற்போது உள்ள நிலைமையில் ஒருவர் மட்டுமே தன் உயிரை தியாகம் செய்ய முன் வருவார்.

அவர் யார்?


ரு நாள் தொலைக்காட்சியில் "மதராசப்பட்டினம்" திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தேன். கிளைமாக்ஸ் காட்சி ஓடிக் கொண்டிருந்தது. அதில் வயதான நாயகி, நாயகனின் கல்லறையில் உட்கார்ந்து அழுது கொண்டிருப்பார். அப்போது தன் பேத்தி வந்து அவரது தோளை தொட அப்படியே சரிந்து விழுவார். அவசர அவசரமாய் ஹாஸ்பிட்டல் எடுத்து செல்வார்கள். பரிசோதித்த டாக்டர் சொல்லுவார் "அவர் இறந்து 20 நிமிடம் ஆகிறது". உடனே அடுத்த காட்சியில் சொர்க்கத்தில் இருக்கும் நாயகனோடு நாயகி ஓடி சென்று கட்டி பிடிப்பார். 

இதிலிருந்து உங்களுக்கு என்ன தெரிகிறது?

இன்னுமா பதில் தெரியாமல் கொட்ட கொட்ட முழித்து கொண்டு இருக்கிறீர்கள்?

சொர்க்கத்திற்கு செல்ல 20 நிமிடம் தான் ஆகும்.





ண்பர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது என்றால் இப்போதெல்லாம் பேச்சுலர் பார்ட்டி ஒன்றை கொடுத்தாக வேண்டும். அப்படிதான் கடந்த வாரம் என் நண்பன் பிரகாஷ் ஒரு ரெஸ்டாரென்ட்டில் டின்னர் பார்ட்டி வைத்தான். நாங்கள் பனிரெண்டு பேருக்கு மேல் இருந்தோம். பொதுவாக கல்லூரி தேர்வில் தெரியாத கேள்வியை கண்டும் காணாமல் பழைய காதலியை போல விட்டுவிடும் நம் மக்கள் மெனு கார்டில் தெரியாத அயிட்டங்கள் அனைத்தையும் ஆர்டர் செய்து சாப்பிட அளவிலா ஆர்வம் கொண்டுள்ளனர்.

பக்கத்துக்கு டேபிளில் இரு நவ யுவதிகள் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். அவர்கள் கவனத்தை பெற ஒருவன் தட்டில் ஸ்பூன் வைத்து சத்தம் எழுப்பி கொண்டிருந்தான். இன்னொருவன் நாகரிகம் கருதி தந்தூரி சிக்கனை கூட சாப்டாக பிய்த்து சாப்பிட்டு கொண்டிருந்தான்.

சாப்பிட்டு முடித்து ஆறாயிரத்துக்கு மேல் பில் வந்தது. எங்கள் வயிறு நிறைந்தது.


"மன்மதன்" சொம்பு நடித்த வானம் படம் தவறுதலாய் பார்க்க நேர்ந்தது. ஹீரோயிச படங்களை விடுத்தது அவர் ஆஸ்கார் அவார்டுக்கு தகுதியான படங்களில் தற்போது தொடர்ந்து அவர் நடித்து வருவதாக மக்கள் ஆரவாரப் படுகிறார்கள். பன்றி சாக்கடை விட்டு வெளியே வந்து சாலையில் நடந்தாலும் பன்றிக்கு பெயர் மாறாது. படம், நிறைய சமுதாயப் பிரச்சினைகளை அலசுகிறது. ஒவ்வொரு மனிதர்களுக்கு நடக்கும் வெவ்வேறு பிரச்சனை, அதனால் ஏற்படும் விளைவுகளால் எப்படி பாதிக்கிறார்கள்?

மனிதனுக்கு மட்டுமே பிறந்தவுடனே பிரச்சனைகள் ஆரம்பித்து விடுகின்றன. வாழ்க்கை எவ்வளவு அசிங்கமானது என்பதை சொல்ல, அனுஷ்கா விபச்சாரி வேடத்தில் நடிப்பதை பார்க்கின்ற மனக்கஷ்டம் ஒன்றே போதுமானது. ஆனால் நம் நடிகர்கள் எப்படி மனநலம் குன்றிய வேடங்களில் நடித்து தங்கள் நடிப்பு திறமையை வெளிப்படுத்துகிறார்களோ, அது போல நடிகைகளும் விபச்சாரி வேடங்களில் உண்மையாக வாழ்ந்து காட்டுகிறார்கள்.





   என்ன வாழ்க்கைடா இது?


ரத்தச்சரித்திரம் போன்ற படங்களில் சூர்யா நடிக்கும் போது, அந்த கதையின் கேரக்டர் ஆனா தாதாவை நேரில் சந்தித்து அவரிடம் டிப்ஸ் கேட்டு அதன்படி தத்ரூபமாய் நடித்ததாகவும், படம் வெளிவந்த பிறகும் அந்த கேரக்டரில் வாழ்வதாகவும் உணர்ச்சி பொங்க பேட்டி கொடுப்பார்கள். அது போல இந்த படத்துக்கும் விபச்சாரிகளை சந்தித்து டிப்ஸ் வாங்கி இருப்பார்களோ? இதைப் பற்றி பேட்டியில் ஏன் யாரும் வாய் திறப்பதில்லை? நம் நாட்டில் தாதாவுக்கு இருக்கும் மரியாதை கூட விபச்சாரிக்கு இல்லை என்பது வருத்தமான விஷயம். தாதாவை விட விபச்சாரியாய் இருப்பது கேவலம். கொலை செய்வதை விட விபச்சாரம் செய்வது மிகப் பெரும் குற்றம்.


சாதி மதங்கள் அணிந்து ஏன் மக்கள் அவதிப் படுகிறார்கள்? சாதி, மதம் என்பது ஆடையைப் போல தான். அணிந்தால் வேறுபாடு தெரியும். அவிழ்த்து எறியும் போது தான் நிர்வாணத்தைப் போல அழகாய் இருக்கும்.

பொன்மொழி:

ரேப் செய்பவனை விட ரேப் செய்துவிட்டு கொலை செய்பவன் மிக கொடூரமானவன்.

எவ்வளவு சுயநலம்!!!



May 17, 2011

பஞ்ச பாண்டவர்களுக்கு உதவிடுங்கள்

வீட்டு ஓனர்களும், வீட்டு புரோக்கர்களும், எனது ரூம் நண்பர்களும், மற்ற ஏனையவர்களும் மன்னிக்கவும். இது முழுதும் நகைச்சுவைக்கே.


நியூ ஏஜ் பாண்டவர்கள் ஆகிய நாங்கள் ஐந்து பெரும் ஐ.டி துறையில் அமெரிக்கர்களுக்கு அடிமை வேலை சொகுசாய் செய்கிறோம். இந்த பாண்டவர்களில்,

தருமன் Onsite -இல் தாய்நாட்டை விட்டு வனவாசம் இருக்கிறார்.
அர்ஜுனன் எப்போதும் அடுத்த வீட்டு ஆண்டிக்கு அம்பு விட்டு கொண்டிருப்பார். தினமும் செல்லும் ஜிம்மிலும் அம்புகளின் அட்டகாசம் தானாம்.
பீமருக்கு பீட்சா என்றால் பெரும் இஷ்டம். உருளை கிழங்கில் பண்ணிய அயிட்டம் என்றால் சாப்பிட்டு உருண்டு கிடப்பார்.
நகுலன் அனுஷ்காவின் இடுப்பை பற்றியே அதிகம் சிந்தித்துக் கொண்டிருப்பார். "சுத்தம் சோறு போடும்" என்ற பழமொழியில் அவருக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை.
சகாதேவன் சனிக்கிழமை ஆனால் டாஸ்மாக்கில் சரக்கடித்து விட்டு குப்புறப் படுத்து விடுவார்.



தன் மகளின் குடும்பம் குடித்தனம் வரப்போகிறது என்று வீட்டு ஓனர் இணங்கி கேட்டு கொண்டதால் இப்போது இருக்கும் வீட்டை காலி பண்ண சம்மதித்து விட்டோம்.

வாடகைக்கு அடுத்த வீடு தேடும் போது தான் தெரிந்தது சென்னையில் காலி வீடுகளை விட, வீட்டு புரோக்கர்கள் அதிகம் என்று. நாங்கள் சுலேகா போன்ற வெப் சைட்டுகளில் உலவி புரோக்கர் உதவி நாடாமல் வீட்டை பிடிக்க முயற்சி செய்தோம். Owner என்று search செய்து பொன் பண்ணினால், மறுமுனையில்

"சொல்லுங்க சார் நான் வீட்டு புரோக்கர் பேசறேன்".

"அட நீங்களா?" நயன்தாராவிடம் பேசியது போல் ஒரே இன்ப அதிர்ச்சியில் நான்.

போங்கடா! பொறம்போக்குகளா!

நிறைய ப்ரோக்கர்கள் Owner என்ற பெயரில் ரெஜிஸ்டர் செய்து வைத்திருக்கிறார்கள். வீடு பார்த்து கொடுப்பதற்கு அவர்கள் சுலபமாய் கேட்பது ஒரு மாத வாடகை. நானும் புரோக்கர் வேலையை பகுதி நேரமாக செய்யலாமா என்று தீவிரமாக யோசித்து வருகிறேன்.

டூவீலர் எடுத்துச் சென்று வீடு வீடாக Tolet போர்டு பார்த்து தேடலாம் என்றால், ஒவ்வொரு வீட்டின் கேட்டிலும் எண்ணற்ற "No Parking" மற்றும் "Contact for Plumper Service" விளம்பர பலகைகள் அடித்துபிடித்துக் கொண்டு இடம் பிடித்துள்ளன. இதற்குள் Tolet போர்டை தேடி கண்டு பிடிப்பது, பத்து வருடத்திருக்கு முன் பத்தாம் வகுப்பு ரிசல்ட்டை தமிழ் நாளிதழில் கண்டு பிடிப்பது போல வெகு சிரமமான விசயமாய் இருக்கிறது.

எப்படியாவது வீடு மாற்றியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்ததால் ஆசை ஆசையாய் புரோக்கர்களையும் நாடினோம். மாமுல் போலீஸ்காரர்கள் போல ப்ரோக்கர்கள் ஒவ்வொருவருக்கும் தனி தனி ஏரியா இருக்கின்றது. நாம் ஒருவரிடம் வாடகைக்கு வீடு வேண்டும் என்று கேட்டால், அவர் நம்மை இன்னொருவரிடம் அழைத்து செல்கிறார். அந்த இன்னொருவர், இன்னொருவரிடம் பேசி (குழப்பமா இருக்கா?) கடைசியாக வீட்டையும் ஓனரையும் கண்ணில் காண்பிக்கிறார்கள். அது கிட்டதட்ட கேங்க்ஸ்டர் படங்களில் ஒவ்வொரு அல்லக்கையையும் பார்த்து, பேசி முன்னேறி கடைசியில் வில்லன் தாதாவை சந்திப்பது போல் உள்ளது.

வீட்டு ஓனர்களும் வில்லன்களை போன்றே பேசியும், கேள்வி கேட்டும் பயமுறுத்துகிறார்கள். நானெல்லாம் என்ஜீனியரிங் நுழைவு தேர்வில் கூட ஆப்சன் (Option) உள்ள கேள்விக்கு மட்டுமே பதில் எழுதினேன். அதுவும் கணிதத்தில் உள்ள Probability என்பதை உபயோகித்துதான். Probability எனக்கு அருமையாக வரும் என்று நினைத்து விடாதிர்கள். Probability -க்கும் பென்சில் ரப்பர் தான் (dice) பேருதவியாய் இருந்தது. குழப்பம் வேண்டாம், நான் தருமனில்லை.


ஒரு வீட்டை வைத்திருந்தால், என்ன ஒரு ஆணவம்?
அதிலும் பேச்சுலர்கள் என்றால் மரியாதை அதிகம் கொடுத்து பேசுகிறார்கள்.

"எத்தனை பேரு?" (நாங்க என்ன அதுக்கா(சாப்பிடறதுக்கு) வர்றோம்?

"எந்த கம்பனில வேலை செய்றீங்க?" (மன்னாரன் கம்பனின்னு சொன்னா ஒத்துக்குவீங்களா? அதிலும் MNC கம்பனி என்று சொன்னால் தான் மதிப்பு.)

"நான்வெஜ் சாப்பிடுவீங்களா?" (இல்லைங்க சார்! நான்வெஜ் ஜோக் மட்டும் சொல்லுவேன்)

எல்லாத்துக்கும் பதில் சொல்லிவிட்டு வாடகை எவ்வளவு என்று கேட்டால், ஏலம் விடுவது போல பனிரெண்டாயிரம், பதினைந்தாயிரம், இருபதாயிரம். வாரணம் ஆயிரம் அளவுக்கு பயமுறுத்துகிறார்கள். வேலை இல்லாதவர்கள் தங்க வீடு தேட வேண்டும் என்றால், ஹோம் லோன் மாதிரி "Home Rent Loan" என்ற ஒன்றை வங்கிகள் அறிமுகப் படுத்த வேண்டும்.




இங்கு எனக்கு வேறு ஒரு சிந்தனையும் அடிமனதில் இருந்தது. இந்த பசங்களோடு எத்தனை நாள் தான் தங்குவது?

Sharing with Girls!

அமெரிக்காவில் உள்ளது போல் பெண்களோடு ரூம் ஷேர் பண்ணி தங்க முடியுமா என்றொரு நப்பாசை. வெப் சைட்டுகளில் தேடி பார்த்தால், "We need two female roommates to share our room" என்று அண்டர்லைன் செய்து விளம்பரம் கொடுத்து இருந்தார்கள் இந்திய கலாச்சாரம் கடைபிடிக்கும் பெண்கள். இந்த ஜென்மத்தில் கனவில் கூட இது நடக்காது. அடுத்த ஜென்மத்துல நாயாய் பிறக்க வைத்தாலும் அமெரிக்காவில் பிறக்க வை கடவுளே!

புரோக்கரை கூட்டிட்டு போய் வீட்டை பார்த்தாலும், ஆளாளுக்கு சொல்லும் ஒரு காரணத்தால் அந்த வீடு பிடிப்பதில்லை.

"தண்ணி சரி இல்லை" (ரெகுலரா டாஸ்மாக் போகிற நானே அமைதியா இருக்கேன்)

"நடக்க ரொம்ப தூரமா இருக்கு" (காண்டாமிருகம் பின்னாடி துரத்திட்டு வருதுன்னு நினைச்சிட்டு ஓடுங்க. தூரம் தெரியாது.)

"ஏரியா பசுமையாவே இல்லை" (சென்னையில் சுற்றி கொண்டிருக்கிற எருமை மாடே இதை பற்றி கவலை படுவதில்லை என்று சொன்னால், பசுமை=பிகர்கள் என்று அர்த்தம் சொல்கிறான் அவன்)

"வீட்டு ஓனருக்கு வயசுக்கு வந்த பொண்ணு இல்லை" (வயசுக்கு வந்தா நீ குடிசை கட்ட போறியா? வீட்டு ஓனருக்கு பொண்ணு இருந்தா, கரெக்ட் பண்ணி வீட்டோட செட்டில் ஆகிடலாம் என்கிற அல்ப கனவு.)


மொத்தத்தில் ஐந்து பேருக்கும் ஒத்து போகிற பாஞ்சாலி மாதிரி ஒரு வீடு வேணும். அது போல ஒரு வீடு கிடைக்க பொறுமை மிக அவசியம். சத்ய ஜித்ரே 1957 -இல் இயக்கிய "பதர் பாஞ்சாலி" (Pathar Panchali) என்ற பெங்காலி படத்தை உட்கார்ந்து நான்கு முறை பார்த்தால் அந்த பொறுமை நமக்கு கிட்டலாம்.



May 4, 2011

நாளை கண்டிப்பாக ஒரு முத்தம்




 
இந்த ஐ.பி.எல். போட்டிகளில் பத்து அணிகள் மற்றும் குறைந்த பட்சம் தினம் ஒரு போட்டி இருப்பது சற்றே பார்ப்பவர்களை சோர்வு அடைய செய்தாலும்,  ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலன்ஜர் அணிகள் விளையாடும் போட்டிகள் மட்டும் வெகு சுவாரஸ்யமாக இருக்கின்றன. ஷேன் வார்னேவும், சித்தார்த் மல்லையாவும் தங்கள் அணிகள் வெற்றி பெற்றவுடன் தத்தம் காதலிகளுக்கு கொடுக்கும் ஆவேச முத்தம் தான் காரணம். இது தான் உண்மையான Post Match Presentation. அதனால் Post Match Presentation இல் சிறந்த முத்தம் கொடுப்பவர்களுக்கு, Kisser of the Match அவார்ட் ஒன்று கொடுப்பது சரியானதே. என்ன ஒரு கொடுமை இந்தியாவில்? பணக்கார சித்தார்த் மல்லையாவுக்கு கூட தன் காதலிக்கு பொது இடத்தில் முத்தம் கொடுக்க ஒரு காரணம் வேண்டி உள்ளது. அப்போ, ஏழை காதலர்கள் எம்மாத்திரம்? இங்கே நான் பொது இடம் என்று குறிப்பிடுவது உதட்டை அல்ல. என்னதான் இவர்களின் அணி வீரர்கள் ஒற்றுமையாய் விளையாடி வெற்றி பெற்றாலும், இவர்கள் இதழ்கள் மட்டும் அவ்வப்போது ஆவேசமாய் சண்டை போட்டு கொள்கின்றன.



நாளை நடைபெறும் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு நீங்கள் சென்றால், டிக்கெட் வாங்கிய காசுக்கு கண்டிப்பாக ஒரு முத்தம் பார்க்கலாம். இரு அணிகளும் Points Table இல் முறையே ஐந்து மற்றும் ஆறாவதாக இருக்கின்றன காரணத்தால் நாளை ஏதோ இரு உதடுகளுக்கு கடும் சண்டை நடை பெறும் என பலத்த எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது.




ப்ரீத்தி ஜிந்தா தந்த முத்தம் - ஆபாயில்

எனக்கு இரவில் சீக்கிரம் உறங்க செல்வதும் காலையில் சீக்கிரம் எழுவதும் மிக இயலாத காரியம். இங்கு (இந்தியாவில்) நான் தினமும் எழுவதற்கு முன் ஐரோப்பா கண்டமே எழுந்து பரபரப்பாய் வேலை பார்த்து கொண்டு இருக்கும். இரவில் பருவப் பிரச்சனைகளால் என்னால் எளிதில் உறங்க முடிவதில்லை. தப்பாக எண்ண வேண்டாம். இது வாலிப பருவ கோளாறு இல்லை, கோடைப் பருவம். அதிலும் பகலில் சென்னை வெயில் "என் உச்சி மண்டையில சுர்ருங்குது". பஞ்சையும் நெருப்பையும் பக்கத்தில் வைக்க வேண்டியதில்லை. பஞ்சை மட்டும் வைத்தால் போதும். குபீரென்று பற்றி எரியும்.

தமிழ்நாட்டில் பரவலாக மின்வெட்டு இருப்பதால் மக்களுக்கு எந்நேரமும் வியர்வை குளியல் தான். மிக்சி, கிரைண்டர், ஆடு மாடு பன்றி இவற்றிற்கு பதிலாக எந்த ஒரு கட்சியாவது கடந்த தேர்தல் அறிக்கையில் இலவசமாய் ஏசி கொடுப்பதாய் சொல்லியிருந்தால் மக்களிடம் அது வரவேற்ப்பை பெற்றிருக்கும். ஒருநாள் தற்செயலாய் என் நண்பனிடம் இன்டர்நெட் சாட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது, புல்ஷிட்(bullshit) என்று திட்டிவிட்டான். அவனிடம் சொன்னேன் "தயவு செய்து புல்ஷிட் பற்றி கேவலமாய் பேசாதே. ஒருவேளை இந்த தேர்தலில் ஜெயலலிதா வென்று முதல்வராகி, எனக்கு ஒரு பசுமாடு இலவசமாய் கிடைத்தால் அதன் சாணத்தை நான் தான் அள்ளவேண்டும்"





இப்போதெல்லாம் தினமும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதால், கனவிலும் ஐ.பி.எல். வந்து தொலைக்கிறது. அப்படிதான் ஒரு நாளில் மூன்று கனவுகள் தொடர்ச்சியாக வந்தது. முதல் கனவில் நான் பஞ்சாப் அணிக்காக விளையாடுவது போலவும், நான் சிறப்பாய் விளையாடியதற்க்காக ப்ரீத்தி ஜிந்தா அவர்கள் என்னை கட்டி பிடித்து முத்த மழையில் நனைப்பது போலவும் ஒரு அருமையான கனவு (ப்ரீத்தி "ஜிந்தாபாத்"). அதில் சிறந்த ஆட்டகாரருக்கான பரிசாக எனக்கு ஒரு ஸ்போர்ட்ஸ் பைக்கும், அதிக விலையில் விற்பதால், அதில் நிரப்பி ஓட்ட நூறு லிட்டர் பெட்ரோலும் கொடுக்கிறார்கள்.

இரண்டாவது கனவில் நான் ராஜஸ்தான் அணிக்காக விளையாடுகிறேன். எதிர்பார்த்ததை போல சிச்சரும் போருமாக விளாசுகிறேன். அரங்கம் அதிர மக்கள் என் பெயரை வாய் பிளந்து கூவி கொண்டு இருக்கிறார்கள். அந்த கூட்டத்தில் ஒரு பெண் தன் அண்டர்வேருக்கு சற்று மேலாக என் பெயரை பச்சை குத்தி இருந்ததை டிவி கேமரா போகஸ் பண்ண, அரங்கத்தில் உள்ள பெரிய திரையில் மக்கள் அதை கண்டு மகிழ்ந்தார்கள். ராஜஸ்தான் அணியை வெற்றிக்கு கொண்டு சென்றதால் ஷில்பா ஷெட்டியும் என்னை முத்த மழையில் முக்கினார். ஆனால் மூன்றாவது கனவு ஆரம்பித்து சிறிது நேரத்திலே திடீரென்று கலைந்து வந்துவிட்டது. அந்த கனவில் மும்பை அணிக்காக அட்டகாசமாய் விளையாடி கொண்டிருந்தேன்.









விழிப்பு வந்து அதற்கு பிறகு தூங்க முடியவில்லை. காலை ஆறு மணி இருக்கும். பல் துலக்கி விட்டு வெளியே வந்து கடையில் தேநீர் அருந்திவிட்டு அப்படியே நடந்தேன் கொஞ்ச தூரம். மக்கள் எல்லோரும் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தார்கள். கடைக் காரர்கள் மார்கெட்டில் இருந்து வாங்கிய காய்கறி மூட்டையை சுமந்து சென்று கொண்டிருந்தார்கள். பேப்பர் போடும் பையன் ஒருவன் மிதிவண்டியை வேகமாய் மிதித்து சென்று கொண்டிருந்தான். ஒரு ஏழை தாத்தா சாலை ஓரம் உள்ள குப்பையை கலைத்து வேண்டியதை மட்டும் பொறுக்கி கொண்டிருந்தார். குப்பைதானே அது அங்கே தானே கிடக்க போகிறது யார் எடுக்கப் போகிறார்கள்? என்று நினைத்தால், நாம் செல்வதற்குள் வேறு யாரோ பொறுக்கி சென்றிப்பார்கள். காலை நேரம் எவ்வளவு முக்கியமானது என்று இவர்களுக்கு மட்டுமே தெரியும். நடந்து சென்று கொண்டிருக்கும் போது கீழே அடிபட்டு இறந்து கிடந்த ஒரு பெருச்சாளியை பார்த்தேன். அதை பார்த்த போது நாட்டில் நிறைய ஊழல் பெருச்சாளிகள் உயிருடன் உண்டு கொழுத்து சுற்றி வருவது என் நினைவுக்கு வந்தது.

 
னிதர்களாய் பிறப்பது அரிது என்று ஔவையார் பாடியிருக்கிறார். ஆனால் மனிதனாய் வாழ்வது மிக அரிதாய் படுகிறது. ஆளும் வர்க்கமும், பணக்காரர்களும் மட்டுமே தங்களின் அரிதான மானிட பிறப்பை சிறப்பாக பயன்படுத்துகிறார்கள் என்றே தோன்றுகிறது. நம்மூர் அரசியல்வாதிகள், எப்போதும் பரபரப்பாய் ஊழல் செய்வார்கள் அல்லது அறிக்கை விடுவார்கள். அமைச்சரோ முதல் அமைச்சரோ அவசர அவசரமாய் ஊழல் செய்ய சாலையில் செல்லும் போது நாம் கடுமையான ட்ராபிக்கில் நாம் அவதி பட்டு அவர்கள் செல்ல வழிகொடுக்க வேண்டும். டாக்டர் அன்புமணி அவர்கள் கேப்டன் தோனி இனி மதுபான விளம்பரத்தில் நடிக்க கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிகம் காசு கொடுத்தால் தோனி அவர்கள் வைக்கிங் பனியன் ஜட்டி விளம்பரத்திலும் நடிப்பார். மேலும் கலைஞர் விட்டு கொடுத்தால் கலைஞரின் காப்பி கொட்டை (காப்பீட்டு திட்டம்) விளம்பரத்தில் கூட நடிப்பார்.


ழலுக்கு எதிராக அண்ணா ஹசாரே நடத்தும் போராட்டத்தை வினவு போன்ற சில கம்யூனிச(?) வலைப்பூக்களும் கம்யூனிச வாதிகளும், இதை நடுத்தர வர்க்கத்தின் நோகாமல் நொங்கு தின்னும் போராட்டம் என்றும், மொன்னையான மெழுகுவர்த்தி போராட்டம் என்றும் தாழ்வாக பேசுகிறார்கள். ஐ.டி கம்பனியில் வேலை செய்யும் மகான்கள் பொழுது போக்காய் இதில் பங்கு கொண்டார்கள் என்று எள்ளல் பேசினார்கள். எதுவுமே ஆரம்பித்தவுடன் மிகச் சரியாய் வந்துவிடாது. தனக்கென்று விளைவுகள் அதிகமானால் மட்டுமே தேச பக்தியும் சரி, விளையாட்டும் சரி தீவிரம் அடையும். கடந்த வாரம் கூட IAC (India Against Corruption) -யின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் மெரீனா கடற்கரையில் நடந்தது. நிறைய சிறுவ சிறுமியர்கள் முதல் அனைத்து வயதினரும் ஆயிர கணக்கில் மக்கள் கலந்து கொண்டார்கள். ஒவ்வொரு போராட்டத்துக்கும் மக்கள் எண்ணிக்கை அதிகம் ஆகி கொண்டே போகிறது. சில பேர் அவர்களுக்கு வேலை ஏதும் இல்லாத போதும், தூக்கம் கெடாமல் உள்ள போதும் மட்டுமே இது போன்ற போராட்டங்களில் பங்கு பெற நினைக்கிறார்கள். அது போன்ற சில பேர் என் ரூமிலும் காணப்பட்டார்கள்.

கடற்கரை சாலையில் இன்னும் நிறைய மக்கள் நடந்து கொண்டும் ஓடி கொண்டும் வேடிக்கை பார்த்த வண்ணம் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் இந்த நாட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் இருக்கலாம். அல்லது ஊழலில் பங்கு இருக்கும் அரசியல்வாதியின் குடும்பமாய் இருக்கலாம். நிறைய அங்கிள்களும் ஆண்டிகளும் நாட்டின் பிரச்சினையை விட தங்கள் தொப்பையின் பிரச்சினையையே பெரிதாக எண்ணி அதை தீர்க்க ஓடி கொண்டிருந்தார்கள்.

அதில் சில பணக்கார அங்கிள்கள் விதவிதமான வெளிநாட்டு நாய்களோடு ஓடிக் கொண்டிருந்தார்கள். அதில் ஒரு நாய் புசுபுசுவென மயிர்களோடு நாக்கை தொங்கப் போட்டு கொண்டு நிறைய சலவாய் ஊற்றி கொண்டே சென்று கொண்டிருந்தது. அதன் தலையில் மட்டும் ஒரு பக்கெட்டை மாட்டி விட்டிருந்தால், அது சிறிது தூரம் செல்வதற்க்குள்ளே பக்கெட் நிரம்பி வழிந்திருக்கும். ஏன் இவர்கள் நாய்களோடு ஓடுகிறார்கள்? என்று சிந்தித்தேன். ஒருவேளை தனியாக ஓடினால் சோம்பேறித்தனப்பட்டு நின்று விடுவார்கள். அதனால் கட்ட வண்டியை போல அவர்களை நிற்காமல் இழுத்துக் கொண்டு ஓடவே நாய்கள் அவசியம் ஆகிறது. ஆனால் அதில் ஒரு நாய்க்கு கூட தொப்பை இல்லை. 


னக்கு பொதுவாகவே அறிவுரை சொல்லும் "உன்னால் முடியும் தம்பி" (You Can Win, Who Moved My Cheese?) போன்ற மோட்டிவேசன் புத்தகங்களை படிக்கவே பிடிப்பதில்லை. அப்படியே நீங்கள் படித்தாலும் கற்பூரம் மாதிரி கொஞ்ச நேரத்துக்கு தலை முதல் பாதம் வரை உற்சாகம் கொழுந்து விட்டு எரியும். அப்புறம் கொஞ்ச நேரத்தில் அணைந்து விடும். ஆனால் ஊருக்கு உபதேசம் பண்ண எனக்கு நிறைய பிடிக்கும். ;-)


ப்பானில் நிலநடுக்கம் வந்ததிற்கு நம்மில் நிறைய பேர் அனுதாபம் சொல்லியிருப்போம். அவர்கள் அத்துணை கஷ்டத்திலும் யாரிடமும் உதவி கோரவில்லை. அதிகபடியான உழைப்பே, அவர்களுக்கு அதிகமான பணத்தையும் கொடுக்கும். இந்தியா தன்னிடம் எது அதிகம் உள்ளதோ அதை அந்த நாட்டிற்கு தரலாம். அப்படி பார்த்தால் பணம், பொருளை தவிர நம்மால் அவர்களுக்கு கொடுக்க முடிவது எதுவென்றால் மக்கள் தொகை மட்டுமே. அதுபோல நிலநடுக்கம் ஜப்பானிற்கு பதிலாக இந்தியாவில் வந்திருக்கலாம். நிலநடுக்கத்தில் இறந்தாலும் ஜப்பானியனாக இறக்க வேண்டும். ஆனால் டால்பின்கள் கொல்லப்படும் போது மனிதர்கள் இயற்கையால் சாவது தப்பில்லை. உயிர் என்பது பொதுவானது.



கர் புறத்தில் காணப்படும் அப்பார்ட்மென்ட் புறாக்கள் எங்கு போய் முட்டையிடும் என்று வெகு நாளாய் யோசித்திருக்கிறேன். போன மாதம் ஒருநாள் காலையில் எழுந்து பால்கனிக்கு சென்று பார்த்த போது அங்கு பயன்படுத்தப் படாத துடைப்பம் ஒன்றில் ஒரு புறா இரண்டு முட்டையை விட்டு  என் சந்தேகத்தை தீர்த்தது. அதுவும் சென்னை போன்ற மரங்கள் இல்லாத ஊரில் மனிதர்கள் இல்லாத வீடும், அதிகம் புழங்காத பால்கனியும் மட்டுமே அதற்கு குஞ்சு பொரிக்கும் இடங்கள்.



நானும் என் கேமராவில் அந்த புறா முட்டை விட்டதில் இருந்து, குஞ்சு பொரித்து, குஞ்சு பெரிதாகி பறந்து சென்றது வரை சுட்டு தள்ளினேன். ஆனால் அது போன பிறகும் அந்த புறா குஞ்சுகள் என் மனதை விட்டு அகலவே இல்லை. ஏனென்றால் அவைகள் பால்கனி முழுதும் அவ்வளவு அசிங்கம் செய்து விட்டு போயிருந்தது. சரி முடிந்தது இனி ஏதும் பிரச்சனை இல்லை என்று நினைத்திருந்தேன். சரியாக ஒரு வாரம் கழித்து அதே இடத்தில இன்னும் இரண்டு முட்டைகள் உதித்திருந்தது. என்ன கொடுமைடா என்று திரும்பி மறுபுறம் பார்த்தேன். அங்கு ஒரு முட்டை சற்று பெரிய அளவில் புறா முட்டை போல் அல்லாமல் தனியாக அனாதையாக கிடந்தது. அது காக்கா முட்டையோ இல்லை குயில் முட்டையாகவோ இருக்கலாம் என்பது என் சந்தேகம்.  உடனே நான் தனியே கிடந்த பெரிய முட்டையை எடுத்து அந்த இரண்டு சின்ன முட்டையோடு சேர்த்து வைத்தேன்.

இதற்கு முன்னால் முட்டையிட்டு குஞ்சு பொரித்த பெண் புறா, மற்ற கர்ப்பிணி புறாக்களிடம் சொல்லி இருக்கலாம், அந்த வீட்டுகாரர் ரொம்பபபப நல்லவர் என்று. அதற்கு பிறகு அந்த புறா மூன்று முட்டையையும் சேர்த்து அடைகாத்து வந்தது. இப்போது அந்த இரண்டு சின்ன முட்டைகள் உடைந்து குஞ்சு வெளிவந்து விட்டது, அந்த பெரிய முட்டையை தவிர. என் நண்பன் வினோத்துக்கு முட்டை வறுவல் என்றால் மிகவும் இஷ்டம். குளித்து முடித்தவுடன் பால்கனிக்கு சென்று உள்ளாடையை காயப் போடும்போதெல்லாம் அந்த பெரிய முட்டையை ஒற்றை கண்ணாலே பார்ப்பான். நானும் அந்த பெரிய முட்டை எப்போது உடைந்து எந்த குஞ்சு வெளிவரும் என்று மிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அந்த பெண் புறாவின் துணையும் கூட அவ்வாறு எதிர்பார்த்துக் கொண்டிருக்கலாம். ஆண்டவா! தேவையில்லாமல் சந்தேகத்தால் ஒரு குடும்பம் பிரிய நான் காரணமாகி விடக் கூடாது.





பாமாவுக்கும் ஒசாமாவுக்கும் நல்ல பெயர் பொருத்தம் இருந்திருக்க வேண்டும். இல்லை என்றால் ஒபமா ஆட்சியில் ஒசாமா சாவாரா? ஆனால் ஒசாமாவுக்கு கடந்த சனி பெயர்ச்சி பலன்கள் சரியாக இல்லை என்று கணித்து சொல்லியிருக்க, தமிழ் நாளிதளின் ஆஸ்தான ஜோதிடர் யாரையாவது ஒசாமா அருகில் வைத்திருந்திருக்கலாம். இந்திய பிரதமர் மண் மோகன் சிங்  ஒசாமாவை கொன்ற அமெரிக்காவின் செயலுக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார். இவருக்கு தெரிந்தது பாராட்டு, கண்டனம் மற்றும் கவலை தெரிவிப்பது மட்டுமே. மும்பை தாக்குதலில் சிறையில் உள்ள கசாப்புக்கு இந்திய அரசாங்கம் சிக்கன் பிரியாணி கொடுத்து செல்லம் கொஞ்சி கொண்டிருக்கிறது. சிக்கன் பிரியாணியில் லெக் பீஸ் குறைவாய் இருக்கிறதென்று கசாப் புகார் சொல்லி இருப்பதாய் நம்பத் தாகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



Apr 20, 2011

நகுலன் என்றொரு அழகன்

என் அக்கா பையனுக்கு,



கன்னி ராசிதான்
இந்த கண்ணனுக்கு
கணக்கில்லை
பின்தொடரும் இளங் கன்னிகளுக்கு.


வேட்டையாடுவதில் மாவீரன்
இவனை கண்டாலே
நடுநடுங்கும்
சிங்கம் புலி கரடி (பொம்மை)கள்.


இவன் கை பட்டு
கவிழவே காத்திருக்கின்றன
சரியாக மூடப்படாத
பலசரக்கு டப்பாக்கள்.

நிற்கவே நேரம் இருக்காது
எந்நேரமும் இவன் பின்னாலேயே
ஓட வைத்துக் கொண்டிருப்பான்
பாட்டியையும் தாத்தாவையும்.

பார்க்கும் அநேக நேரம் 
பூனையை இவன் துரத்திக் கொண்டிருப்பான்.
சில நேரம் பூனை 
இவனை துரத்திக் கொண்டிருக்கும்.





Related post :  The Good Stranger: கார்த்திகா தீபா வாழ்த்துக்கள்

 


Mar 18, 2011

கலைஞரின் கதாநாயகி, ஜெயாவின் கவர்ச்சி நாயகி - ஆபாயில்

என்னுடன் படித்த நண்பர்களில் நிறைய பேருக்கு திருமணம் ஆகி தண்டனை அனுபவித்து வருகிறார்கள். இன்னும் சிலருக்கு தப்பிக்க சிறிது கால அவகாசம் கொடுக்கப் பட்டுள்ளது. நான் இன்னும் எதை பற்றியும் கவலை படாமல் ஒரு நாயை போல தெருக்களில் உலா வந்து கொண்டிருக்கிறேன். கடந்த மாதம் மட்டும் மூவருக்கும் மேலாக தண்டனை உறுதி செய்யப் பட்டு வீட்டு காவலில் வைக்கப் பட்டுள்ளார்கள். நாமும் அப்போது அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு எஞ்சிய நாட்கள் முழுதும் அவர்கள் முடிந்த வரை சந்தோசமாக வாழுமாறு வாழ்த்த வேண்டிய நிர்பந்தம் உள்ளது. தன் கஷ்டங்களில் பங்கு கொள்கிறவன் தான் உண்மையான நண்பன். அவ்வாறு தன்னுடைய திருமணதிற்கு யார் வருகிறார்களோ என்பதை வைத்து தான் உண்மையான நண்பன் யார் என்பதையும் முடிவு செய்யப் படுகிறது. அதனால் நானும் முடிந்தவரை எல்லோருக்கும் உண்மையாகவே இருக்க விரும்புகிறேன்... ;-)

இன்றும் ஒருவனது திருமண வரவேற்பு நிகழ்சிக்காக புறப்படுகிறேன். அவன் பெயர் "பொய் புலவர் பிரகாஷ்". இவனுக்கு அரிச்சந்திரன் யார்? அவர் எப்படி பட்டவர்? என்ற வரலாறு துளியும் தெரியாது. அந்த அளவுக்கு இவனுக்கு உண்மைக்கும் நெருங்க முடியாத தூரம். ஒரு சின்ன உதாரணம். இவனுக்காக காத்திருக்கும் போது, மொபைல் போனில் அழைத்து "மச்சி எங்கேடா வந்துட்டு இருக்க?" என்று கேட்டால், அவங்க வீட்டு பாத்ரூமில் "இருந்து" கொண்டு பத்து நிமிஷத்தில் வந்து விடுவதாக கூச்சப் படாமல் அள்ளி விடுவான்.

ஒவ்வொரு வாரமும் விஜய் டிவியில் "அது, இது, எது?" என்று ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்புவார்கள். அதில் கடைசி சுற்றில், நிகழ்ச்சியில் பங்கேற்பவர் கதை ஒன்று சொல்ல வேண்டும். அதில் மூன்று பொய்களை, கதை சொல்லுபவர் திணித்து சொல்லியாக வேண்டும். இன்னொருவர் அவர் சொன்னதில் மூன்று பொய்யையும் கண்டுபிடித்து கூற வேண்டும். அதை போல இவனை ஒரு கதை சொல்ல சொல்லி, அதில் ஒரு உண்மையை கண்டு பிடிக்க சொன்னால், பெரும் சவாலான விஷயம்.

இவனை பற்றி முன்னரே ஒரு இடுகையில் எழுதி உள்ளேன்.

ஆனால் ஒரு நல்ல விஷயம் இவனிடம் உள்ளது. எந்த ஒரு அரசியல்வாதியிடம் கூட காணப்படாத மதசார்பற்ற தன்மை இவனிடம் மட்டுமே உள்ளது. எவ்வாறு எனில், பொழுது போக்காய் பல பெண்களிடம் பேசுவான். அப்படி புதிதாக ஒரு பெண்ணிடம் பேசும் போது ஏதோ இந்திய ரகசிய உளவு துறையில் வேலை செய்வது போல உண்மையான பெயரை மட்டும் சொல்லவே மாட்டான். அவ்வபோது அவன் கண்களுக்கு தட்டுப் படுகிற பெயரை தன் பெயராக சொல்லி விடுவான்.

சில சமயம் மகேஷ்.
சில சமயம் ஜேம்ஸ்.

ஒரு நாள் நானும் அவனும் பாய் கடையில் பிரியாணி சாப்பிட்டு கொண்டிருந்தோம். அப்போது அவனுக்கு ஒரு பெண்ணிடம் இருந்து அழைப்பு வர, தன் பெயரை காதர் பாய் என்று கடையின் பெயர் பலகையை படித்து அறிமுக படுத்தி கொண்டான். இவனுக்கு மத பாகுபாடு என்பது துளியும் இல்லை என்பதை அந்த மதிய நாளில் லெக் பீசை கடித்துக் கொண்டே உணர்ந்தேன். இவன் கல்யாண அழைப்பிதழ் கொடுக்கும் வரை, நாங்களும் இவன் பெயர் பிரகாஷ் என்ற அனுமானத்தில் மட்டுமே இருந்தோம்.

லெக் பீசை பற்றி பேசும் போது தான் இன்னொன்றும் ஞாபகம் வருகிறது. நம்மில் நிறைய பேர் பெண்களை பற்றி பேசும் போது பிகர் என்று தான் குறிப்பிடுவோம். ஆனால் இவன் "பீஸ்" என்றே குறிப்பிடுவான். அப்போ பிரியாணில இருக்கிறது என்ன பிகரா?

ஒரு நாள் அவனுடன் வழியில் சென்று கொண்டிருக்கும் போது "இந்த பீசு எப்படி இருக்கு?" என்று கை காட்டினான். திரும்பி பார்த்தால் அங்கே ஒரு பெண் சிமெண்ட் காரை சட்டியை தூக்கி கொண்டு சென்று கொண்டிருந்தாள். ஏழை பணக்காரர்கள் பாகு பாடும் இவனுக்கு பார்க்க தெரியவில்லை.

இவனுக்கு இன்னொரு பெயரும் உண்டு. அது "குடி பிரகாஷ்". பெயர் காரணம் தேவையில்லை என்று நினைக்கிறேன். நிறைய நண்பர்கள் கூப்பிடும் பெயரும் இதுவே. தினமும் குடிப்பதாய் அவனே சொல்லுவான். ஆனால் அவனுக்கு ஒரு டூவீலர் மட்டும் வாங்க காசே இருந்ததில்லை. ஒரு பன்னிகுட்டி உருவ உண்டியல் வாங்கி தினமும் குடிக்கும் காசை அதில் போட்டு வைத்திருந்தால் எளிதாய் ஒரு டூவீலர் வாங்கியிருக்கலாம்.

இவன் எங்கு பயணம் செய்தாலும் கூடவே ஒரு லேப்டாப் Bag-ம்  வைத்திருப்பான். உள்ளே லேப் டாப் இருக்காது. நிறைய கோக், பெப்சி பாட்டில்களும், தண்ணீர் பாட்டில்களும் இருக்கும். ஆச்சாரம் உள்ளவர்கள் ஒரு அவசரத்துக்கு கூட இவனிடம் தண்ணி வாங்கி குடிக்க முடியாது. ஏனென்றால் எல்லாம் மிக்சிங்கோடு(Mixing) இருக்கும். எவ்வளவு தான் குடித்தாலும் மிகவும் நிதானமாக இருப்பான். சிறிதும் உளறவே மாட்டான். ஆனாலும் குடிக்காத நாட்களில் மட்டும் உளறுவான்.



ந்த உலக கோப்பையை ஆஸ்திரேலியா அல்லது பாகிஸ்தான் தான் வெல்லும் என்பது என் அனுமானமாக இருந்தது. இப்போது ஆஸ்திரேலியா வெளியேறி விட்டது. பாகிஸ்தானிடம் தான் அரை இறுதியில் இந்தியா தோற்க வேண்டும் என்று எழுதி இருக்கலாம். ஆனால் இந்தியா அவ்வளவு எளிதாக விட்டு விடாது. இந்தியாவின் மேல் நடந்த பாராளுமன்ற தாக்குதல், மும்பை மற்றும் டெல்லி தாக்குதல் இவற்றிற்கு பதிலடியாய் அரை இறுதி போட்டியில் வென்று பலி தீர்க்கும் என்றே இந்திய குடிமக்கள் எல்லோரும் ஆவலாய் உள்ளார்கள். அப்போது தான் மும்பை குண்டு வெடிப்பில் பலியான மக்களின் ஆவிகள் எல்லாம் சாந்தி அடையும். அப்படி இந்தியா பாகிஸ்தானை வென்று உலக கோப்பையையும் வெல்லும் பட்சத்தில், நாடாளு மன்றத்தில் இந்திய வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, கசாபையும் விடுதலை செய்வார்கள். இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றத்தை எண்ணி வருத்தப்படுவதை விட கசாப்புக்கு வேறு என்ன தண்டனை மற்றும் அவமானம் இருக்க முடியும்?



து தேர்தல் காலம் என்பதால், தி.மு.க. கலை உலக வாரிசுகள் தங்கள் பட வெளியீட்டை கொஞ்ச காலம் நிறுத்தி வைத்திருந்தாலும், கலைஞர் ஒரு கதாநாயகியையும், ஒரு கதா நாயகனையும் அறிமுகப் படுத்தியிருக்கிறார். கதாநாயகி தேர்தல் அறிக்கை என்று உங்களுக்கு தெரியும். காதாநாயகன் கீழே இருக்கிறார். நடிகர் விஜயகுமார் குடும்பத்தை பின்னுக்கு தள்ளி இப்போது கலைஞரின் குடும்பம் தான் மிகப்பெரும் கலை குடும்பமாக உருவெடுத்துள்ளது. உங்க கலை ஆர்வத்துக்கு ஒரு அளவே இல்லடா.



இப்போது ஜெயலலிதா கவர்ச்சி நாயகியை வெளியிட்டு விட்டதால் கதாநாயகியை பற்றி ஏதும் சொல்லத் தேவையில்லை. 

பெண்ணை பெற்ற ஏழைகள் எல்லாம் இனி கவலை பட தேவையில்லை. கிரைண்டர், மிச்சி, பேன், நாலு கிராம் தங்கம், ஆடு, மாடு இவைகளோடு ஒரு கட்டில் மெத்தையும் கொடுத்திருந்தால் பெண்ணுக்கு கொடுக்க வேண்டிய சீர் ரெடி. கலைஞர் தாத்தாவின் கதாநாயகி, 1970 களில் வந்த கருப்பு வெள்ளை நாயகியை போல, வயது முதிர்ந்தவர்களையும், குடும்ப தலைவிகளையும் மட்டுமே பெரிதளவு கவர்ந்திருந்தது.

ஆனால் கவர்ச்சி நாயகி ஷகிலாவை போல, பள்ளி மாணவர்களில் இருந்து கிழவர்கள் வரை கவர்ந்து இழுத்து இருக்கிறது. இப்போது குடும்ப பெண்கள் கூட கவர்ச்சி நாயகியையே விரும்புகிறார்கள். பத்தாவது படிச்சிட்டு கட்டட வேலைக்கு போற என் பள்ளி பருவத்து நண்பன் கூட, இப்போ பதினொன்னாவது படிக்கலாமன்னு யோசிக்கிறான். தமிழகத்தில் செல்போன்கள் சாதரணமாகிவிட்ட காலகட்டத்தில் லேப்டாப்களும் சாதரணமாக போகின்றன.

போடுங்கம்மா ஒட்டு இரட்டை இலைய பாத்து...





வோடபோனின் சமீபத்திய இந்த விளம்பரம் என்னைய மிகவும் ரசிக்க வைத்தது.




இதோட விளம்பரத்துக்காகவே நான் வோடபோனுக்கு மாறலாமான்னு யோசிக்கிறேன். நானும் இந்த விளம்பரத்தில் வர்ற "சூப்பர்மேன் ஜூ ஜூ" மாதிரி மாறிட்டேன். டேபிள் டென்னிஸ் மட்டைக்கு பதிலாக கொசு அடிக்கும் மட்டை. தினமும் இரவு தூங்க முடியல. பயங்கர கொசு. அதனால இந்த மட்டைய எடுத்து கண்ணை மூடிக்கிட்டு, திரும்பி நின்னு, சிலசமயம் இருட்டுல கூட, எப்படி அடிச்சாலும் கொசு அடிபட்டு சாகுது.




Feb 18, 2011

வடை, பக்கோடா, போண்டா - மினி ஆபாயில் (அப்புடியே சாப்பிடுங்க)

வடை, பக்கோடா, போண்டா இந்த மூன்றிற்கும் என்ன சம்பந்தம் இருக்கு? படியுங்கள், விடை கடைசியில்.


ன்கூட தங்கி இருக்கும் வினோத் என்ற பிரெண்டுக்கும் எங்கள் அபார்ட்மெண்டு ஆண்டிகளுக்கும் "ரொம்ப நாளாக பழக்கம்" இருக்கு. எப்படி என்றால், இவன் தினமும் மெகா சீரியல் பார்க்கும் வழக்கம் கொண்டவன். கலைஞர் டிவி, ஜெயா டிவி என்ற பாகுபாடு எல்லாம் இவனுக்கு பார்க்க தெரியாது. மிகவும் அப்பாவியாய் எல்லா டிவி சீரியலையும் உட்கார்ந்து அமைதியாய் பார்த்து ரசிப்பான். அந்த ஆண்டிகள் ஏதோ ஒரு எபிசொட் பார்க்க தவறினால் இவனிடம் தான் வந்து அன்றைக்கு என்ன நடந்தது என்று கதை கேட்டு போவார்கள். அதனால் எங்கள் வீட்டிற்கு ஆண்டிகளின் படையெடுப்பு அடிக்கடி நடக்கும். "ரொம்ப நாளாக பழக்கம்" என்றதும் நீங்கள் அவனை பற்றி தப்பாக  நினைத்திருந்தால் உங்கள் தலையில் நீங்களே குட்டி கொள்ளவும்.

"ஏன்டா இவ்வளவு விரும்பி பார்க்கறியே பேசாமல் சீரியலில் நடிக்க போய்விட வேண்டியதுதான?" என்றேன் தற்செயலாய் அவனிடம். "இம், நான் ரெடி" என்றான். சீரியல் இயக்குனர்கள் அல்லது தயாரிப்பாளர்கள் யாராவது இதை படித்துக்கொண்டிருந்தால் தயவுசெய்து இவனுக்கு ஒரு வாய்ப்பை கொடுங்கள். "கொழுக் மொழுக்" என்ற அங்கிள் கேரக்டருக்கு அம்சமாக பொருந்தி வருவான்.


  
நீங்கள் பேச்சுலராக இருந்து கூட படித்த அல்லது வேலை செய்கிற பசங்களோடு தங்கி இருந்தால் "ட்ரீட் (Treat) என்கிற வார்த்தையை அதிகமாக மந்திரம் போல உங்கள் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். கடந்த வாரம் என் அக்கா பையனுக்கு என் மடியில் வைத்து மொட்டை போட்டு காது குத்தினார்கள்.

அதற்கு ட்ரீட் வைக்க சொல்லி நண்பர்கள் எனக்கு மொட்டை போட பார்த்தார்கள். "இப்போது பணம் இல்லை" என்று அடுத்த மாதம் கொடுப்பதாய் சொல்லி அவர்களுக்கு காது குத்தியுள்ளேன்.



விலைவாசி உயர்வு, ஊழல் நாடகம் இவற்றையெல்லாம் தாண்டி கவலைப்பட இப்போது இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன. கிரிக்கெட் உலக கோப்பை, தேர்தல், இலவசம். 

பரம ஏழை சச்சினுக்காக இந்திய அணி உலக கோப்பையை வெல்லுமா? 
அவரின் பட வெளியீட்டு பிரச்சனையையே தீர்க்க முடியாமல் கஷ்டபட்ட காவலன் விஜய்,  போராட்டம் நடத்தி மீனவர்களின் பிரச்சனையை தீர்ப்பாரா?
வல்லரசு விஜயகாந்த் தேர்தலில் வென்று நல்லரசு அமைப்பாரா?

அன்று ஒரு நாள் பஸ்சில் சென்று கொண்டிருந்தேன். அப்போது வெளியே ஒரு சேரி போன்ற குடிசை பகுதியில், விஜயகாந்தின் தே.தி.மு.க. கட்சியின் பெரிய சைஸ் போஸ்டர் ஒன்று ஒரு குடிசை வீட்டின் மேற்கூரையாக வைக்கப் பட்டு அவர்களை கடும் குளிரிலிருந்தும் வெயில், மழையில் இருந்தும் காப்பாற்றி கொண்டிருந்தது.

விஜயகாந்தின் விருத்தகிரி படத்தில் அடிக்கடி ஒரு வசனம் வெவ்வேறு கதா பாத்திரங்களால் பேசப் படும். 

"அரசு அதிகாரியா இருக்கும் போதே பொது மக்களுக்கு இவ்வளவு நல்லது பண்றாரே, இவருக்கு கீழே அரசாங்கம் வந்துச்சுன்னா எவ்வளவு நல்லது பண்ணுவாரு." 

அது மாதிரி, விஜயகாந்தின் கட்சி போஸ்டரே ஏழைகளை காக்கும் பொது விஜயகாந்த் ஆட்சிக்கு வந்தார்ன்னா, என்னமா காப்பாத்துவாரு! 


சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்பது எனக்கு இதுவரை ஓரளவுக்கு நல்ல அனுபவமாகவே அமைந்துள்ளது. ஆனால் கடந்த வாரம், சில வருடங்களாய் கவிதை என்ற பெயரில் ஏதோ கிறுக்கி வரும் என்னை மிகவும் வெட்கமடைய செய்தது, ரயிலில் கிறுக்கி வைக்கப்பட்டிருந்த அந்த கவிதை.


தட்டி போட்டா வடை.
அப்படியே போட்டா பக்கோடா.
உருட்டி போட்டா போண்டா.

எனக்கு ஏன் இப்படி ஒரு கவிதை எழுத தோணவில்லை.

போண்டா போச்சே!.

இந்த கவிதை படித்ததும் வடை, பக்கோடா, போண்டா இந்த மூன்றும் என் கண்முன்னே சிறிது நேரம் வந்து என் பசியை தூண்டியது. மூன்று வரிகளில் ஒரு முத்தான கவிதையை எழுதிய அந்த கவிஞர் ஏனோ கவிதைக்கு கீழே அவர் பெயரை எழுதியிருக்கவில்லை. அவருக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை "பாராட்டு" என்பதாக கூட இருக்கலாம்.

பொதுவாக கழிப்பிட சுவர்களில் உள்ளதை போன்றே ரயிலின் உட்புறத்திலும் Nithyaanantha Loves Ranjitha, Prabudeva Loves Nayan என்பது மாதிரியான கல்வெட்டு வாசகங்கள் தான் நிறைய காணப்படும். ஆனால் இதுபோன்று ஒரு தத்துவ கவிதை எழுதி இவர் அந்த இலக்கணத்தை உடைத்துவிட்டார். Hats Off  to him.

நெடுந்தூர ரயில் நிலையங்களை போல, மெட்ரோ ரயில் நிலையங்கள் அவ்வளவாக துர்நாற்றம் வீசுவதில்லை. கழிப்பிட வசதி இல்லை என்பதால். ஆனால் இன்னுமொரு பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. ரயிலில் ஏறி அமர்ந்தவுடன் பார்த்தேன் ஒரு பெண்  ஐபாட்(ipad) -ல் பாட்டு கேட்டு கொண்டு தலையையும் லேசாக காலையும் ஆட்டிக்கொண்டிருந்தாள். சில பேர் எதையும் கேட்காமல் காலை மட்டும் ஆட்டிக்கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் நானும் காலை ஆட்ட தொடங்கி விட்டேன். காரணம். கொசுக்கடி.

ஓடும் ரயிலில் பறந்து பறந்து கடிக்கின்றது. பிகர்களுக்கு எதிரே கடிக்கின்ற கொசுவை அடிக்கவும் அசிங்கமாக உள்ளது. பத்தாம், பனிரெண்டாம் போது தேர்வு வரும் போது தமிழ் தினசரி செய்தித்தாள்களில் போடுவார்கள். "தேர்வுகளில் காப்பி அடிப்பவர்களை பிடிக்க தனி பறக்கும் படை அமைக்கப் பட்டுள்ளது" என்று. இனிமேல் தயவு செய்து பறக்கும் படை என்ற வார்த்தையை அதற்கு உபயோகப் படுத்தாதிர்கள்.